Last Updated : 29 Jul, 2018 04:07 PM

 

Published : 29 Jul 2018 04:07 PM
Last Updated : 29 Jul 2018 04:07 PM

9 ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றி: மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்

தமிம் இக்பாலின் அபார சதத்தால், செயின்ட் கிட்ஸ் நகரில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது வங்கதேசம் அணி.

கடந்த 9 ஆண்டுகளுக்குப்பின், ஆசிய கண்டத்துக்கு பின் வெளியே, வங்கதேசம் அணி வெல்லும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். அதுமட்டுமல்லாமல், மேற்கிந்தியத்தீவுகளில் வங்கதேசம் வெல்லும் 2-வது ஒருநாள் தொடர் மற்றும் ஒட்டுமொத்தமாக அந்த அணிக்கு எதிராக வங்கதேசம் வெல்லும் 3-வது தொடர் இதுவாகும்.

இதன் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தோல்வி கடந்த 4-வது ஆண்டாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக மேற்கிந்தியத்தீவுகள் அணி, எந்த நாட்டுக்கு எதிராகவும் எந்த தொடரையும் வெல்ல முடியாமல் திணறிவருகிறது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 124 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். தமிம் இக்பால் இந்த ஒருநாள் தொடரில் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். இவரின் சதமே வங்கதேசம் அணி இமாலய ஸ்கோரை எட்டவும், வெற்றி பெறவும் முக்கியக் காரணமாக அமைந்தது. ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதுகளை இக்பால் பெற்றார்.

டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் குவித்தது. மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக வங்கதேசம் அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

302 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

வங்கதேசம் தரப்பில் தமிம் இக்பால், இமானுல் ஹக் ஆட்டத்தைத் தொடங்கினர். இமானுல் ஹக் 10 ரன்களில் நடையைக் கட்டினார். 2-வது விக்கெட்டுக்கு வந்த சகிப் அல்ஹசன், இக்பாலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார். சிறப்பாக ஆடிய இக்பால் 66 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

2-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தபோது, 37 ரன்களில் சகிப் அல்ஹசன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முஸ்பிகுர் ரஹிம் 12 ரன்களில் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு மகமதுல்லாவுடன் சேர்ந்தார் இக்பால். இருவரும் ரன்களை வேகமாகச் சேர்த்தனர்.

120 பந்துகளில் தமிம் இக்பால் இந்த தொடரில் தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார். அடுத்து சில நிமிடங்கள் நீடித்த அவர் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மோர்தசா 36 ரன்கள் ,சபிர் ரஹ்மான் 12 ரன்களில் வெளியேறினார்கள். அதிரடியாக ஆடிய மகமதுல்லா 44 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

50 ஓவர்கள் முடிவில் மகமதுல்லா 67 ரன்களுடனும், ஹூசைன் 11ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் நர்ஸ், ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

302 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மேற்கிந்தியத்தீவுகள் வீர்கள் கெயில், லிவிஸ் களமிறங்கினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். 53 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு சேர்த்த நிலையில், லீவிஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஹோப், கெயிலுடன் இணைந்தார்.

அதிரடியாக பேட் செய்த கெயில் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். 66 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து கெயில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.

ஹோப் 94 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து வெளியேறினார். நடுவரிசையில் களமிறங்கிய ஹெட்மேயர் 30 ரன்கள், ஆன்ட்ரூ பாவெல் 4 ரன்களில் வெளியேறினார்.

டி20 போட்டி போன்று அதிரடியாக ஆடிய ரிக்கார்டோ பாவெல் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், இவருக்கு உறுதுணையாக பேட் செய்ய அடுத்தடுத்துவீரர்கள் இல்லை. ஜேஸன் ஹோல்டர் 9 ரன்களில் வெளியேறினார். நர்ஸ் 5 ரன்களுடனும், பாவெல் 44பந்துகளில் 71 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் சேர்த்தது. வங்கதேசம் தரப்பில் மோர்தசா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x