Published : 28 Jul 2018 04:16 PM
Last Updated : 28 Jul 2018 04:16 PM

பயிற்சிப்போட்டியில் 2 இன்னிங்ஸிலும் தவண் டக்அவுட்: முதல் டெஸ்டில் கழற்றிவிடப்படுவாரா?- முரளிவிஜய்- ராகுல் களமிறங்க வாய்ப்பு?

இங்கிலாந்து எசெக்ஸ் அணியுடனான 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் 2 இன்னிங்ஸிலும் டக் அவுட் அடித்த ஷிகர் தவண் முதல் டெஸ்ட்டில் கழற்றிவிடப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவருக்குப் பதிலாக முரளி விஜயுடன் இணைந்து, கே.எல்.ராகுல் களமிறங்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது, ஆனால், ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் பறிகொடுத்தது. ஆகஸ்ட் 1-ம் தேதிமுதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி சவுத்தாம்டனில் நடக்கிறது.

அதற்கு முன்பாக, எசெக்ஸ் அணியுடன் 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஷிகர் தவண் இரு இன்னிங்ஸிலும் ரன் ஏதும் சேர்க்காமல் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஷிகர் தவண் டக் அவுட் அடித்து ஆட்டமிழந்து இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தவணின் மோசமான ஃபார்ம்

இங்கிலாந்து தொடரில் இருந்து ஷிகர் தவணின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. கத்துக்குட்டி அயர்லாந்து அணிக்கு எதிராக மட்டுமே ஷிகர் தவண் நன்றாக பேட் செய்தார். அதன்பின் இங்கிலாந்து அணியுடனான டி20, ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் தவண் சொதப்பிவிட்டார். எந்தப் போட்டியிலும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ரன் ஏதும் சேர்க்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும், 40, 36,44 ரன்கள் மட்டுமே தவண் சேர்த்தார். 3 டி20 போட்டிகளில் 4, 10,5 ஆகிய ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 50 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஷிகர் தவண் 2,153 ரன்கள் சேர்த்துள்ளார். 43.93 ரன்கள் சராசரி வைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் டெஸ்ட் போட்டியில் 550 ரன்கள் சேர்த்துள்ளார். இரு சதங்கள் இலங்கை அணிக்கு எதிராகச் சேர்த்துள்ளார்.

2018-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் 16, 16 ரன்களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராகச் சதமும் அடித்துள்ளார். கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராகச் சதம் அடித்து தனது புஜபலத்தைக் காட்டும் ஷிகர் தவண் ஆசியக் கண்டத்தைவிட்டு வெளியே விளையாடச் செல்லும்போது பேட்டிங்கில் சொதப்பிவிடுகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிகர் தவண், 5 டெஸ்ட் போட்டிகளிலும் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். தவண், 12, 29, 7, 31, 6, 37 ரன்கள் மட்டுமே கடந்த இங்கிலாந்து தொடரில் சேர்த்தார்.

இப்போது எசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பொறுப்பற்ற முறையில் பேட் செய்து இரு இன்னிங்ஸ்களிலும் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்கத் தெரியாமல் டக்அவுட் ஆகிய உள்ளார். முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளநிலையில், பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத தவணை களமிறக்குவது எந்தவிதத்தில் சரியாக இருக்கும். அவருக்கு விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் அளிக்க வேண்டுமா

கே.எல் ராகுல்

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கே.எல்ராகுல். இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் சதம் அடித்து தொடரை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். ஆனால், ஒருநாள் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.

கே.எல்ராகுலின் டெஸ்ட் வரலாற்றைப் ஆய்வு செய்தால், வெளிநாடுகளில் பங்கேற்ற பெரும்பாலான தொடர்களில் சதம், அரைசதம் அடித்து தனது பேட்டிங் நிலைத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய, இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் சதம் அடித்துள்ளார். ஷிகர் தவணுடன் ஒப்பிடும்போது வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடக்கூடியவராக ராகுல் இருந்துவருகிறார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ராகுல் 90சதவீத போட்டிகளில் அரைசதம் அடித்து தனது ஃபார்மை நிரூபித்துள்ளார்.

ஆனால், இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கத் தொடரில் தவண் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியத் தொடர்ந்து கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது ஆனால், அதில் ராகுல் 10, 4, 0,16 என சொதப்பினார். இதனால், ஆப்கானிஸ்தான் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இங்கிலாந்து தொடருக்கு தேர்வுசெய்யப்பட்ட ராகுல், எசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாகவே பேட் செய்தார். 12 பவுண்டரிகள் உள்ளிட்ட 58 ரன்களும், 36 ரன்கள் என இரு இன்னிங்ஸிலும் சேர்த்தார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சைச் சமாளித்துவிளையாடக்கூடிய அளவுக்கு ராகுல் திறமையாக இருப்பதால், முதல் டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியல் ராகுலைத் தேர்வு செய்யலாம்.

சத்தீஸ்வர் புஜாரா

டெஸ்ட் போட்டி என்றாலே புஜாராவுக்கு தனி இடம் என்ற அளவில் டெஸ்ட் வீரராக மாறிவிட்டார். இன்னும் 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார் புஜாரா. அணியில் 3-வது இடத்தில் களமிறங்க புஜாரா சிறந்த வீரர்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே இங்கிலாந்தில் கவுண்டி அணியில் விளையாடி புஜாரா தயாராகி வந்தார். புஜாரா தான் விளையாடிய கவுண்டி போட்டியில், 172 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஆனால், சசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப்போட்டியில் புஜாரா எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. 35 பந்துகளைச் சந்தித்த புஜாரா 23 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டியில் தவிர்க்க முடியாத வீரராகவும், அதேசமயம், 3-வது இடத்துக்குபொருத்தமானராக இருக்கிறார் என்பதால், புஜாரா முதல் போட்டியில் இடம் பெறலாம்.

முரளி விஜய்

இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய். கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஓரளவுக்கு விளையாடினார். கடந்த ஆண்டு உள்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடர் பெரும்பாலானவற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் தென் ஆப்பிரிக்கத் தொடரில் குறிப்பிட்ட பங்களிப்பு ஏதும் செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 104 ரன்கள் சேர்த்தார். சசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 53 ரன்கள் சேர்த்து தனது பார்மை நிரூபித்துள்ளார்.

ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக, பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத ஷிகர் தவணை, முரளி விஜயடன் களமிறக்குவதற்குப் பதிலாக, கே.எல்ராகுலை களமிறக்கலாம். தவணுக்கு ஓய்வு அளிக்கலாம். புஜரா 3-ம் இடத்தில் நிலைத்து விளையாடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கக்கூடியவர் என்பதால், அவர் அணியில் தொடரலாம்.தவணின் பேட்டிங் ஃபார்மை கருத்தில் கொண்டு முதல் போட்டியில் பெஞ்சில் அமரவைக்கப்படுவாரா என்பது விரைவில் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x