Published : 11 Aug 2018 10:58 AM
Last Updated : 11 Aug 2018 10:58 AM

உசைன் போல்ட் ஆக முடியாது, ஆனால் இன்சமாம் உல் ஹக் ஆகாமல் இருக்கலாமே: புஜாரா ரன் அவுட்டில் எழுந்த சிரிப்பலை

ரவிசாஸ்திரியிடம் புஜாராவின் ரன் அவுட் பழக்கம்பற்றி சமீபத்தில் கேட்ட போது, ‘நாங்கள் அவரை உசைன் போல்ட்டாக இருக்க விரும்பவில்லை, புஜாராவாக இருந்தால் போதும்’ என்றார்.

ஆனால் ஜனவரியில் செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 முறை ரன் அவுட் ஆனார். ஆகவே இவர் உசைன் போல்ட்டாக இருக்க வேண்டாம் என்று ரவிசாஸ்திரி நக்கலாக கூறினாலும் உசைன் போல்ட்டெல்லாம் டூ மச், புஜாரா பாகிஸ்தான் ரன் அவுட் புகழ் இன்ஜமாம் உல் ஹக்காக மாறாமல் இருக்கலாமே என்றுதான் கிரிக்கெட் ரசிகர்கள் அபிப்ராயப் படுகின்றனர்.

நேற்று லார்ட்ஸ் இருமுறை சிரிப்பலையில் ஆழ்ந்தது. கொஞ்சம் மழை பெய்ததையடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தைக் கையில் வைத்துக் கொண்டு வெறியுடன் காத்திருக்கும் போது விராட் கோலி, புஜாரா மைதானத்தை விட்டு வெளியே சென்ற சமயம் திடீரென மழை நிற்க சூரியனும் வெளியே வந்தது, உடனேயே நடுவர்கள் புஜாரா, கோலியை திரும்பிவருமாறு செய்கை செய்தனர். அப்போது லார்ட்ஸ் ரசிகர்கள் சிரிப்பலைகளை ஏற்படுத்தினர்.

பிறகு மீண்டும் ஆண்டர்சன் பந்து ஒன்று புஜாரா மட்டையில் அதிசயமாகப் பட பந்து பாயிண்டில் சென்றது. 5 ஸ்லிப்களில் கடைசி ஸ்லிப்பில் ஆலி போப் நின்று கொண்டிருந்தார், பாயிண்டில் லேசாகத் தட்டிவிட்ட பந்துக்கு தயங்காமல் ஒற்றைக் குறிக்கோளுடன் ஓடியிருந்தால் ஒரு ரன் கிடைத்திருக்கும், ஆனால் கோலி, புஜாரா இருவரும் கபடி ஆட, போப் பந்தை எடுத்து ரன் அவுட் செய்ய கோலிக்கு கொஞ்சம் அருகில் ரன்னர் முனையில் இருந்தார் புஜாரா. ரன் அவுட்.

அவர் ரன் அவுட் ஆனவுடன் பெருமழை பெயதது, புஜாராவின் துரதிர்ஷத்தை நினைத்தா, அல்லது ரன் அவுட் ஆன விதத்தை நினைத்தா என்று தெரியவில்லை, லார்ட்ஸ் ரசிகர்கள் மீண்டும் ஒரு சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.

ரவிசாஸ்திரி இறுகிய முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

லார்ட்ஸில் இந்திய அணி தோற்றால் அடுத்த 3 மைதானங்களும் இங்கிலாந்தின் ஆண்டர்சன், பிராடுக்கு பிரமாதமான மைதானங்களாகும், இந்த டெஸ்ட்டை விட்டால் இந்திய அணி எழும்புவது கடினம், ஆனால் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனால் என்ன செய்வது? என்பதே தற்போது இந்திய அணி நிர்வாகத்தின் கவலையாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x