Published : 24 Jul 2018 04:10 PM
Last Updated : 24 Jul 2018 04:10 PM

என் முதல் டெஸ்ட் சதத்தின் இனிய நினைவுகளை அழிக்கும் முயற்சி: ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டை மறுக்கும் கிளென் மேக்ஸ்வெல் வேதனை

2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளை ஆடிய போது ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’கில் ஆஸி.வீரர்கள் ஈடுபட்டதாக அல்ஜசீரா புலனாய்வு ஆவண வீடியோ வெளியிட்டது. தற்போது கிளென் மேக்ஸ்வெலையும் இதில் இழுத்து விட்டது குறித்து அவர் கடுமையாக வருத்தமடைந்துள்ளதோடு குற்றச்சாட்டுகளை மேக்ஸ்வெல் தீவிரமாக மறுக்கவும் செய்துள்ளார்.

மேக்ஸ்வெல் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் ஸ்பாட் பிக்சிங் நடைபெற்றதாக கூறப்படும் தருணம், காட்டப்பட்ட ஹெல்மெட் ஆகியவை மேக்ஸ்வெலுக்கு எதிராக சாட்சியமாகியுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் சிலபல சந்தேகங்களில் மேக்ஸ்வெல் பெயர் அடிப்பட்டதும் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

பல்வேறு மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் குறித்து ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு விசாரித்து வரும் நிலையில் மேக்ஸ்வெல் இன்னமும் விசாரிக்கப்படவில்லை. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் அவரை விசாரணை செய்யவில்லை, ஆனால் இந்த வீடியோ வெளியிடப்படப்போவதாக மேக்ஸ்வெலிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் கூறியதாவது:

எனக்கு அதிர்ச்சியாக உள்ளது, என்னை இது காயப்படுத்துகிறது. ஈடுபாட்டுடன் ஒரு ஆட்டத்தில் ஆடி அதில் என் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தது பற்றி மகிழ்ச்சியான் நினைவுகள் மட்டுமே என்னிடம் உள்ள நிலையில்... சதம் எடுத்த பிறகு ஸ்டீவ் ஸ்மித்தை நான் அணைத்துக் கொண்டதும் மிகப்பெரிய நினைவுகளாக என்னிடம் உள்ளது.

இத்தகைய மகாநினைவுகளை இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளால் களங்கப்படுத்தப்படுவது என்னை நொறுக்குகிறது. நிச்சயம் இதில் எள்ளளவும் உண்மையில்லை. என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணத்தின் மீது கரி பூச மேற்கொள்ளப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் நியாயமற்றவை, அராஜகமானவை.

2015 உலகக்கோப்பை வெற்றியையும் இப்படித்தான் களங்கப்படுத்தினார்கள். என்னுடைய இரண்டு மிகப்பெரிய நினைவுகள் இவை. டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் அழைக்கப்பட்ட தருணத்தில் நான் என்னை நிரூபிக்கக் கடமைப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிலையில் நான் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டேன் என்பது முற்றிலும் முட்டாள்தனமானது.

அல்ஜசீரா பெயர்களை வெளியிட்டிருந்தால் அவர்கள் மீது பெரிய விமர்சனம் எழுந்திருக்கும். அவர்கள் பெயர்கள் எதையும் குறிப்பிடவில்லை, ஆட்டத்தின் குறிப்பிட்ட தருணத்தைக் குறிப்பிட்டுள்ளனர். அப்போது நான் கிரீசில் இருந்தேன். நான் பயன்படுத்திய ஹெல்மெட் காட்டப்படுகிறது. அப்போது என்னைத் தவிர அந்த ஹெட் கியரை யாரும் பயன்படுத்தவில்லை. இதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளிடம் நான் 100% நேர்மையாக இருந்திருக்கிறேன். ஏதாவது தவறு நிகழும் அறிகுறி இருந்தால் நான் அவர்களிடம் நீண்ட நேரம் இது குறித்து பேசியுள்ளேன்.

இவ்வாறு கூறியுள்ளார் மேக்ஸ்வெல். அல்ஜசீரா வீடியோவில் 2 ஆஸி.வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x