Last Updated : 22 Jul, 2018 04:12 PM

 

Published : 22 Jul 2018 04:12 PM
Last Updated : 22 Jul 2018 04:12 PM

“அஸ்வின், குல்தீப் இல்லாம களமிறங்காதீங்க” - இந்திய அணிக்கு அசாருதீன் அறிவுரை

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ் இருவரும் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அப்போதுதான் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதிமுதல் 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

இதில் இந்திய அணியில் டெஸ்ட் தொடரில் விளையாடும் 11 வீரர்களில் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து முகமது அசாருதீன் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் அளவுக்கு வலிமையான அணியாக இருக்கிறது, சிறந்த வாய்ப்புகளும் உள்ளன.

இங்கிலாந்தைப் பொருத்தவரை இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் பந்துவீச்சு இல்லை. ஆனாம், நம்மிடம் நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளன. ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவர் மட்டுமே இங்கிலாந்தின் பலம். அவர்களும் அவ்வப்போது காயத்தால் அவதிப்படுகிறார்கள்.

இங்கிலாந்துடன் விளையாடும் இந்திய அணியின் 11 வீரர்களில் கண்டிப்பாக அஸ்வின், குல்தீப் யாதவ் இடம் பெற வேண்டும். விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். 3 வேகப்பந்துவீச்சாளர்கள்,2 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற கலவையில் இருக்க வேண்டும்.

இங்கிலாந்தில் ஒருவேளை ஆடுகளம் பசுமையாக இருந்தால், 4 வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு சுழற்பந்துவீச்சாளர்கள் களமிறங்க வேண்டும். ஆனால்,என்னைப்பொருத்தவரை 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதுதான் சரியானதாகும்.

ஏனென்றால்,நாம் விளையாடும் காலத்தில் இங்கிலாந்தில் வெயில் காலமாகும். அப்போது ஆடுகளம் காய்ந்து, வறண்டு காட்சியளிக்கும். ஆதலால் போட்டியின் கடைசி இரு நாட்கள், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகக் களம் மாறிவிடும்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற இருக்கும் ஒரே வாய்ப்பு ஆடுகளம் பசுமையாக இருந்தால் மட்டுமே வேகப்பந்துவீச்சால் வெல்ல முடியும். ஆடுகளத்தைப் பசுமையாக வைத்திருந்தால், அவர்களுக்கும் சிக்கல் ஏற்படும், ஏனென்றால், நம்மிடமும் திறமையான ஸ்விங் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

இப்போது குல்தீப்யாதவ் நல்ல ஃபார்மில் இருப்பதால், அவரை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அஸ்வினுக்கும் கண்டிப்பாக வாய்ப்புவழங்க வேண்டும்.

ஒருவேளை 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய வேண்டிய சூழல் ஏற்பட்டால், அஸ்வினை மட்டும் வைத்துக்கொள்ளலாம். அஸ்வின் அனுபவமான பந்துவீச்சாளர் என்பதால், டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தலாம்.

விராட் கோலி நன்றாக கேப்டன் பணியைச் செய்கிறார், இன்னும் நீண்ட தொலைவு அவர் பயணிக்க வேண்டும். வீரர்களுக்கு உடற்தகுதி முக்கியம்தான். அதற்காக வீரர்களைத் தேர்வு செய்தபின் யோ யோ டெஸ்ட் வைக்கக்கூடாது. யோயோ டெஸ்ட் வைத்த பின் வீரர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அசாருதீன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x