Published : 24 Jul 2018 06:45 PM
Last Updated : 24 Jul 2018 06:45 PM

“கிரிக்கெட்டின் தாய்நாடு” இங்கிலாந்து புதிய மைல் கல்: இந்திய டெஸ்ட் தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகம்

இந்தியாவுக்கு எதிராக பர்மிங்ஹாமில் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டின் தாய்நாடு என அழைக்கப்படும் இங்கிலாந்துக்கு மறக்க முடியாத மைல்கல் போட்டியாக அமையும்.

சர்வதேச டெஸ்ட் அரங்கில், இங்கிலாந்து அணி தனது ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது என்பதால், வெற்றிக்காக வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக அந்த அணி வீரர்கள் உழைப்பார்கள்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால், ஒரு நாள் தொடரை 1-2 என்று கணக்கில் இங்கிலாந்திடம் பறிகொடுத்தது.

இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டி இங்கிலாந்து அணிக்கு 1000-வது போட்டியாகும்.

கடந்த 1877-ம் ஆண்டு மார்ச் 15 முதல் 19-ம் தேதிவரை இங்கிலாந்தும், ஆஸ்திரேலிய அணியும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடின.

அதன்பின் ஏறக்குறைய நூற்றாண்டுகளாக கிரிக்கெட் விளையாடி, பல்வேறு நாடுகளுக்கும் கிரிக்கெட்டின் அடிச்சுவடியை கற்றுக்கொடுத்த இங்கிலாந்து ஆகஸ்ட் 1-ம் தேதி தனது ஆயிரமாவது போட்டியில் பிர்மிங்ஹாமில் நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

2018-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதிவரை இங்கிலாந்து அணி 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 357 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 297 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 345 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. மிகவும் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து அணி 32 முறை வென்றுள்ளது.

இந்திய அணி கடந்த 1932-ம் ஆண்டு டெஸ்ட் போட்டி விளையாடும் அந்தஸ்தைப் பெற்றது. 2016-ம் ஆண்டுவரை இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 25 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. 43 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது, 49 போட்டிகளை டிரா செய்துள்ளது.

இந்தியாவின் வெற்றி சதவீதம் என்பது 21சதவீதமாகும். அதேசமயம், இங்கிலாந்தின் வெற்றி சதவீதம் 37 சதவீதமாகும்.

இந்நிலையில், இங்கிலாந்து அணி தனது ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால், அந்தப் போட்டியில் கிடைக்கும் வெற்றி மிகவும் மறக்கமுடியாத வகையில் இருக்க வேண்டும் என்று விரும்பும், வெற்றிக்காகக் கடுமையாக உழைக்கும். மேலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று உற்சாகத்துடன் இருப்பதால், இங்கிலாந்து அணி வெற்றிக்காக கடும் பிரயத்தனம் செய்யும்.

மேலும், ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் போன்ற ஸ்விங் பந்துவீச்சார்களுடன் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியை எதிர்கொள்வதால், முதல் போட்டியில் இருந்து இந்திய அணிக்கு கடும் நெருக்கடி தரும் விதத்தில் விளையாடும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x