Published : 13 Aug 2018 06:00 PM
Last Updated : 13 Aug 2018 06:00 PM

கடினமான சூழ்நிலையில் அணியை மீட்டுக் காப்பாற்றுவேன் என்று கையை உயர்த்தும் வீரர்கள் தேவை: விராட் கோலி மனம் திறப்பு

லார்ட்ஸ் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்ததையடுத்து விராட் கோலி தனது ஏமாற்றத்தைத் தெரிவித்ததோடு, அணி என்ன செய்ய வேண்டு, எங்கே தவறு ஆகியவைப் பற்றி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் எதைப்பற்றியும் இப்போது யோசிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா தொடரில் 1-2 அதிலிருந்து வலுவாகக் கட்டமைக்க வேண்டும். கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் இந்த டெஸ்ட் போட்டியில்தான் முற்றிலும் நாம் வெளியேற்றப்பட்டுள்ளோம்.

கடினமான சூழ்நிலையை எனக்குக் கொடுங்கள், நான் அணியை அதிலிருந்து மீட்பேன் என்று கையை உயர்த்திக் கூறும் வீரர்கள் தேவை. எல்லாம் நம் மனதில்தான் உள்ளது. ஆட்டத்துடன் இதற்குத் தொடர்பில்லை. மனரீதியாகத் தயாராக இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் நன்றாக ஆட முடியும். இந்தப் புலத்தில்தான் அடுத்த 4-5 நாட்களுக்குப் பணியாற்றப் போகிறோம்.

அடுத்த டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 4-5 நாட்கள் உள்ளன என்று யோசிக்காமல் அடுத்த டெஸ்ட் போட்டிக்கும் இன்னும் 4-5 நாட்கள்தான் உள்ளன என்று யோசிக்க வேண்டும். இது போன்ற சிறுசிறு விஷயங்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப்களே இல்லை. இந்த இன்னிங்ஸில் ஹர்திக், அஸ்வின் கூட்டணி அமைத்தனர். அதற்கு முன்பாகவும் பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. 60,70. 80 என்று கூட்டணி அமைத்து, அதிலிருந்து பெரிய கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அல்லது சிறு சிறு கூட்டணிகள் கூட அணியை வலுவான நிலைக்கு இட்டுச் செல்லும்.

ஆட்டம் தொடங்கும்போது அனைவரும் பாசிட்டிவ்வாக இருப்பார்கள், ஆட்டத்துக்குத் தயார் என்று எண்ணுவார்கள். ஒவ்வொரு பேட்ஸ்மெனுமே இப்படி நினைப்பார்கள். ஆனால் களத்தில் கடினமாக மாறும்போது அதனை எதிர்கொள்ள அங்கு அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் கடுமையாகத் தோல்வி அடைந்துள்ளோம். இதில் நான் உட்பட அப்படித்தான் சோடை போய்விட்டேன்.

சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்து கூட்டணி முறையில் சிந்தித்தால் அணியை கடினச் சூழலிலிருந்து மீட்க முடியும். இதைச் செய்வதற்கு கடந்த கால நிகழ்வுகளும் உண்டு, அனுபவமும் உண்டு.

தவறுகளை ஒப்புக்கொள்ள எனக்குத் தயக்கமில்லை, முதலில் தவற்றை ஒப்புக் கொண்டால்தான் திருத்திக் கொள்ள முடியும். தொடரைச் சமன் செய்யவோ அல்லது வெல்லவோ முதலில் தவறுகளை ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்வதுதான் வழி.

தவறுகள் செய்யவில்லை என்று மறைக்க முடியாது. அவற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இதில்தான் அடுத்த டெஸ்ட்டிற்கு முன் எங்கள் கவனம் உள்ளது” இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x