Last Updated : 08 Aug, 2018 09:36 PM

 

Published : 08 Aug 2018 09:36 PM
Last Updated : 08 Aug 2018 09:36 PM

ஒரு தோல்வி என்றவுடனேயே முடிவு கட்டி விடாதீர்கள்; பிரச்சனை உத்தி அல்ல; மனரீதியானது: விராட் கோலி

முதல் டெஸ்ட் தோல்வியையடுத்து உடனே அணியைப்பற்றி முடிவு கட்டிவிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அனுதாபிகளை கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளை லார்ட்ஸில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்யும் நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில் டெஸ்ட்டுக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறியதாவது:

“நாம் உடனடியாக அணியைப் பற்றி விரைவில் தீர்ப்புக்குத் தாவி விட வேண்டாம், ஒரு அணியாக நாம் பொறுமை காப்போம். தோல்விகளில், பேட்ஸ்மென் தோல்விகளில் எந்த ஒரு வகைமாதிரியையும் தொடர்ச்சியையும் நாங்கள் பார்க்கவில்லை. விக்கெட்டுகள் கொத்தாக விழுவதுதான் பிரச்சனை, இது உத்தி ரீதியான தவறுகளல்ல, இது மனரீதியான பிரச்சனையே.

முதல் 20-30 பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவான திட்டமிடுதல் வேண்டும். இந்தத் திட்டம் ஆக்ரோஷமாக ஆடுவதாக எப்போதும் இருக்க வேண்டியத் தேவையில்லை. இங்கு நமக்கு நிதானமும் பொறுமையுமே அவசியமே தவிர ஆக்ரோஷம் அல்ல.

வெளியிலிருந்து பார்க்கும்போது தோல்வி மோசமானதாகத் தெரியும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட், இங்கிலாந்தில் ஆடுகிறோம், இங்கு எப்படிப்பார்த்தாலும் கடினம்தான். ஆனால் பிழைகளை குறைக்க வேண்டும், இதைத்தாண்டி நாங்கள் பெரிதாக கவலையடைய வேண்டியதில்லை.

ஒரு கேப்டனாக நான் என்னால் முடிந்தவற்றைச் செய்கிறேன். நிர்வாகத்திடமிருந்தும் நிறைய பின்னூட்டங்கள், ஆலோசனைகள் வந்தவண்ணம்தான் உள்ளன. சிலர் ஆட்டத்தை பார்க்கும் விதம் வேறு மாதிரி இருக்கும் அவர்களுக்குச் சொந்தமான கருத்துக்கள் இருக்கும் குறிப்பாக கேப்டன்சி பற்றி, ஆனால் நான் வீரர்களுடன் நல்ல தொடர்புறுத்தலில்தான் இருக்கிறேன் என்று உணர்கிறேன்.

இரண்டு ஸ்பின்னர்கள்?

2 ஸ்பின்னர்களை அணியில் எடுப்பது ஆர்வமான சிந்தனை, பிட்சில் கொஞ்சம் நடந்து பார்த்தேன், கடினமாகவும் வறண்டும் உள்ளது. ஆனால் நல்ல புற்களும் முளைத்துள்ளன. புற்கள் இருந்தால்தான் பிட்ச் உடையாமல் இருக்கும் இல்லையெனில் உடைவதைத் தடுப்பது கடினமாக இருக்கும்.

2 ஸ்பின்னர்கள் ஆர்வமூட்டும் ஒரு சிந்தனைதான், ஆனால் அணியின் சமச்சீர் தன்மையைப் பொறுத்தே அந்த முடிவை எடுக்க முடியும். ஆனால் 2 ஸ்பின்னர்கள் ஆடும் முடிவு நிச்சயம் மனதில் உள்ளது.

ரன்கள் எடுக்கும் போது மட்டுமல்ல வெற்றி பெற முடியாத போதும் சரி ரன்களை எடுக்க முடியாத போதும் சரி கொஞ்சம் வேதனையாகவே இருக்கும்.

நான் ரன்கள் எடுத்து போட்டியை வெற்றி பெற முடியவில்லையே என்று நான் கருதவில்லை. நாங்கள் போட்டிகளை வெல்வதில்லை என்ற பொதுப்படையான வேதனையாகவே அது இருக்கும். நான் ரன்கள் எடுக்கவில்லை ஆனால் அணி வெற்றி பெறுகிறது எனும்போது எனக்கு முற்றிலும் வேறு உணர்வு ஏற்படும். அணியாக எந்த விளையாட்டை ஆடும்போதும் இது இயற்கையான உணர்வே.

நான் என் பேட்டிங் மூலம் என்ன சாத்தியமாகுமோ அதனை முயன்று ஆடுகிறேன். இது எப்போதும் நடக்காது, ஆனால் அது நடக்கும்போது நான் அதிகம் பங்களிப்பு செய்யவே விரும்புவேன். நெருக்கமாக வந்து தோற்றது துரதிர்ஷ்டவசமானது. எனவே எப்படி வெற்றியை அடைவது என்பது மட்டுமே நாங்கள் சிந்திக்க வேண்டியது. தோற்பதில் எந்த ஒரு தொடர்ச்சியான மாதிரியை நான் காணவில்லை.

ஒரு குறிப்பிட்ட பவுலரை இப்படித்தான் ஆடுவது என்பது தயாரிப்பின் மூலம் வருவது, என்னுடைய தயாரிப்பு மற்ற வீரர்களை விட வித்தியாசமானதாக இருக்கும். வீரர் களமிறங்கும் போது அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x