Published : 10 Aug 2018 03:25 PM
Last Updated : 10 Aug 2018 03:25 PM

காப்பாற்றிய மழை; மோசமான தொடக்கம்: நகராத கால்கள்; விஜய் பவுல்டு, ராகுல் எட்ஜ்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது, ஆண்டர்சன் இந்திய தொடக்க வீரர்களின் நகராத கால்களைப் பயன்படுத்தி விஜய், ராகுலை வீழ்த்தினார்.

11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று கடும் நெருக்கடியில் மழை வந்து இந்திய அணியைக் காப்பாற்றியுள்ளது. புஜாரா 19 பந்துகளில் 1 ரன்னுடனும், விராட் கோலி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் என்று மழையால் தற்காலிக நிம்மதியடைந்துள்ளது.

மிகவும் சாதாரணமான ஒரு உத்தியைத்தான் ஆண்டர்சன் முதல் ஓவரில் கடைபிடித்தார், 4 பந்துகள் 4வது ஸ்டம்ப் லைனில் வீசி வெளியே ஸ்விங் செய்தார். அடுத்த பந்து ஆண்டர்சன் வீசிய பந்தின் தையல் இன்ஸ்விங்கருக்கானது, ஃபுல் லெந்தில் பிட்ச் ஆனது, பந்து உள்ளே வருவதாக ஏமாந்து மட்டையைத் தாமதமாக இறக்கியதோடு தாமதமாக பிளிக்‌ஷாட்டையும் முயன்றார், ஆனால் பிட்ச் ஆன பந்து லேசாக வெளியே ஸ்விங் ஆகி பவுல்டு ஆனது. விஜய் டக் அவுட் ஆனார். கால்கள் சுத்தமாக நகரவில்லை.

ராகுலுக்கு பிராட் வீசிய ஓவரில் ஒரு பந்து கட் ஆகி உள்ளே வர கணிப்பில் தவறிழைத்து பந்தை ஆடாமல் ராகுல் விட்டுவிட ஸ்ட்ம்புக்கு அருகில் சென்றது. அடுத்த பந்து அவுட்ஸ்விங்கர் மட்டையைத் தொங்க விட்டு பீட்டன் ஆனார். அடுத்த ஓவரில் புஜாராவை அவுட்ஸ்விங்கரில் பீட் செய்தார் ஆண்டர்சன். பிறகு ராகுல், பிராடை ஒரு அபார கவர் ட்ரைவ் அடித்தார், ஆனால் இது பொறிதான். பிறகு ஆண்டர்சன் ராகுலின் கால்காப்பைக் குறைவைக்க தெளிவான பிளிக் ஷாட் பவுண்டரி ஆனது. அடுத்து பிராட் பந்தில் தடுமாற்றத்துடன் ஆடி மட்டை உள் விளிம்பில் வாங்கினார்.

அடுத்த ஆண்டர்சன் ஓவரில் மட்டையை தேவையில்லாமல் காலை நகர்த்தாமல் கொண்டு சென்ற ராகுல் எட்ஜ் ஆகி வெளியேறினார். கோலி இறங்கும் போது மைதானம் முழுதுமே ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர்.

கோலி தன் முதல் ரன்னை எடுக்க மழை வந்தது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்தியா தடவல் தொடக்கம்.

 

முன்னதாக...

தவண் நீக்கம்; புஜாரா, குல்தீப் அணியில்: இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பீல்டிங்

முதல் நாள் முழுதும் மழையால் ரத்து செய்யப்பட்ட பிறகு 2ம்நாளான இன்று ஆட்டம் தொடங்கவுள்ளது, டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் ஷிகர் தவணுக்குப் பதில் புஜாராவும் உமேஷ் யாதவுக்குப் பதில் குல்தீப் யாதவ்வும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராகுல், விஜய் தொடக்க வீரர்களாகக் களமிறங்கவுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் வழக்கை எதிர்கொண்டு வருவதால் அவருக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

டாஸ் தோற்ற விராட் கோலி, தானும் பீல்டிங்கையே தேர்வு செய்திருப்பதாகத் தெரிவித்தார். ஜோ ரூட், விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x