Last Updated : 14 Aug, 2018 01:33 PM

 

Published : 14 Aug 2018 01:33 PM
Last Updated : 14 Aug 2018 01:33 PM

“நான் நன்றாக பேட் செய்தும் என்னை ஏன் இந்திய அணியில் தேர்வு செய்ய மறுக்கிறார்கள்”: ஸ்ரேயாஸ் அய்யர் ஆதங்கம்

நான் சிறப்பாக பேட்செய்தபோதிலும்கூட என்னை ஏன் இந்திய சீனியர் அணியில் தேர்வு செய்ய மறுக்கிறார்கள், இது என்னுடைய ஆட்டத்திறனைப் பாதிக்கிறது என்று இந்திய ஏ அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பெற்றிருந்தார். கம்பீர் தலைமையில் டெல்லி அணி தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில், கேப்டன்ஷிப் ஸ்ரேயாஸ் அய்யருக்கு மாற்றப்பட்டது. அதன்பின் டெல்லி அணி, அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாக இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்தது. ஐபிஎல் போட்டியில் ப்ளே ஆப் சுற்றுக்கு டெல்லி அணி தகுதிபெறவிட்டாலும்கூட ஸ்ரேயாஸ் அய்யரின் கேப்டன்ஷிப்பால், கடைசிவரை அந்த அணி சிறப்பாச் செயல்பட்டது.

கேப்டன்ஷிப்பிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் யோயோ டெஸ்டில் தோல்வி அடைந்தார் என்பதற்காக அவரை இங்கிலாந்து தொடருக்கு இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யவில்லை.

அதன்பின் நடந்த யோயோ உடற்தகுதித் தேர்வில் தகுதிபெற்று இந்திய ஏ அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பெற்றார். தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமில்லாத 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை 1-0 என்று இந்திய அணி கைப்பற்றியது.

இந்தப் போட்டியின் முடிவுக்குப் பின் இந்திய ஏ அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் ஐபிஎல் போட்டிகள் முதல் உள்ளூர் போட்டிகள் வரை சிறப்பாக பேட் செய்தும், நான் இந்திய அணிக்குள் செல்ல முடியாமல் இருப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது. எத்தனை நாட்களுக்குத்தான் பொறுமையாக இருப்பது, இது மிகவும் கடினமாக இருக்கிறது.

என்னுடைய பேட்டிங் திறமையை அணி நிர்வாகத்தினர் பார்க்கட்டும், கடந்த கால சாதனைகளை ஆய்வு செய்து பார்க்கட்டும், நான் எந்தவிதத்திலும் பேட்டிங்கில் மோசமாகச் செயல்படவில்லை. இந்த டெஸ்ட் தொடரில்கூட ஒரு அரைசதம் அடித்திருக்கிறேன்.

ஐபிஎல் போட்டியில் நான் எப்படி விளையாடினேன் என்பதை அறிவார்கள். நான் தொடர்ந்து சிறப்பாக பேட் செய்தும், என்னை இந்திய சீனியர் அணிக்குள் தேர்வு செய்யாதது வேதனை அளிக்கிறது. என்னுடைய பேட்டிங் திறமையை மட்டுப்படுத்துகிறது.

சர்வதேச அளவில் தரமான பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது, நம்முடைய பேட்டிங் திறமையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். தொடர்ந்து நாம் பேட்டிங்கில் கவனம் செலுத்துவது அவசியம். சிலநேரங்களில் இதுபோன்ற பந்துவீச்சு பேட்டிங்கை பாதிக்கும் என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன்.

ஆனால், ஐபிஎல், உள்ளூர்போட்டிகளில் நான்சிறப்பாக விளையாடியபோதிலும், வாய்ப்புகள் சீனியர் அணியில் கிடைக்கவில்லை. கடைசியாக பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினேன்.

எனக்கு கேப்டன்ஷிப் மிகவும் பிடிக்கும், அந்தப் பணியை நான் விரும்பிச் செய்வேன். அதிலும் அணி நெருக்கடியான சூழலில் மீட்டெடுத்துச் செல்வது எனக்குச் சவாலானது அதை விரும்பிச் செய்வேன். எப்போதெல்லாம் இந்த கேப்டன் பொறுப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் என்னுடைய குணம், செயல்பாடுகள், மனநிலை அனைத்தும் மாறிவிடும். அணிக்கு நெருக்கடியான நேரத்தில் எப்படிச் செயல்பட்டால் மீட்டெடுக்கலாம் என்பதை கேப்டன் பொறுப்பில்தான் கற்க முடியும் கேப்டன் பொறுப்பில் இருக்கும் போது, எனக்குக் கிடைக்கும் மரியாதையையும் மிகவும் விரும்புகிறேன். ஆனால், யாரும் இந்தப் பதவியை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்திய ஏ அணியில் இடம்பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் 317 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x