Published : 11 Aug 2018 10:10 AM
Last Updated : 11 Aug 2018 10:10 AM

உலகின் நம்பர் 1 அணியை 107 ரன்களுக்கு ஊதினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்: லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணி மோசம்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி மீண்டுமொரு படுமட்டமான பேட்டிங்கில் 107 ரன்களுக்குச் சுருண்டது. அதிகம் இல்லை ஜெண்டில்மேன் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி (!) 35.2 ஓவர்களில் ஆல் அவுட்.

அஸ்வின் மட்டுமே அதிகபட்சமாக 29 ரன்களை எடுத்து கொஞ்சம் ஆகிருதி காட்ட விராட் கோலி மீண்டும் ஏகப்பட்ட பீட்டன்கள், எட்ஜ்களுடன் எதையும் புரிந்து கொள்ளாமல் ஆடி 23 ரன்களை எடுத்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 13.2 ஓவர்கள் 5 மெய்டன்கள் 20 ரன்களுக்கு 5 விக்கெட். அஸ்வின் பந்துக்குப் பின்னால் சென்று ஆடி நல்ல உத்தியைக் கடைபிடித்து நம் டி20 ஐபிஎல் சூராதி சூரர் வீராதி வீரர்களுக்கு பேட்டிங் சொல்லிக் கொடுத்தார்.

டாஸில் தோற்ற விராட் கோலி நாங்களும் முதலில் பவுலிங்கையே தேர்வு செய்திருப்போம் என்று கூறினார், இது ஏதோ இங்கிலாந்தை சுருட்டி விடும் நம்பிக்கை என்று நம் அதிவியா(ப்)தி ஊடகங்கள் கூறுவது போல் நாமும் கூற முடியாது, ஜேம்ஸ் ஆண்டர்சன் அண்ட் கோ-வை எதிர்கொள்ளும் துணிச்சலில்லாமல் அவர்களை முதலில் பேட் செய்ய அழைக்கும் முடிவு என்றே நாம் கொள்ள வேண்டும். விமர்சனங்கள் அணிக்கு அதன் உண்மை முகத்தைக் காட்டும் கண்ணாடி ஆனால் நம் ஊடகக் கண்ணாடிகளில் பாதரசம் பூசப்படவில்லை. அதனால் இந்திய வீரர்களுக்கு அவர்களின் உண்மை முகம், ஆட்டம் தெரிவதில்லை, ஜேம்ஸ் ஆண்டர்சன் நேற்று பாதரசம் பூசிய அந்தக் கண்ணாடியைக் காட்டினார், ஆனால் இதில் உண்மை முகம் பளிச்சென தெரியாமல், இந்திய அணியின் சிதைந்த உருவமே நமக்குத் தெரிந்தது.

விமர்சனங்களை ஒடுக்கும் எந்த ஒரு கலாச்சாரமும் சுயவழிபாட்டிலும், தற்புகழ்ச்சியிலும், சுயப்பிரமையிலும் சிக்கி சீரழிந்ததைத்தான் வரலாறு எடுத்துரைக்கிறது. இதில் அரசியல், சமூகம், கலாச்சாரம், விளையாட்டு... உள்ளிட்டவைகளுக்கு இடையே பேதங்கள் இல்லை.

முரளி விஜய் 110 டிகிரி வெயிலிலும் ஆண்டர்சன் வீசினால் காலை நகர்த்தாமல் பவுல்டு ஆகக்கூடியவர்தான். லார்ட்சில் முடியுமா? முதல் ஓவரிலேயே ‘சீப்’பாக வீழ்ந்தார்.

ராகுல் முதலில் ஒரு ஃபுல் பந்தை கவர் டிரைவ் ஆடினார், அப்போதே தெரியும் கொஞ்சம் இழுத்து விட்டு முன்னால் பிட்ச் செய்தால் காலையும் மட்டையையும் நீட்டுவார் என்று... நீட்டினார், மாட்டினார்.

புஜாரா பாவம், மழைவருவதற்குள் அவசரம், ரன் அவுட் ஆனார், ஆனால் இவர் ரன் அவுட்டுக்கு விராட் கோலிதான் காரணம். பாயிண்ட்டில் தட்டி விட்டு ஓடினார், புஜாரா பேட்டில் அதிசயமாக பந்து பட்டவுடன் கண்கள் மலர்ந்து ஓடிவந்தார் கோலி, வந்தவர் திரும்பிச் சென்றார், புஜாரா நடுவழியில் நின்றார், ரன் அவுட் ஆனார், ஒருவிதத்தில் ஆண்டர்சன் அண்ட் கோ பந்துவீச்சிலிருந்து புஜாராவுக்கு விட்டுவிடுதலையாகும் வாய்ப்பு கிடைத்தது என்றே கூற வேண்டும்.

புஜாரா ஆட்டமிழந்த பிறகு பெய்த பெருமழை நின்று மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது கொஞ்சம் சூரிய ஒளி தலைகாட்டியது. பந்துகள் ஸ்விங் ஆவது கொஞ்சம் குறைந்தது. ரஹானேவுக்கு ஜோ ரூட் 5 ரன்களில் 4வது ஸ்லிப்பில் பிராட் பந்தில் கேட்சை விட்டார்.

விராட் கோலி ஏகப்பட்ட எட்ஜ்கள், பீட்டன்களுடன் ஆடி வந்தார், ஆண்டர்சனை பந்துவீச்சிலிருந்து எடுத்த பிறகு விராட் கோலி மிகவும் தளர்வாக ஆடினார், கிறிஸ் வோக்ஸ் வந்தார், பட்லர் கேட்ச் விட்டபிறகும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை கவர் டிரைவ் ஆட முயன்று தோற்றுக் கொண்டிருந்தார், எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத பெரிய ஈகோ, அவரைக் காலி செய்தது. கடைசியில் வோக்ஸ் பந்து ஒன்று உள்ளே வந்து வெளியே லேட் ஸ்விங் ஆக கோலியின் மட்டமான ஷாட்டில் ஸ்லிப்பில் பட்லரிடமே கேட்ச் ஆனது. பாண்டியாவும் 11 ரன்களில் வோக்ஸின் வெளியே ஸ்விங் ஆகும் பந்துக்கு மட்டை உணர்வு வேண்டினார், எட்ஜ் ஆனது பட்லர் கேட்ச் எடுத்தார்.

தினேஷ் கார்த்திக் இறங்கும்போது 5 ஸ்லிப்புகளும் வரவேற்கப்பட்டார். ஆனால் 5 ஸ்லிப் பீல்டர்களையும் ஏமாற்றிய தினேஷ் கார்த்திக் சாம் கரன் வீசிய அதியற்புத இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார், பந்து ஏகப்பட்ட ஸ்விங் ஆனது. மட்டையும் கால்காப்பும் இணையவில்லை, ஒரு முழ இடைவேளியில் பந்து புகுந்தது.

ரஹானே 18 ரன்களுக்கு நல்ல உத்தியுடன் ஆடினார், முக்கால்வாசி பின்காலில் சென்று ஆடினார், ஆனால் ஆண்டர்சன் வந்தவுடன் முன்கால் சபலப்பட்டது, முன்னால் வந்தது எட்ஜ் ஆனது வெளியேறினார். ஆண்டர்சன் வெறும் காகிதத்தைச் சுருட்டி வீசினால் கூட இந்திய மட்டைகளின் விளிம்புகளை 100% பிடித்து விடுவார் போலிருக்கிறது.

அஸ்வின் 29 ரன்களுக்கு நல்ல உத்தியுடன் அருமையான 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து பிராட் பந்தில் எல்.பி.ஆனார். குல்தீப், இஷாந்த் சர்மாவை ஆண்டர்சன் காலி செய்ய இந்திய அணி 107 ரன்களுக்கு 35.2 ஓவர்களில் மடிந்தது. மொத்தம் 212 பந்துகளில் 80% பந்துகள் ஒன்று பீட்டனாகியிருக்கும் அல்லது எட்ஜ் ஆகியிருக்கும் என்றே தோன்றுகிறது. உங்களுக்கெல்லாம் எதற்கு முழு மட்டை, வெறும் எட்ஜ் மட்டுமே போதுமே என்று டி20 ஐபிஎல் சூரப்புலிகளிடம் இங்கிலாந்து பவுலர்கள் கேட்டது போல் நம் காதுகளில் விழுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x