Last Updated : 10 Aug, 2018 09:16 AM

 

Published : 10 Aug 2018 09:16 AM
Last Updated : 10 Aug 2018 09:16 AM

பட்டத்தை தக்கவைக்குமா இந்திய ஆடவர் ஹாக்கி அணி?

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 8 தங்கப்பதக்கங்கள் அதிலும் 6 பதக்கங்களை தொடர்ச்சியாக வென்ற இந்திய ஆடவர் அணி, 67 வருட பாரம்பரியம் கொண்ட ஆசிய விளையாட்டு போட்டியில் மோசமான சாதனைகளையே கொண்டுள்ளது. பிரபஞ்சத்தில் பல்வேறு விளையாட்டுகளை உள்ளடக்கிய 2-வது பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி இதுவரை 3 தங்கப் பதக்கங்கள் மட்டுமே பெற்றுள்ளது.

இந்திய அணி பங்கேற்றுள்ள 15 தொடர்களில் 14 முறை பதக்கங்கள் (3 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கலம்) வென்றுள்ள போதிலும் ஒருமுறைகூட பட்டத்தை தக்கவைத்தது இல்லை. மேலும் இதுவரை வென்றுள்ள 3 தங்கப் பதக்கங்களுக்கு இடையிலும் நீண்ட இடைவெளி உள்ளது. முதன்முறையாக 1966-ம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி அதன்பின்னர் 32 வருடங்களுக்குப் பிறகு 1998-ம் ஆண்டுதான் தங்கப் பதக்கத்தை கைப்பற்ற முடிந்தது. இதன் பின்னர் அடுத்த தங்கப் பதக்கம் 16 வருட இடைவெளிக்குப் பின்னர் 2014-ல் கிடைத்தது.

இம்முறை ஹரேந்திரா சிங்கின் பயிற்சியில் புது எழுச்சி கண்டுள்ள இந்திய அணி சோகங்களுக்கு முடிவு கட்டி வரலாற்றில் முதன்முறையாக பதக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் முனைப்பு காட்டக்கூடும் என்று கருதப்படுகிறது. ஜகார்த்தாவில் தங்கப் பதக்கம் வெல்வதன் மூலம் ஆசிய கண்டத்தில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதோடு மட்டுமின்றி 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் நேரடியாக தகுதி பெற முடியும்.

ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் 11 அணிகளில் உலக தரவரிசையில் இந்திய அணி (5-வது இடம்) உயர்ந்த இடத்திலேயே உள்ளது. இந்திய அணிக்கு 8 முறை சாம்பியனான பாகிஸ்தான், 4 முறை சாம்பியனான தென் கொரியா ஆகியவை கடும் சவால் கொடுக்கக்கூடும். 2014-ம் ஆண்டு இன்ஜியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஷூட் அவுட் முறையில் பாகிஸ்தானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றிருந்தது. இதன் பின்னர் இந்திய அணி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறியது.

கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியால் 4-வது இடமே பிடிக்க முடிந்தது. இந்தத் தொடரில் மரிஜின் பயிற்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் நம்பிக்கை தளர்ந்தே காணப்பட்டது. இதைத் தொடர்ந்து பயிற்சியாளராக ஹரேந்திரா சிங் மாற்றப்பட்டார். அவர் அணியில் ஒருசில மாற்றங்களை மேற்கொண்ட நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் ஷூட் அவுட் முறையில் ஆஸ்திரேலியாவிடம் தங்கப் பதக்கத்தை பறிகொடுத்திருந்தது இந்திய அணி.

ஹரேந்திரா சிங் கூறும்போது, “அதிர்ஷ்டத்தினால் ஒரேநாள் இரவில் மாற்றங்கள் நிகழ்ந்து விடாது. தந்திரோபாய விழிப்புணர்வு அடிப்படையில் எங்களது சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது. நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து காமன்வெல்த் விளையாட்டில் எங்களது குறைபாடுகள் குறித்து பகுப் பாய்வு செய்தோம். இதில் அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் அவர்களுக்கான பணியை முடிவு செய்தோம். இதன் பின்னர் எதிரணியிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை வீரர்களால் கையாள முடிந்தது.

காமன்வெல்த் தொடரில் நடுகளம் பலவீனமாக இருந்ததன் காரணமாகவே முன்னாள் கேப்டனான சர்தார் சிங் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். ஹரியாணாவைச் சேர்ந்த அவர், மீண்டும் உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய அணி சமீபத்திய ஆட்டத்திறனை அப்படியே தொடர முடியும்.

உலகில் உள்ள அனைத்து அணிகளும் உங்களை பார்த்துக் கொண்டிருப்பதால் தொழில்நுட்பம், யுத்திகளை கையாள்வதில் மனரீதியாக உறுதியாக இருக்க வேண்டும். சாம்பியன்ஸ் டிராபியின் போது களத்தில் யுத்தி ரீதியாக பல மாற்றங்களை மேற்கொண்டோம். மேலும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அதை சிறப்பாக கையாண்டோம். இதனால் ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

ஆசிய விளையாட்டில் இந்திய அணிக்கு தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி சற்று நெருக்கடி கொடுக்கக்கூடும் என கருதப்படுகிறது. காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்த பாகிஸ்தான் அணி தற்போது ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் பயிற்சியின் கீழ் சீரான முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும் மோசமான பார்மில் இருந்தாலும் ஆசிய கோப்பையை பொறுத்தவரையில் அந்த அணி உயர்மட்ட செயல்திறனை இதுவரை வெளிப்படுத்தி வந்துள்ளது.

கிரிக்கெட்டை போன்றே பாகிஸ்தான் அணி ஹாக்கியிலும் கணிக்க முடியாத அணியாகவே வலம் வருகிறது. சாம் பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி யிடம் தொடக்க ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பாகிஸ் தான் அணி, அதன் பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி அனைவரை யும் வியக்க வைத்திருந்தது. இதனால் இம்முறையும் அந்த அணியிடம் இருந்து ஆச்சரியத்துக்கு பஞ்சம் இருக்காது.

ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கியில் பங்கேற்கும் 11 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், இலங்கை, ஹாங்காங் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. அதேவேளையில் ‘பி’ பிரிவில் மலேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஓமன், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய அணிகளும் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

இதில் புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் தலா 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். லீக் ஆட்டங்கள் 20-ம் தேதி தொடங்குகின்றன. அரை இறுதி ஆட்டங்கள் 29-ம் தேதியும், இறுதிப் போட்டி செப்டம்பர் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 22-ம் தேதி ஹாங் காங்கையும், 24-ம் தேதி ஜப்பானையும், 26-ம் தேதி தென் கொரியாவையும், 28-ம் தேதி இலங் கையையும் எதிர் கொள்கிறது.

துருப்பு சீட்டுகள்

ஸ்ரீஜேஷ்

இந்திய ஹாக்கி அணி கோல்கீப்பரான ஸ்ரீஜேஷ் தலைமையில் களமிறங்குகிறது. 32 வயதான ஜேஷ் கோல்போஸ்ட்டுக்கு இடையே சுவர் போன்று அரணாக நின்று எதிரணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தகர்ப்பதில் வியக்க வைக்கும் திறன் கொண்டவர். 2012 ஒலிம்பிக், 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் ஸ்ரீஜேஷ் பங்கேற்ற போதிலும், 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரு பெனால்டி ஸ்டிரோக்குகளை அபாரமாக தடுத்ததன் மூலம் தன்னை வெற்றிகரமான கோல்கீப்பராக நிலைப்படுத்திக் கொண்டார்.

ரூபிந்தர்பால் சிங்

நம்பகமான டிபன்டராக மட்டும் இல்லாமல் உலக அரங்கில் சிறந்த டிரக்-பிளிக்கராக அறியப்படுபவர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார் ரூபிந்தர்பால் சிங். 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் முக்கிய அங்கம் வகித்த 27 வயதான ரூபிந்தர்பால் சிங், 2011-ம் ஆண்டு நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்து அனைவரது கவனத்தையும் தன் மீது குவியச் செய்திருந்தார். டிபன்ஸில் இவருக்கு உறுதுணையாக ஹர்மான்பிரீத் இருப்பது கூடுதல் பலம்.

சர்தார் சிங்

நடுகள வீரரான சர்தார் சிங் 300 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர். முன்னாள் கேப்டனான அவர் அணியில் இருப்பது பெரிய பலமாக கருதப்படுகிறது. 2010 மற்றும் 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் சர்தார் சிங் முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.

ஆசிய விளையாட்டில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி 8 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்தியா 3 முறை தங்கம் வென்றுள்ளது. இதில் இந்திய அணி இரு முறை பாகிஸ்தானையும்,ஒரு முறைதென் கொரியாவையும் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியிருந்தது.

இந்திய அணி முறை தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 7 முறை பாகிஸ்தான் அணியிடமும், இரு முறை தென் கொரியாவிடமும் இறுதிப் போட்டியில் தோல்வி கண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x