Last Updated : 26 Jul, 2018 09:41 PM

 

Published : 26 Jul 2018 09:41 PM
Last Updated : 26 Jul 2018 09:41 PM

தீப்பொறி பறக்கும் பார்மில் இருக்கும் ஃபகார் ஜமானை வீழ்த்துவது எப்படி? - இந்திய பவுலர்களுக்கு மைக் ஹஸ்ஸி ஆலோசனை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியப் பந்து வீச்சைப் புரட்டி எடுத்து 106 பந்துகளில் 114 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கியமாகத் திகழ்ந்த ஃபகார் ஜமான் சமீபத்தில் தீப்பொறி பறக்கும் பார்மில் இருந்து வருகிறார், ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததோடு பல ஒருநாள் சாதனைகளை அந்தத் தொடரில் முறியடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இவரைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்ஸி இந்திய பவுலர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

“பகார் ஜமானுக்கு எதிராக இந்தியாவின் உத்தி அருமையாக இருக்க வேண்டும். டைட்டான லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும். கட்டுக்கோப்பாக வீசி இம்மியளவும் பிசகாமல் அவர் மீது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும். ரன் இல்லாத பந்துகளை அதிகம் வீசினால் அவர் ஏதாவது தூக்கி அடிக்கப் போய் ஆட்டமிழப்பார். தொடக்கத்திலேயே அவரை பெரிய ஷாட்களுக்குப் போக வைத்தால் அவரை வீழ்த்தி விடலாம்.

பந்தை வெளுத்துக் கட்ட அவர் ஆடுவதால் பந்தின் வேகத்தைக் குறைத்து வீசும் பந்துகள் கைகொடுக்கும். ஏனெனில் அவர் பந்தை வாரிக்கொண்டு அதிரடியாக ஆட முற்படுபவர், இதனால் கொஞ்சம் வேகம் குறைத்து வீசினால் அவுட் ஆக வாய்ப்பு உண்டு.

ஏன் இதனைக் கூற வேண்டியிருக்கிறது என்றால், அவர் என்ன மாதிரியான ஃபார்மில் இருக்கிறார்!! இந்தியாவுக்கு எதிராக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி சதத்தை அவர் விரைவில் மறக்கக்கூடிய அளவுக்கு அடுத்தடுத்து பெரிய இன்னிங்ஸ்களை ஆடி வருகிறார்.

மிகவும் உற்சாகமான வீரர், மிகுந்த தாக்குதல் மனோபாவம் உள்ளவர், பயமற்ற முறையில் வருவது வரட்டும் என்று ஆடுவதால் அவரைப் போன்றோருக்கு வீசுவது கடினம். மைதானத்தின் சகலதிசைகளிலும் அடிக்கிறார். எனவே பவுலர்கள் பிழைசெய்ய வழியில்லை. பிழை செய்தால் பிளந்துகட்டி விடுவார்” என்று கூறியுள்ளார் மைக் ஹஸ்ஸி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x