Published : 29 Jul 2018 04:58 PM
Last Updated : 29 Jul 2018 04:58 PM

களப்போராட்டத்தில் ஐபிஎல் நட்பையெல்லாம் பாராட்ட முடியாது: ஜோஸ் பட்லர் அதிரடி

ஐபில் தொடரில் இங்கிலாந்து, இந்திய வீரர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டிருக்கலாம் ஆனால் டெஸ்ட் போட்டியின் உஷ்ணத்தில் களத்தில் அதையெல்லாம் பாராட்ட முடியாது என்று இங்கிலாந்தின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ் வோக்ஸ், மொயின் அலிக்கு ஐபிஎல்-ல் கேப்டனாக இருந்த விராட் கோலி இங்கிலாந்து வீரர்களுடன் களத்தில் முன்னேற்றமடைந்த நட்பு ஏற்படும் என்று நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில், ஜோஸ் பட்லரோ ஐபிஎல் நட்பெல்லாம் களத்தின் உஷ்ணத்தில் பறந்து விடும் என்று கூறியுள்ளார்.

“சில இந்திய வீரர்களுடன் ஆடியுள்ளேன். ஆனால் களத்தில் அவை மறக்கப்படும். அனைவரும் போட்டி மனப்பான்மையுடன் தான் ஆடுவார்கள். பழகிய முகங்கள் இருக்கலாம், கிரிக்கெட்டை விடவும் கூடுதலாக சிலருடன் பழகியிருக்கலாம், இது நடப்பு கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய விஷயமே. முன்னெப்போதையும் விட இப்போது எதிரணி வீரர்கள் நம்மிடையே பிரசித்தமாக உள்ளனர்.

ஆனால் களத்தில் நட்பு இல்லை. பயிற்சி நாட்கள், உணவு மேஜை என்று நட்பு இருக்கலாம். மொயின் அலி, விராட் மற்றும் சாஹலுடன் ஆடியுள்ளார். அவர்கள் நன்றாகப் பழகியது எனக்குத் தெரியும். ஹர்திக் பாண்டியாவுடன் நான் ஆடியிருக்கிறேன். எனவே சிலபல வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளலாம்.

ஆனால் களத்தில் சில கணங்களில் டெஸ்ட் போட்டியின் உஷ்ணத்தில் அவையெல்லாம் மறக்கப்படும். நிச்சயம் போட்டி அதிகமிருக்கும். நட்புடன் பழகலாம் ஆனால் களத்தில் இறங்கும்போது அனைவருமே வெற்றிக்குத்தான் ஆடுவர். களத்துக்கு வெளியே சிறிது நட்பு இருக்கலாம்.

ஐபிஎல் ஆடியதில் நான் கற்றுக் கொண்டதில் சிறந்தது என்னவெனில் ஏன் அவர்கள் சிறந்த வீரர்களாக இருக்கிறார்கள் என்பதையே. அவர்கள் மனநிலையே வேறு. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மன நிலை. சீராக இதனைச் செய்வதற்கான முனைப்பு ஆகியவற்றை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

குறிப்பாக விராட் கோலி, மிகவும் ஆழமான திறமை கொண்ட வீரர், அவர் ஆடும்போது பார்த்ததை வைத்துக் கூறினால் ஆதிக்கம் செலுத்தும் அந்த மனநிலை நன்றாகத் தெரிந்தது. கோலி, ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோரையும் இம்மாதிரி நான் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

என் முதல் சதத்தை எடுக்க ஆவலோடு இந்தியத் தொடருக்காகக் காத்திருக்கிறேன்” இவ்வாறு கூறினார் பட்லர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x