Published : 01 Aug 2018 04:33 PM
Last Updated : 01 Aug 2018 04:33 PM

“இது என்னுடைய கேட்ச்”: 6-வது ஓவரில் கேட்சை நழுவ விட்ட ரஹானேவிடம் கோலி கோபம்: அஸ்வின் அசத்தல்

 பர்மிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 6-வது ஓவரிலேயே இந்திய வீரர்கள் புரிதல் இல்லாமல் கேட்சை கோட்டைவிட்டுச் சொதப்பினர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20,டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் கோட்டைவிட்டது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கி இருக்கிறது. பர்மிங்ஹாமில் தொடங்கியுள்ள இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற முறையில் களம் காண்கிறது.

கவுண்டி போட்டியிலும், பயிற்சிப் போட்டியிலும் மோசமாக விளையாடிய சட்டீஸ்வர் புஜாரா அமரவைக்கப்பட்டு, கே.எல்.ராகுல் அழைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியில் அலிஸ்டார் குக், ஜென்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். உமேஷ் யாதவும், இசாந்த் சர்மாவும் பந்துவீச்சைத் தொடங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர்.

ஆனால், இங்கிலாந்தின் இரு இடது கை பேட்ஸ்மேன்களான குக், ஜென்னிங்ஸை திணறவைக்கும் அளவுக்கு உமேஷ் யாதவால் 'இன்ஸ்விங்'குகளை வீச முடியவில்லை.

இதனால், இசாந்த் சர்மா பந்துவீச்சை மிகவும் சிரமத்துடன் எதிர்கொண்ட இருவரும், உமேஷ் யாதவ் பந்துவீச்சை அனாசயமாக எதிர்கொண்டனர். இதனால், உமேஷ் வீசிய 5-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசினார் குக்.

6-வது ஓவரை இசாந்த் சர்மா வீசினார். ஜென்னிங்ஸ் பந்தை எதிர்கொண்டார். 3-வது பந்தில் ஸ்லிப் திசையில் ஜென்னிங்ஸ் அடிக்க, கோலியின் கைகளைத் தேடி பந்து கேட்சுக்காகச் சென்றது

ஆனால், ரஹானே குறுக்கே பாய்ந்து, அந்த கேட்சை பிடிக்க முற்பட்டு நழுவவிட்டார்.

அப்போது விராட் கோலி, சற்று கோபத்துடன் இது என்னுடைய கேட்ச் (ஆங்கிலத்தில் இட்ஸ் மை கேட்ச்) என்று குரல் எழுப்பியது ஸ்டெம்ப் மைக்கில் தெளிவாக ஒலித்தது.

ஸ்லிப் திசையில் இருக்கும் பீல்டர்கள் கேட்ச் வரும் போது புரிதலுடன், ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டு கேட்சுகளை பிடித்தால்தான் எளிதாக இருக்கும். அதைவிடுத்து 2-வது ஸ்லிப்பில் இருக்கும் வீரரின் 3-வது வீரர் பிடிக்க முற்பட்டால் எதிரணிக்குத்தான் சாதகமாகும். இந்த கேட்சை பிடித்திருந்தால், 6-வது ஓவரிலேயே இங்கிலாந்து அணியின் விக்கெட்டை வீழ்த்தி இருக்கலாம்.

அதுமட்டுமல்லாமல், உமேஷ் யாதவுக்கு இடதுகை பேட்ஸ்மேன்களை திணறவைக்கும் அளவுக்கு இன்ஸ்விங் வீச முடியவில்லை. இதனால், வேறுவழியின்றி, அனுபவ வீரர் அஸ்வினை 7-வது ஓவரிலேயே கோலி பந்துவீச அழைத்தார்.

ஆனால், அஸ்வினை அழைத்தது சிறிதுகூட வீண்போகவில்லை. அஸ்வின் வீசிய 5-வது பந்தில் அலிஸ்டார் குக் 13 ரன்களில் க்ளீன் போல்டாகி நடையைக் கட்டினார். இங்கிலாந்து அணி 26 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x