Published : 24 Jul 2018 08:55 AM
Last Updated : 24 Jul 2018 08:55 AM

தன்னை மட்டுமே நம்பி இந்திய அணி இல்லையென விராட் கோலி சொல்வது பொய்: மனம் திறக்கிறார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் அடிக்கும் ரன்களை நம்பி இந்திய அணி இல்லை என கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் விராட் கோலி கூறியது மிகப்பெரிய பொய் என இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையில் நடைபெற்ற குறுகிய வடிவிலான தொடர்களில் டி 20 தொடரை இந்திய அணி 2-1 என வென்ற நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 1-2 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் வரும் 1-ம் தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இதற்கிடையே டெஸ்ட் தொடரில் தான் அடிக்கும் ரன்களை நம்பி இந்திய அணி இல்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது கருத்துக்கு இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

விராட் கோலி ரன்கள் எடுக்கிறாரா இல்லையா என்பது, எங்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் கோலி பொய் சொல்கிறார் என்றே நான் கருதுகிறேன். இங்கிலாந்தில் இந்தியா வெல்ல கோலி ரன்கள் எடுப்பது அவசியம். விராட் கோலி நிச்சயம் தனது அணிக்காக அதிக ரன்கள் குவிக்க ஆசைப்படுவார். ஒரு கேப்டனாகவும், உலகின் சிறந்த வீரராகவும் அவரிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும். இன்றைய உலகில் கிரிக்கெட் வீரர்கள் வீடியோ காட்சிகள் மூலம் மட்டும் கற்றுக்கொள்வதில்லை. கடந்த கால அனுபவங்களில் இருந்தும் கற்றுக்கொள்கின்றனர். அதனால் தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட் கோலியும் 2014-ம் ஆண்டு தொடரில் இருந்து கற்றுக்கொண்டிருப்பார் என்றே எதிர்பார்க்கிறேன். அவரது விளையாட்டின் சில அம்சங்களில் கடினமாக பயிற்சி மேற்கொள்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இது எனக்கு மட்டும் அல்ல எனது அணியைச் சேர்ந்த சக பந்து வீச்சாளர்களுக்கும் இடையே சிறந்த மோதலாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.

இந்திய ஆடுகளங்கள் மிகவும் மந்தமாக இருக்கும். ஆனால் இங்கிலாந்து ஆடுகளங்களில் கூடுதல் வேகத்தை எதிர்பார்க்கலாம். இதனால் பந்து வீச்சாளர்கள் கூடுதல் வேகத்துடன் செயல்படலாம். கடந்த சில வாரங்களாகவே கடும் வறண்ட வானிலை நிலவியது. இதனால் ஆடுகளங்கள் நன்கு உலர்ந்துள்ளது. இது எங்களைவிட இந்திய அணிக்கே மிகவும் பொருத்தமாக அமையும். இதை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வோம். டெஸ்ட் தொடருக்கு முன்பு மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் ஆடுகளத்தில் சற்று புற்கள் வளரும்.

இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.

2014-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி 5 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 134 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இந்தத் தொடரில் விராட் கோலியை 4 முறை ஆண்டர்சன் ஆட்டமிழக்கச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x