Published : 22 Jul 2018 05:03 PM
Last Updated : 22 Jul 2018 05:03 PM

‘யோ யோ’ டெஸ்ட்டை மட்டும் வைத்து வீரர்களைத் தேர்வு செய்யக்கூடாது: பொரிந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்

யோ யோ டெஸ்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு வீரர்களைத் தேர்வு செய்வது எந்தவிதத்திலும் சரியல்ல.வீரர்களின் மற்ற திறமைகளையும் ஆய்வு செய்து அதனடிப்படையில் தேர்வு நடக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணியில் இங்கிலாந்து தொடருக்கு வீரர்கள் தேர்வு செய்து அறிவித்துவிட்டு, கடைசியில் யோ யோ எனும் உடற்தகுதிச் சோதனையை அணி நிர்வாகம் நடத்தியது. இதில் 16.1 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அணிக்குள் தேர்வாக முடியும் என்று விதியை வகுத்தது.

இதனால், திறமையான பந்துவீச்சாளராக முகமது ஷிமி, ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அம்பதி ராயுடு, சஞ்சு சாம்ஸன் ஆகியோர் அணியில் தேர்வாகி, யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், அணிக்குள் வரும் வாய்ப்பை இழந்துவிட்டனர்.

அதிலும் முகமது ஷமி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்தும் உடற்தகுதியில்லை என்று கூறி நீக்கப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டித்தொடருக்குப் பின் தற்போதுதான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஷமி அழைக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இடம் பெற்றும் அவரின் மனைவியுடனான பிரச்சினையால் சரிவரப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அதேபோல, ஐபிஎல் போட்டியில் அதிரடி ஆட்டத்தால் அனைத்து அணிகளையும் கதிகலங்க வைத்த அம்பதி ராயுடு, சஞ்சு சாம்ஸன் இருவரும் யோ யோ டெஸ்டில் தேரவில்லை என்கூறி இந்திய ஏஅணியில் இருந்து கழற்றிவிடப்பட்டனர்.

இந்த யோ யோ டெஸ்ட் தேவையா, வீரர்களின் தேர்வுக்கு இது பிரதானமா என்பது குறித்து சச்சின் டெண்டுல்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு சச்சின் அளித்த பதில்:

இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்கு யோ யோ தகுதித் தேர்வு மட்டும் சரியானதல்ல. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் அணிக்குள் வரமுடியும் என்று கூறுவது தவறு. சில குறிப்பிட்ட தகுதிகளை வைத்து வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டுமேத் தவிர யோ யோ டெஸ்ட் மட்டும் மதிப்பிடக்கூடாது.

நாங்கள் விளையாடிய காலத்தில் பீப் டெஸ்ட் என்று இருந்தது. அது ஏறக்குறைய யோ யோ போன்றது மாதிரிதான். ஆனால், அதற்காக அப்போது பீப் டெஸ்ட் மட்டும் வைத்து வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. வீரர்களின் உடற்தகுதி, பேட்டிங் திறமை, பந்துவீச்சு, பீல்டிங், கடந்த கால சாதனை ஆகியவற்றையும் ஆய்வு செய்து, யோ யோ டெஸ்டையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.

இங்கிலாந்தில் ஒருநாள்போட்டிக்கு அமைக்கப்பட்டு இருந்த ஆடுகளங்களைப் போல் டெஸ்ட் போட்டிக்கும் இருந்தால், இந்தியாவின் குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், அதில் ரஷித் ஆகியோருக்கு உதவியாக இருக்கும்.

டெஸ்ட்போட்டிக்கு ஏற்றார்போல் ஆடுகளத்தை மாற்றி அமைத்தால், நமது சுழற்பந்துவீச்சாளர்கள் நிச்சயம் சாதிப்பார்கள். இந்திய பேட்ஸ்மேன்களையும் இது பாதிக்கும்.

ஒருவேளை வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளமாக இருந்தால், டெஸ்ட் தொடர் இருநாட்டு பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான போட்டியாக மாறிவிடும். அதேசமயம், பந்துவீச்சுக்கு உதவாத ஆடுகளாக இருக்கும்போது, இரு அணிகளும் பேட்டிங் செய்வது கடினமாகிவிடும்.

ஆடுகளத்தின் தன்மை, தனிப்பட்ட வீரரின் ஃபார்ம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துத்தான் 11 வீரர்களைத் தேர்வு செய்து களமிறக்க வேண்டும். அதிலும் அணியில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வீரர்களை மாற்றித் தேர்வு செய்யவேண்டும். இல்லாவிட்டால், அநாவசியமான, தேவையில்லாத மாற்றங்களைச் செய்தது அணியின் ஸ்திரத்தன்மையை குலைத்துவிடும்.

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x