Published : 30 Jul 2018 06:09 PM
Last Updated : 30 Jul 2018 06:09 PM

இங்கிலாந்து அணி இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை இழக்க வாய்ப்பு- ஏன்? : ஓர் அலசல்

இந்திய அணி இங்கிலாந்தில் சரியாக ஆடியதில்லை என்பது ஒருபுறமிருக்க சமீபமாக இங்கிலாந்து அணியே இங்கிலாந்தில் சரியாக ஆடாமல் தோல்விகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

2010-13 காலக்கட்டத்தில் தங்கள் நாட்டில் 26 டெஸ்ட் போட்டிகளில் 17-ல் வென்று டாப் ரேங்க் அணியாக இருந்தது, ஆனால் அதன் பிறகு டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 5 இடத்துக்குச் சென்றது. 2014 முதல் இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் 1-0 என்று தோற்றது. இதனுடன் சேர்த்து 30 டெஸ்ட் போட்டிகளில் உள்நாட்டில் 10 போட்டிகளில் உதைவாங்கியுள்ளது. இதற்குச் சில காரணங்களைக் கூற முடியும், தொடக்க வீரர்கள் புதிய பந்து தேயும் வரை நிற்பதில்லை இதனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சடுதியில் புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

புதிய பந்தின் முதல் 15 ஓவர்களில் விக்கெட்டுகள் விழாமால் தொடக்க வீரர்கள் ஆடும்போதெல்லாம் பெரும்பாலும் 350 ரன்கள் முதல் இன்னிங்ஸ் ஸ்கோராக இருக்கும் போது இங்கிலாந்து வெற்றி பெறுகிறது, அல்லது குறைந்தது தோற்காமல் இருந்துள்ளது.

கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் விக்கெட் இழக்காமல் 15 ஓவர்களை பேட் செய்ததில்லை. தொடக்க வீரர்கள் சொதப்பி, மிடில் ஆர்டர் விரைவில் புதிய பந்தை எதிர்கொள்ள நேரிடும் போது வெற்றிபெறத் தேவையான, அல்லது பாதுகாப்பான 350 ரன்களை அது எட்ட முடியவில்லை.

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 2012-ல் ஓய்வு பெற்ற பிறகே அலிஸ்டர் குக்குடன் நிறைய பேர் தொடக்கத்தில் இறங்கிவிட்டனர். அலிஸ்டர் குக்கே கூட மே.இ.தீவுகளுக்கு எதிராக அடித்த 243 ரன்களுக்குப் பிறகு சரியாக ஆடவில்லை. தொடங்குகிறார் ஆனால் கைவிட்டு விடுகிறார். அவரது பேட்டிங் உத்தியிலும் நிறைய மாற்றங்கள் செய்து கொண்டுள்ளார், இந்த இடத்தில் இந்திய அணி சரியாகத் திட்டமிட்டால் அலிஸ்டர் குக்கைக் காலி செய்யலாம், இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் அலிஸ்டர் குக்கை முதலில் தூக்கி வெளியே அனுப்ப வேண்டும். இதற்கான உத்திகளை வகுக்க வேண்டும். அவர் சமீபமாக நிறைய எல்.பி.க்கள் ஆகிறார் இதையும் இந்திய பவுலர்கள் குறித்துக் கொண்டிருப்பார்கள்.

இன்னொரு பெரிய வீரர் ஜோ ரூட், இவர் புதிய பந்தை எதிர்கொள்ள அடிக்கடி நேரிட்டாலும், போராடி அரைசதங்களை எடுத்து அணியை மீட்கிறார், ஆனால் அரைசதங்கள் சதமாவதில்லை, இந்த ஒரு இடத்தையும் இந்திய அணி கவனிக்க வேண்டும், ஜோ ரூட்டை மிஞ்சிப் போனால் அரைசதம் என்ற அளவோடு நிறுத்தி விட்டால் நிச்சயம் இந்திய அணி இங்கிலாந்தை 250 ரன்களுக்குக் குறுக்கலாம். அரைசதத்தை சதமாக மாற்றுவதில் இவருக்கு சமீபத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன, ஆகவே இந்திய அணி இப்பகுதியையும் கவனம் செலுத்தி திட்டமிட வேண்டும்.

பந்துவீச்சில் மொயின் அலி 2014 தொடரில் இந்திய அணியைப் படுத்தி எடுத்தாலும், சமீபமாக அவரது பந்து வீச்சு சோபிக்கவில்லை, இவரை பம்மிப் பம்மி ஆடக்கூடாது, இந்திய அணியின் பழைய மிடில் ஆர்டரான திராவிட், சச்சின், லஷ்மண் போல் இவரை வெளுத்து வாங்க வேண்டும்.

அதே போல் இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் நீங்கலாக 3வது வேகப்பந்து வீச்சாளரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏகப்பட்ட 3வது பவுலர்கள் வந்தனர். கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், ஸ்டீவ் ஃபின், ஜேக் பால், ஓவர்டன், ரோலண்ட் ஜோன்ஸ் என்று அனைவரும் அடியும் வாங்கினர் விக்கெட்டுகளையும் கைப்பற்றினர் இதில் ரோலண்ட் ஜோன்ஸ் காயத்தினால் போனது இங்கிலாந்துக்கு பின்னடைவு, இவர் மட்டுமல்ல இந்த 3வது பவுலர்கள் அனைவருமே காயத்தினால் அணியில் இடம்பெற முடியவில்லை.

3வது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கூட 4 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆட முடிந்ததில்லை. எனவே இந்த 3வது வேகப்பந்து வீச்சாளரைக் குறிவைத்து இந்திய பேட்ஸ்மென்கள் திட்டமிட்டால் இங்கிலாந்து ஆடிப்போய்விடும். ஆண்டர்சன், பிராட் ஓவர்களை நிதானமாக ஆடிப் பார்த்து ஓரங்கட்டி விட்டு 3வது வேகப்பந்து மற்றும் ஸ்பின்னர்களைத் தாக்கினால் இங்கிலாந்து நிச்சய ஆடிப்போய்விடும்.

மிகப்பெரிய பிரச்சினை இங்கிலாந்தின் பீல்டிங்; தவறவிடும் கேட்ச்கள்

இங்கிலாந்தின் நிரந்தரப் பிரச்சினை அதன் பீல்டிங். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ புள்ளிவிவரங்களின் படி கடந்த 2 ஆண்டுகளில் 25 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 71 கேட்ச்களை விட்டுள்ளது.

இதில் தங்கள் நாட்டில் விளையாடிய போட்டிகளில் விட்ட கேட்ச்கள் அதிகம் இவையெல்லாம் இங்கிலாந்தின் சமீபத்திய தோல்விக்குக் காரணங்கள் இதனை இந்தியா சரிவர புரிந்து கொண்டு இலக்கு நிர்ணயித்து, திட்டமிட்டு ஆடினால் இங்கிலாந்து தோற்பதைத் தவிர வேறு வழியில்லை. அதே வேளையில் இந்தத் தவறுகளை இந்திய அணியும் செய்யாமல் இருப்பது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x