Last Updated : 05 Aug, 2018 07:14 PM

 

Published : 05 Aug 2018 07:14 PM
Last Updated : 05 Aug 2018 07:14 PM

இங்கிலாந்தில் அதிரடி மாற்றம்: மலானுக்கு பதிலாக போப்;ஸ்டோக்ஸுக்கு பதிலாக வோக்ஸ்

 

லண்டன் லார்டஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் பேட்டிங்கிலும் சொதப்பி, கேட்ச்களையும் கோட்டை விட்ட டேவிட் மலானுக்கு பதிலாக இளம் வீரர், ஆலிவர் போப் அறிமுகமாகிறார்.

முதல் போட்டியில் கலக்கலாகப் பந்துவீசிய பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டோக்ஸ் மீது வழக்கு உள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதில் இங்கிலாந்து அணி 2 மாற்றங்களைச் செய்துள்ளது.

முதலாவதாக, பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்து, பீல்டிங்கிலும் மோசமாக இருந்த டேவிட் மலானுக்கு பதிலாக உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் 20வயது வீரர் ஆலிவர் போப் வாய்ப்பு பெற்றுள்ளார்.

டேவிட் மலான் இரு இன்னிங்ஸிலும் முறையே 8, 20 ரன்கள் மட்டுமே சேர்த்தார், ஸ்லிப்பில் பீல்டிங் செய்து 3 கேட்சுகளை கோட்டைவிட்டார் என்பதால், அவருக்கு இங்கிலாந்து அணி நிர்வாகம் கல்தா கொடுத்துள்ளது.

அதேசமயம் புதுமுகமாக அறிமுகமாகும் ஆலிவர் போப் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் 684 ரன்கள் சேர்த்துள்ளார். இது 2-வது அதிகபட்சமாகும். மேலும், வலதுகை பேட்ஸ்மேன் என்பதால், இந்திய வீரர் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொண்டு துவம்சம் செய்ய இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், வேகப்பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் பிரிஸ்டல் நகரில் ஒரு மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டார். அது தொடர்பாக அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த ஒழுக்கக்குறைவான சம்பவத்தால், இங்கிலாந்து அணியிலும் சில போட்டிகளுக்கு ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நாளை வருகிறது. விசாரணை வேறு ஒரு தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டால், 2-வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்படுவார். அல்லது விசாரணை நடந்து தண்டனை ஏதும் அளிக்கப்படும் பட்சத்தில் கிறிஸ் வோக்ஸ் அணியில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x