Published : 11 Aug 2018 06:13 PM
Last Updated : 11 Aug 2018 06:13 PM

இங்கிலாந்து திணறல்; 4விக். இழப்புக்கு 89; தவறான கணிப்பில் 2 ரிவியூக்களையும் இழந்தது

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய-இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

மீதமுள்ள 6 விக்கெட்டுகளை குறைந்தது அடுத்த 50 ரன்களில் இந்திய அணி சுருட்ட வேண்டும். பிறகு 2வது இன்னிங்ஸில் ஒரு 280-90 ரன்களை எடுத்து இங்கிலாந்தை களமிறக்கினார்ல் 4வது இன்னிங்சில் இங்கிலாந்து தோல்வி அடைய வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து அணியில் ஜெனிங்ஸ் (11), அலிஸ்டர் குக் (21), ரூட் (19), ஆலி போப் (28) ஆகியோர் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினர். இந்திய அணியில் மொகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மிக முக்கிய விக்கெட்டான அலிஸ்டர் குக்கை வீழ்த்த ஹர்திக் பாண்டியா அறிமுக வீரர் போப் விக்கெட்டை எல்.பி.முறையில் கைப்பற்றினார், மொகமது ஷமி ஜெனிங்ஸ், ரூட் இருவரையும் அற்புதமாக ஒர்க் அவுட் செய்து எல்.பி.யில் வீட்டுக்கு அனுப்பினார்.

குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 15 ரன்கள் விக்கெட் இல்லை, மிக அதிசயமாக இந்தியாவின் கடந்த போட்டியின் சிறந்த பவுலரான அஸ்வின் இன்னமும் கொண்டு வரப்படவில்லை. உணவு இடைவேளைக்குப் பிறகு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் வீழ்த்தும் அஸ்வினைக் கொண்டுவராமல் குல்தீப் யாதவ்வைக் கொண்டு வந்தது நல்ல கேப்டன்சிக்கு அழகாகத் தெரியவில்லை மாறாக தன் தேர்வு குறித்து நிரூபிக்கும் ஈகோத்தனமான முடிவு என்ற ஐயம் எழுகிறது.

இங்கிலாந்து இன்று காலை தொடங்கிய போது இஷாந்த் சர்மா, மொகமது ஷமிக்கு சரியாக லெந்த் கிடைக்கவில்லை, லெக் திசையிலும் ஷார்ட் பிட்ச் ஆகவும் வீசினர், இதனால் பவுண்டரிகள் வந்தன, ஆனால் அதன் பிறகு மிக அருமையாக நிலைபெற்றனர். மொகமது ஷமி ஆண்டர்சனுக்கு நேர் மாறாக, இன்ஸ்விங்கர்களாக வீசி பிறகு அவுட் ஸ்விங்கர்களை வீசினார், குறிப்பாக அவர் பந்தை காற்றில் உள்ளே கொண்டு வந்து பிறகு சில பந்துகளை வெளியே ஸ்விங் செய்தார். சில வேளைகளில் அம்மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி ஃபுல் லெந்தில் இன்ஸ்விங்கரையே வீசினார், இதனால்தான் ஜெனிங்ஸ், ஜோ ரூட் ஆட்டமிழந்தனர், பந்துகள் ஒரு முனையில் சில சமயம் தாழ்வாக வருவதும் நடைபெறுகிறது. ஜோ ரூட் எல்.பி.ஆன பந்து தாழ்வான பந்து.

அணித்தேர்வில் மீண்டும் கோலி சோடைபோயுள்ளாரோ என்று தோன்றுகிறது, உமேஷ் யாதவ் இருந்திருந்தால் இந்தப் பிட்சில் உதவிகரமாக இருக்கும் போல் தெரிகிறது, ஆனால் குல்தீப் யாதவ்வை தேர்வு செய்துள்ளார். பார்ப்போம். பிட்சில் ஸ்பின்னர்களுக்குக் கொஞ்சம் பவுன்ஸ் இருப்பது போல் தெரிகிறது.

ஜெனிங்ஸ் முதலில் 11 ரன்களில் ஷமியின் கிட்டத்தட்ட யார்க்கர் லெந்த் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார், போகிற போக்கில் ஒரு ரிவியூவையும் விரயம் செய்தார். அலிஸ்டர் குக் அபாரமான 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களில் அஸ்வின் வராத தைரியத்தில் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் இஷாந்த் சர்மா ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்தை ஸ்டம்புக்கு நேராக வீசி வெளியே எடுக்க குக்கின் நிலையே மாறிப்போனது, ஸ்கொயர் ஆனார். கொஞ்சம்தான் ஸ்விங் என்றாலும் துல்லிய லெந்த்தில் எட்ஜ் எடுக்க கார்த்திக் கையில் கேட்ச் ஆனது.

ஜோ ரூட், ஆலி போப் இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்காக 45 ரன்களைச் சேர்த்து நன்றாகவே ஆடினர். 38 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த போப் ஆஃப் ஸ்டம்பில் பாண்டியா வீசிய குட்லெந்த் பந்து ஒன்று சறுக்கிக் கொண்டு வர கால் காப்பில் வாங்கி வெளியேறினார், இவரும் தேவையில்லாமல் ரிவியூ ஒன்றை விரயம் செய்தார். உணவு இடைவேளை நெருங்கும் சமயத்தில் கேப்டன் ரூட் 19 ரன்களில் ஷமியின் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார். பந்து அவர் எதிர்பார்த்த உயரம் வராமல் தாழ்வாக வர எல்.பி.ஆனார். இங்கிலாந்து 89/4. ஜானி பேர்ஸ்டோ 4 ரன்களில் கிரீசில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x