Published : 02 Aug 2018 05:37 PM
Last Updated : 02 Aug 2018 05:37 PM

இங்கிலாந்துக்காக பந்துவீச்சில் செய்த மாற்றங்கள் என்ன?- ரகசியம் உடைக்கிறார் அஸ்வின்

 

இங்கிலாந்தில் இந்திய ஸ்பின்னர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது 2002க்குப் பிறகு நிகழவில்லை. அஸ்வின் மிகவும் நெருங்கி வந்து நடப்பு எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வரை வந்தார்.

பொதுவாக அயல்நாட்டில் அவர் பந்து வீச்சு எடுபடாமல் இருந்தது, ஷார்ட் பிட்ச், லெக் திசை பவுலிங் என்று சாத்து வாங்கிக் கொண்டிருந்தார். சுருக்கமாக இங்கிலாந்து போன்ற பிட்ச்களில் பந்தின் வேகம், லெந்த் ஆகியவற்றில் பிழைகள் செய்து வந்தார்.

இந்நிலையில் தான் செய்த மாற்றங்கள் குறித்து பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருணுடன் பிசிசிஐ.டிவிக்காக அஸ்வின் பேசியது:

கடந்த முறை இங்கு கவுண்ட்டி கிரிக்கெட்டுக்காக வந்த போது இந்தப் பிட்ச்களில் ஸ்பின்னர்கள் என்ன வேகத்தில் வீச வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

பிட்ச்கள் மிகவும் மந்தமாக இருந்தன, முதல் நாளில் கூட கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும். ஆனால் பந்தின் வேகத்தை நாம் சரியாகக் கடைபிடிக்கவில்லையெனில் பேட்ஸ்மென்கள் முன்னால் வந்தோ பின்னால் சென்றோ ஆடுவதற்கு நிறைய நேரம் இருக்கும். இங்கு வந்தவுடன் நான் விரைவில் இதனைக் கண்டுணர்ந்தேன், என்றார்.

அலிஸ்டர் குக்கிற்கு காற்றில் உள்ளே செலுத்தி வெளியே இழுத்து கனவுப்பந்தில் பவுல்டு செய்த பந்தின் வேகம் 86 கிமீ. அதே போல் ஜோஸ் பட்லருக்கும் 85 கிமீ வேகத்தில் வீசினார். பிட்சில் ஈரப்பதன் இருந்ததால் அஸ்வினின் பந்து பிட்ச் ஆன பிறகு மண்ணைப் பற்றி நின்று திரும்பியது.

கடந்த 18 மாதங்களாக என் பந்து வீச்சு ஆக்‌ஷனை கொஞ்சம் எளிமைப்படுத்த முயற்சி செய்தேன். அதாவது வெறும் கையை மட்டும் பயன்படுத்தாமல் பந்துக்குப் பின்னால் என் உடலையும் கொஞ்சம் செலுத்தி காற்றில் பந்து சில வேலைகளைக் காட்ட முயற்சி செய்தேன். அதைத்தான் நேற்று செய்தேன், இது பயனளித்தது.

நாம் எப்போதுமே பிட்ச் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பேசியிருக்கிறோம். குறிப்பாக பிட்ச் பேட்டிங் சாதகமாக இருக்கும் போது, நடப்பு பேட்ஸ்மென்கள் இத்தகைய பிட்ச்களில் பேட்டிங்கை மகிழ்வுடன் ஆடும்போது பிட்ச் என்பதை நம் சமன்பாட்டிலிருந்து எடுத்துவிட வேண்டும் என்று பேசியிருக்கிறோம்.

பந்தை காற்றில் நன்றாகத் தூக்கி வீசி பேட்ஸ்மென்களின் கணிப்பை ஏமாற்றும் முயற்சியில் சில வேளைகளில் உடல் ஒத்துழைப்பதில்லை. இதனால் சற்று ஷார்ட் பிட்ச் ஆகவும் சற்று ஃபுல் லெந்தாகவும் விழுகிறது, இதனால்தான் என் ஆக்‌ஷனை கொஞ்சம் எளிமைப்படுத்த விரும்பினேன். ஒரு குறிப்பிட்ட ஆக்‌ஷன் மூலம் கிரிக்கெட்டில் ஒரு நல்ல காலக்கட்டத்தில் நான் இருந்தேன் ஆனால் பந்து வீச்சு அங்குதான் கெட்டுப் போக ஆரம்பித்தது. சில மாற்றங்களை என் விருப்பத்துக்கு மாற்றாகவே செய்ய வேண்டியிருந்தது” இவ்வாறு கூறினார் அஸ்வின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x