Published : 24 Jul 2018 12:11 PM
Last Updated : 24 Jul 2018 12:11 PM

ஜார்கண்டில் கடந்த ஆண்டு மிக அதிகமாக வருமான வரி செலுத்திய எம்.எஸ். தோனி

ஜார்கண்ட் பிஹார் மண்டலத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மிக அதிகமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரூ.12.17 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி, கடந்த 2016-ம் ஆண்டு டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இருந்தபோதிலும், வீரர்களுக்கான ஊதியப் பட்டியலில் ஏ பிரிவில் தோனியை வைத்துள்ளது பிசிசிஐ அமைப்பு. அதுமட்டுமல்லால், அதிகமான விளம்பரங்கள், நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போன்றவற்றின் மூலம் தோனிக்கு ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் வருவாய் வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கடந்த 2016-17-ம் ஆண்டு எம்.எஸ். தோனி முன்தேதியிட்ட வருமான வரியாக ரூ.10.50 கோடி செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், பிஹார் மற்றும் ராஞ்சி மண்டல வருமானவரித்துறை இயக்குநர் நிஷா ஓரன் சிங்மார் கூறுகையில், ''கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான பிஹார் மற்றும் ஜார்கண்ட் மண்டலத்தில் தனிநபர்களில் அதிகமான வருமான வரி செலுத்தியதில் தோனி முதலிடத்தில் உள்ளார். கடந்த நிதியாண்டில் தோனி ரூ.12.17 கோடி வருமானவரி செலுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நடப்பு நிதியாண்டுக்கும் முன்தேதியிட்டு ரூ.3 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார்'' எனத் தெரிவித்தார்.

கால்பந்து, ஹாக்கி விளையாட்டு மீதும் தீராக் காதல் கொண்டிருக்கும் தோனி இந்திய கால்பந்து லீக் போட்டியில் ஒரு அணியையும், ஹாக்கி லீக் போட்டியில் ஒரு அணியையும் விலைக்கு வாங்கி நடத்தி வருகிறார்.

மேலும், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிவிப்பில் விளம்பரம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் உலகின் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனியும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ம் ஆண்டு மதிப்பின்படி தோனியின் சொத்து மதிப்பு ரூ.765 கோடியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x