Published : 07 Aug 2018 02:01 PM
Last Updated : 07 Aug 2018 02:01 PM

“டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் பேட்டிங் செய்வார்களா?” ஷிகர் தவணை திட்டித் தீர்த்த சுனில் கவாஸ்கர்

ஷிகர் தவண் தன்னுடைய பேட்டிங்கை மாற்றிக்கொள்வது போல் தெரியவில்லை, டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார்போல் அவர் பேட்டிங் செய்யவிட்டால் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

பர்மிங்ஹாமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்களில் பரிதாபமாகத் தோல்வியுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலியைத் தவிர மற்ற எந்த வீரர்களும் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படவில்லை. இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததும், தேவையில்லாத பந்துகளை தொட்டு விக்கெட்டை பறிகொடுத்ததும் காரணமாகக்கூறி விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதிலும், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார். ஆனால், வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் அவர் ஸ்கோர் செய்யவில்லை. அவரின் மோசமான ஃபார்ம் இந்தத் தொடரிலும் தொடர்ந்து வருகிறது.

பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில், ஷிகர் தவண் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 26 மற்றும் 13 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இந்நிலையில், முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான சுனில் கவாஸ்கர் ஷிகர் தவணின் பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

சமீபகாலமாக ஹர்திக் பாண்டியா, லிஜெண்ட் கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள். தயவு செய்து அப்படி ஒப்பிடாதீர்கள். கபில்தேவ் திறமை வேறு, ஹர்திக் பாண்டியா திறமை வேறு, இருவரும் வெவ்வேறு தொலைவில் இருப்பவர்கள், ஆதலால் ஒப்பிடாதீர்கள். இவர்கள் தலைமுறை வீரர்கள் அல்ல, நாற்றூண்டுகளில் கிடைத்த வீரர்கள் டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் போன்றோர்களை எந்தவீரருடன் ஒப்பிடாதீர்கள்.

கோலி தலைமையிலா இங்கிலாந்து சென்று விளையாடி வரும் இந்தியஅணி டெஸ்ட்போட்டிகளுக்கு முறையாகத் தயாராகவில்லை. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக குறைந்தபட்சம் 3 பயிற்சிப் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால், ஒரு போட்டியில் 3 நாட்கள் மட்டும் விளையாடி, 18வீரர்களும் பேட் செய்வது எப்படி போதுமானதாக இருக்கும்.

அதிலும் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும் ஷிகர் தவண் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றார்போல் ஆடுவதில்லை. டெஸ்ட் போட்டியில் இப்படியா பேட் செய்வது. அவரைப் பொருத்தவரை தன்னுடைய பேட்டிங் ஸ்டையிலை மாற்றிக்கொள்ளாமல் விளையாட வேண்டும் என நினைக்கிறார்.

இதேபோன்ற ஸ்டையிலில் பேட்டிங் செய்தால், நாம் அணிக்கு வெற்றித் தேடித்தரலாம் என்று தவண் நினைக்கிறார். அது ஒருபோதும் இயலாது. ஒருநாள் போட்டிக்கு ஆட வேண்டிய ஷாட்களை எல்லாம், டெஸ்ட் போட்டியில் விளையாடினால், விக்கெட்டுகளை இழக்க வேண்டியது இருக்கும். டெஸ்ட் போட்டியில் ஏராளமான ஸ்லிப் பீல்டர்கள் இருப்பார்கள், பேட்டின் நுனியில் பட்டு பந்து சென்றாலே பெரும்பகுதி கேட்சுகளாக மாறிவிடும். ஆனால், ஒருநாள் போட்டியில் ரன்களாக மாறும்.

ஆதலால், டெஸ்ட் போட்டிகளுக்கும், ஒருநாள் போட்டிகளுக்கும் ஏற்றார்போல் தன்னுடைய பேட்டிங்கை ஷிகர் தவண் மாற்றிக்கொள்வது அவசியம். அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் ஷிகர் தவண் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறுகிறார். பேட்டிங் ஸ்டைலை மாற்றாதவரை அவரால் வெற்றிபெற முடியாது.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் காட்டமாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x