Published : 17 Aug 2018 01:31 PM
Last Updated : 17 Aug 2018 01:31 PM

தொடரையும் வெல்லுங்கள் இதயங்களையும் வென்று வாருங்கள்: பாக்.தொடருக்கு முன் கேப்டன் கங்குலிக்கு ஆசி கூறிய வாஜ்பாய்

ஆஸ்திரேலியாவிற்குச் சென்று தொடரை 1-1 என்று டிரா செய்ததோடு கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் அச்சுறுத்தலையும் இந்திய அணி மேற்கொண்டு தொடரை வெற்றிகரமாக முடித்து, அடுத்து பாகிஸ்தானுக்கு கங்குலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்காகச் சென்றது.

அப்போது பாகிஸ்தானில் இந்திய வீர்ர்களான சச்சின், சேவாக், கங்குலி. திராவிட், லஷ்மன், கும்ப்ளே மீது ஒரு வழிபாட்டு மனோபாவம் நிலவியதும் ஆச்சரியமே.

அந்தப் பாகிஸ்தான் தொடர் சாத்தியமானது அப்போதைய பிரதமர் வாஜ்பாயால்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

கிரிக்கெட் மூலமாக இருநாட்டு உறவுகளும் மேம்பட வேண்டுமென்று வாஜ்பாய் மனதார விரும்பியதன் விளைவுதான் அந்தத் தொடர்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் மேலாளர் ரத்னாகர் ஷெட்டி கூறும்போது “கேப்டன் சவுரவ் கங்குலியை அழைத்து போட்டிகளை வெல்வதோடு மக்கள் இதயங்களையும் வென்று வாருங்கள்” என்று வாஜ்பாய் ஆசி கூறினார் என்றார்.

“பாகிஸ்தான் தொடருக்கு முன்பாக பிரதமர் வாஜ்பாயை அணியினர் சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் வீரர்களுடன் அவர் நேரத்தைச் செலவிட்டார். ஒவ்வொரு வீரரிடமும் தனித்தனையாகப் பேசினார்.

தோட்டத்தில் நேவி வாத்தியக் குழுவினர் தேசியக் கீதத்தை இசைத்துக் கொண்டிருந்தனர். வீரர்கள் கையெழுத்திட்ட பேட் ஒன்றை அவருக்கு நாங்கள் வழங்கினோம் அவரும் எங்களுக்கு “போட்டிகளுடன் இதயங்களையும் வெல்லுங்கள்” என்ற பொன்மொழியுடன் இந்திய அணிக்கு ஆசி கூறிய பேட்டை எங்களுக்கு அளித்தார் வாஜ்பாய்.

மேலும் கங்குலியிடம் இது முக்கியமான தொடர் கடுமையாக ஆட வேண்டும் என்று வாஜ்பாய் வலியுறுத்தியதையும் ரத்னாகர் ஷெட்டி நினைவு கூர்ந்தார்.

மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக தொடரை சாத்தியமாக்கிய வாஜ்பாய்க்கு நன்றி தெரிவித்து பாகிஸ்தான் மக்கள், ரசிகர்கள் அவரது புகைப்படத்துடன் மைதானங்களிலும் சாலைகளிலும் காத்திருந்ததை மறக்க முடியாது என்றார் ரத்னாகர் ஷெட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x