Last Updated : 22 Jul, 2018 10:03 AM

 

Published : 22 Jul 2018 10:03 AM
Last Updated : 22 Jul 2018 10:03 AM

யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னம் விவகாரத்தால் காலே கிரிக்கெட் மைதானம் அகற்றப்படமாட்டாது- இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையின் தென் மாகாணங் களின் தலைநகரான காலே அந்நாட்டில் பெரிய நகரங்களில் ஒன்று. மேலும் இலங்கையின் முக்கியமான துறைமுகமான காலே துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. இந்தியப் பெருங் கடலில் சர்வதேச கடற்பாதையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் காலே துறைமுகம் அமைந்துள்ளதால் ரோமானியர் கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்களின் வணிகத்தளமாகவும் பயன்படுத்தப் பட்டது. 2200 ஆண்டுகளுக்கு முன்னர் தாலமி வரைந்த உலக வரை படத்தில் காலே நகரம் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் அந்த நகரத்தின் பழமையை அறிந்து கொள்ள முடியும்.

இலங்கையில் போர்த்துக்கீசியர் களின் ஆட்சி க்காலத்தில் காலேவில் கி.பி. 1620-ம் ஆண்டு கோட்டை ஒன்றை கட்ட ஆரம்பித்தார்கள். பின்னர் டச்சுக்காரர்களின் ஆட்சிகாலத்தில் காலே கோட்டை 52 ஹெக்டேர் நிலப்பரப்பில் 14 கொத்தளங்கள், நூலகம், பள்ளி, தேவாலயம், மருத்துவமனை, காவலர் விடுதி, நீதிமன்றம், சிறைச்சாலை, கலங்கரை விளக்கம் ஆகிய கட்டமைப்புக்களுடன் விரிவுபடுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து 1796-ம் ஆண்டு டச்சுக்காரர்களிடமிருந்து கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். 1876-ம் ஆண்டு காலே கோட்டை அருகே ஆங்கிலேயர்களால் விளையாட்டு மைதானமும் கட்டப்பட்டது.

தற்போதையை காலே கோட்டை யின் தேவாலய வீதியில் நூலகம், வணிக நிலையங்களும் ராணி வீதியில் கடல்சார் தொல்பொருள் கூடம், நீதிமன்ற வளாகம், காவல்துறையினர் குடியிருப்பு, மூர் வீதியில் கைவினைப் பொருட் கள், ஆடைகள், மரச்சிற்பங்கள், ஆபரணங்கள், அலங்காரப் பொருட் கள் விற்பனை கூடங்களும் உள் ளன. மேலும் காலே கோட்டையில் சிறந்த உணவகங்களும், தங்கும் விடுதிகளும் உண்டு. கோட்டை அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் 29.02.1984-ல் இருந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வரு கின்றன.

1988-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு காலே கோட்டையை உலக மரபுரிமை அமைவிடமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து காலேவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக காலே விளை யாட்டு மைதானத்தை மேம்படுத்தி 1988-ம் ஆண்டிலிருந்து சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2006-ம் ஆண்டு காலே கோட்டையில் இருந்து கிரிக்கெட் போட்டிகளை பார்வையாளர்கள் பார்த்து ரசிப்பதற்கு பார்வை யாளர் அரங்கம் மற்றும் கட்டிடங் களும் புதிதாகக் கட்டப்பட்டன. இந் நிலையில் காலே கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட பார்வையாளர் கள் அரங்கத்தையும், கட்டிடங் களையும் அகற்ற வேண்டும் இல்லாவிட்டால் காலே கோட் டையை மரபுரிமை பட்டியலில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்படும் என யுனெஸ்கோ நிறுவனம் 2007-ம் ஆண்டு முதல் இலங்கை அரசுக்கு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் அமைச்சர்கள் காலே கோட்டையை பாதுகாக்கும் வகை யில் யுனெஸ்கோ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து காலே கோட்டையை பாதுகாக்க கிரிக்கெட் மைதா னத்தை அகற்றுவதற்கு அரசு முடி வெடுத்துள்ளதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளி யாகின. இதற்கிடையே முன்னாள் வீரர்களான அர்ஜுன ரணதுங்க, ஜெயவர்த்தனே ஆகி யோர் இலங்கை கிரிக்கெட் அணியை உலகறியச் செய்த காலே கிரிக்கெட் மைதானத்தை அகற்றக்கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்டபோது அந்நாட்டு இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் சாகல ரத்னாயக்க பதிலளிக்கையில், “காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அகற்ற வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு கிடையாது. இந்த மைதானத்தில் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் எப்போதும் போல நடைபெறும். 2006-ம் ஆண்டு ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் காலே கோட்டையில் கட்டப்பட்ட கிரிக்கெட் பார்வையாளர் அரங்கம், கட்டிடங்கள் மட்டுமே அகற்றப்படும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x