Published : 01 Aug 2018 08:42 AM
Last Updated : 01 Aug 2018 08:42 AM

எட்ஜ்பாஸ்டனில் இன்று நடைபெறும் முதல் டெஸ்டில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை: 1000-ஆவது டெஸ்டில் கால்பதிக்கிறது ஜோ ரூட் குழு

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற குறுகிய வடிவிலான தொடர்களில் இந்திய அணி டி 20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றன. இந்நிலையில் இரு அணிகளும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்குகிறது.

மோசமான சுற்றுப்பயணாளர்கள் என்ற கருத்தை உடைக்கும் முனைப்பில் இந்திய அணியும், உள்ளூரில் சமீபகாலமாக கண்டுள்ள சரிவில் இருந்து மீளும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் இந்த டெஸ்ட் தொடரை அணுகுகின்றன. எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிக்கு 1000-ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இதன் மூலம் ஆயிரம் டெஸ்ட் போட்டிகளில் காலடி எடுத்து வைக்கும் முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து தட்டிச் செல்கிறது.

இந்திய அணி கடைசியாக இங்கிலாந்து மண்ணில் கடந்த 2007-ம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பின்னர் 2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில், தோனி தலைமையில் இந்திய அணி விளையாடிய நிலையில் டெஸ்ட் தொடரை முறையே 4-0, 3-1 என இழந்திருந்தது. இம்முறையும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி காண்பது என்பது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி பெற்ற 6 வெற்றிகளில் மூன்று 2002-ம் ஆண்டில் இருந்து கிடைத்தவைதான். 2002-ம் ஆண்டு லீட்ஸ் டெஸ்டில் கங்குலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றிருந்த போது, தற்போதைய அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அணியில் இடம் பெற்றிருந்தார். இதேபோல் 2007-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்திய அணி வெற்றி கண்ட போது தினேஷ் கார்த்திக் அணியில் ஒரு அங்கமாக இருந்தார்.

2011 மற்றும் 2014-ம் ஆண்டு தொடர்களில் தற்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா விளையாடியிருந்தனர். மேலும் கடந்த முறை சுற்றுப்பயணத்தில் இடம் பெற்ற 7 வீரர்கள் தற்போதைய அணியிலும் தொடர்கின்றனர். முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை. இதனால் இந்திய அணி வெற்றிக்கான உகந்த அணியை தேர்வு செய்வது அவசியம். மேலும் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது அணித் தேர்வில் செய்த தவறுகளை இம்முறை தவிர்ப்பதிலும் இந்திய அணி கவனம் செலுத்தக்கூடும்.

அந்த சுற்றுப்பயணத்தில் அஜிங்க்ய ரஹானேவைவிட சமீபத்திய பார்மை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவுக்கு முன்னிலை கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய அணிக்கு எதிர்மறையான விஷயங்களே கிடைக்கப் பெற்றது. இம்முறை சிறந்த பார்மில் உள்ள கே.எல்.ராகுல் தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.   கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கே.எல்.ராகுலை 3-வது தொடக்க வீரராகவே கருதி வருகின்றனர்.

எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ராகுல் முதல் இன்னிங்ஸில் 58 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 36* ரன்களும் சேர்த்து கவனத்தை ஈர்த்திருந்தார். இதனை இந்திய அணி நிர்வாகம் கருத்தில் கொள்ளக்கூடும். அதேவேளையில் இதற்கு முரணாக தொடக்க வீரரான ஷிகர் தவணின் பார்மும், சேதேஷ்வர் புஜாராவின் பார்மும் அணியை கவலையடையச் செய்துள்ளது. பயிற்சி ஆட்டத்தில் ஷிகர் தவண் இரு இன்னிங்ஸையும் சேர்த்து வெறும் 4 பந்துகளை மட்டுமே சேர்த்த நிலையில் ரன்கள் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார்.

2014-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது நன்கு நகரும் டியூக் பந்துகளுக்கு எதிராக ரன்கள் சேர்க்கத் திணறிய இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவண், 3 டெஸ்ட் போட்டிகளில் 122 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் அணியில் தனக்கான இடத்தை இழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இதனால் தனது பேட்டிங் யுக்தியில் ஷிகர் தவண் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளார்.

இதேபோன்று புஜாராவும் தடுமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளார். கவுண்டி கிளப்பில் யார்க் ஷையர் அணிக்காக விளையாடிய அவர், 6 ஆட்டங்களில் ஒரு அரை சதத்தை கூட எட்டாத நிலையில் 14.33 சராசரியுடன் வெறும் 172 ரன்களை மட்டுமே சேர்த்தார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் கூட புஜாரா சிறப்பாக பேட் செய்யவில்லை. பெங்களூருவில் நடைபெற்ற அந்த டெஸ்டில் அவர் 35 ரன்களே எடுத்தார். மேலும் எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா முறையே 1 மற்றும் 23 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்.

2014-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் புஜாரா 5 ஆட்டங்களில் 22.20 சராசரியுடன் 222 ரன்களே எடுத்தார். இது பலரது கவனத்தை ஈர்க்கவில்லை. ஏனெனில் இது விராட் கோலி சேர்த்த (134) ரன்களை விட சற்று அதிகமானதுதான். இம்முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமானால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறந்த பார்முக்கு திரும்புவது மிக அவசியம். அதேவேளையில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவண், முரளி விஜய் ஜோடியை இந்திய அணி நிர்வாகம் களமிறக்க முடிவு செய்தால் 3-வது இடத்தில் புஜாராவுக்கு பதிலாக கே.எல்.ராகுலை கொண்டு வருவது குறித்து சற்று ஆலோசிக்கலாம்.

ஆனால் புஜாராவை நீக்கும் முடிவை அணி நிர்வாகம் எடுக்குமா என்பது சந்தேகம்தான். ஒருவேளை கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அணி நிர்வாகம் நினைத்தால் முரளி விஜய் இடம்தான் காவு வாங்கப்படக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவு தான். அதேவேளையில் ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் கவுண்டி போட்டிகளில் விளையாடியதன் மூலம் இங்கிலாந்து தொடருக்கு சிறப்பான வகையில் தயாராகி உள்ளனர். இவர்களுடன் உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

பர்மிங்ஹாமில் வறண்ட வானிலை மாறி தற்போது அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆடுகளம் ஈரப்பதத்துடன், புற்கள் நிறைந்தே காணப்படக்கூடும். குளிர்ந்த வானிலையும், காற்றில் காணப்படும் ஈரப்பதமும் ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமான விஷயம் என்பதால் இந்திய அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த அஸ்வினை களமிறக்குவதா? அல்லது குறுகிய வடிவிலான தொடர்களில் திறம்பட செயல்பட்ட குல்தீப் யாதவை களமிறக்குவதா? என்பதில் விராட் கோலிக்கு சற்று குழப்பம் ஏற்படக்கூடும்.

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. எனினும் இங்கிலாந்து அணியின் சமீபகால பார்ம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்பது தற்போதைக்கு இந்திய அணிக்கு சாதகமான விஷயம். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

அதிலும் இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இரு முறை எதிரணிகளால் (பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள்) தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆட்டங்களிலும் எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை சரியாக பயன்படுத்தினர். இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பெரும்பாலும் கேப்டன் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், அலாஸ்டர் குக் ஆகியோரை நம்பியே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை இவர்களுடன் பேட்டிங்கில் கீட்டன் ஜென்னிங்ஸ், டேவிட் மலான், ஜாஸ் பட்லர் ஆகியோரும் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸூம் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு ஆகியோர் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் கொடுக்க காத்திருக்கின்றனர். இவர்களுடன் இடது கை வேகப்பந்து வீச்சாளரான சேம் குர்ரனும் பலம் சேர்க்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் 18 மாதங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ள அடில் ரஷித் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ரஷித் களமிறங்குவதால் 2014-ம் ஆண்டு தொடரில் 19 விக்கெட்கள் கைப்பற்றிய மொயின் அலி தனது இடத்தை இழந்துள்ளார்

இது வரலாறு

இந்தியா, இங்கிலாந்து அணிகள் முதன்முறையாக 1932-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் மோதின. இதுவரை இரு அணிகளும் 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து 43 வெற்றிகளைக் குவித்துள்ளது. 25-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது. 49 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

இங்கிலாந்தில் மட்டும் 57 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து 30-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்தியா 6 டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி கண்டது. 21 டெஸ்ட் போட்டிகள்  டிராவில் முடிவடைந்தன.

எட்ஜ்பாஸ்டன் ராசி

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மட்டும் இந்தியாவும், இங்கிலாந்தும் 6 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5-ல் இங்கிலாந்து வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

இங்கிலாந்தும் எட்ஜ்பாஸ்டனும்

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்  தனது 50-வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து விளையாடுகிறது. 1902-ல் தனது முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி இந்த மைதானத் தில்தான் விளையாடியது. இந்த மைதானத்தில் 27 டெஸ்ட் போட்டி களில் வெற்றியும், 8-ல் தோல்வியும், 15-ல் டிராவையும் பெற்றுள்ளது.

1000-வது டெஸ்ட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 357 வெற்றிகளையும், 297 தோல்விகளையும்  பெற்றுள்ளது.   345 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

தோனியின் வீழ்ச்சிக்கு வித்திட்ட பயணம்

1971-ல் வடேகர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தது. இதன் பின்னர் 1986-ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்று சாதித்தது. இதைத் தொடர்ந்து 21 வருடங்களுக்குப்பிறகு 2007-ல் ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.

கடைசியாக 2014-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என இழந்தது. அப்போது முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த போதும் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தோனியின் வீழ்ச்சிக்கு இந்தத் தொடர் பிரதான காரணமாக அமைந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x