Last Updated : 01 Aug, 2018 10:15 PM

 

Published : 01 Aug 2018 10:15 PM
Last Updated : 01 Aug 2018 10:15 PM

ஷமி, அஸ்வின் பந்துவீச்சில் இங்கிலாந்து திணறல்: 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

பர்மிங்ஹாமில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், அஸ்வின், ஷமி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.

73 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி. களத்தில் பென் ஸ்டோக்ஸ் 21 ரன்களுடனும், சாம் குர்ரன் ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் கோட்டைவிட்டது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கி இருக்கிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற முறையில் களம் காண்கிறது.

கவுண்டி போட்டியிலும், பயிற்சிப் போட்டியிலும் மோசமாக விளையாடிய சட்டீஸ்வர் புஜாரா அமரவைக்கப்பட்டு, கே.எல்.ராகுல் அழைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியில் அலிஸ்டார் குக், ஜென்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். உமேஷ் யாதவும், இசாந்த் சர்மாவும் பந்துவீச்சைத் தொடங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர்.

ஆனால், இங்கிலாந்தின் இரு இடது கை பேட்ஸ்மேன்களான குக், ஜென்னிங்ஸை திணறவைக்கும் அளவுக்கு உமேஷ் யாதவால் 'இன்ஸ்விங்'குகளை வீச முடியவில்லை.

இதனால், இசாந்த் சர்மா பந்துவீச்சை மிகவும் சிரமத்துடன் எதிர்கொண்ட இருவரும், உமேஷ் யாதவ் பந்துவீச்சை அனாசயமாக எதிர்கொண்டனர். இதனால், உமேஷ் வீசிய 5-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசினார் குக்.

6-வது ஓவரை இசாந்த் சர்மா வீசினார். ஜென்னிங்ஸ் பந்தை எதிர்கொண்டார். 3-வது பந்தில் ஸ்லிப் திசையில் ஜென்னிங்ஸ் அடிக்க, கோலியின் கைகளைத் தேடி பந்து கேட்சுக்காகச் சென்றது. ஆனால், ரஹானே குறுக்கே பாய்ந்து, அந்த கேட்சைப் பிடிக்க முற்பட்டு நழுவவிட்டார்.

உமேஷ் யாதவுக்கு இடதுகை பேட்ஸ்மேன்களை திணறவைக்கும் அளவுக்கு இன்ஸ்விங் வீச முடியவில்லை. இதனால், வேறு வழியின்றி, அனுபவ வீரர் அஸ்வினை 7-வது ஓவரிலேயே கோலி பந்துவீச அழைத்தார்.

ஆனால், அஸ்வினை அழைத்தது சிறிதுகூட வீண்போகவில்லை. அஸ்வின் வீசிய 5-வது பந்தில் அலிஸ்டார் குக் 13 ரன்களில் க்ளீன் போல்டாகி நடையைக் கட்டினார். இங்கிலாந்து அணி 26 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

அடுத்து ஜென்னிங்ஸ், ரூட்டுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடர்ந்து காலூன்றும் நேரத்தில் ஷமி பந்துவீச அழைக்கப்பட்டார். ஷமி தொடக்கம் முதல் இங்கிலாந்து வீரர்களை மிரட்டும் வகையில் வீசினார்.

உணவு இடைவேளையின்போது 83 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜென்னிங்ஸ், ஷமி வேகத்தில் போல்டாகினார். இதை போல்டு என்று கூற முடியாது. ஷமி வீசிய 36-வது ஓவரின் முதல் பந்தை ஜென்னிங்ஸ் தடுத்து ஆட, அது பேட்டிலும், காலிலும் பட்டு ஸ்டெம்பில் விழுந்ததால் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த டேவிட் மாலனும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஷமி வீசிய 40-வது ஓவரில் 8 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மான் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஷமியின் அருமையான இன்ஸ்விங்கில் கால் கேப்பில் வாங்கினாலும், மாலன் டிஆர்எஸ் முறையை நாடினார். ஆனால், டிஆர்எஸ் முறையில் எந்தவிதமான சந்தேகமும் இன்றி, எல்பிடபிள்யு என்று உறுதியானதால், நடுவர் அவுட் அளித்தார்.

இங்கிலாந்து அணி 100 ரன்களை 36-வது ஓவரில் எட்டியது. 4-வது விக்கெட்டுக்கு ஜோய் ரூட்டுடன், பேர்ஸ்டோ இணைந்தார். இருவரும் ஓரளவு நிதானமாக பேட் செய்து ரன்களை குவிக்கத் தொடங்கினார்கள்.

107 பந்துகளில் ரூட் அரை சதம் அடித்தார். பேர்ஸ்டோ ஓரளவுக்கு அடித்து ஆட, 72 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜோய் ரூட் அரைசதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எட்டினார்.

இந்தச் சாதனையை எட்ட 5 ஆண்டுகள் 231 நாட்கள் எடுத்துக்கொண்டார் ரூட். ஆனால், அலிஸ்டார் குக் 5 ஆண்டுகள் 339 நாட்கள் எடுத்துக்கொண்டார்.

அணியின் எண்ணிக்கை 219 ரன்கள் எட்டியபோது, விராட் கோலியால் ரன் அவுட் செய்யப்பட்ட  ரூட் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

பிற்பகல் தேநீர் இடைவேளைக்குப் பின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. பேர்ஸ்டோ 70 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஷமி வேகத்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்துக் களமிறங்கிய ஜோஸ் பட்லர் ரன் ஏதும் சேர்க்காமல், அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார்,

73 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி. களத்தில் பென் ஸ்டோக்ஸ் 21 ரன்களுடனும், சாம் குர்ரன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x