Published : 21 Jul 2018 08:06 PM
Last Updated : 21 Jul 2018 08:06 PM

இந்திய அணியில் 4-ம் இடத்துக்கு பொருத்தமான பேட்ஸ்மேன் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், ரோஹித்?- என்ன சொல்கிறார் மஞ்ச்ரேக்கர்

 இந்திய அணியில் நடுவரிசையில் முக்கியமான 4-ம் இடத்தில் யாரைக் களமிறக்குவது என்பது பல்வேறு விதத்தலும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வரும் நிலையில், ரோஹித் சர்மா, ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி ஆகியோரில் ஒருவரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரிந்துரை செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொருவரையும் எந்த இடத்தில் களமிறக்கினால், எப்படி இருக்கும் என்பதையும் விளக்கியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் சிறப்பாக விளையாடி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆனால், ஒருநாள் தொடரில் 2-1 என்று தொடரை இங்கிலாந்திடம் இந்திய அணி இழந்தது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங் வரிசையைத் திறம்படக் கையாளாததும், பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடமல் போனதுமே காரணம் என மூத்த வீரர்கள் சேவாக், கங்குலி, கவாஸ்கர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிலும், தொடக்க வீரர்களாக ஷிகர் தவண், ரோஹித் சர்மா, 3-வது வீரராக விராட் கோலி ஆகியோர் களமிறங்கிய நிலையில், 4-வது, 5-வது வீரராக யாரை இறக்குவது என்ற குழப்பம் இந்த ஒருநாள் தொடரில் நீடித்தது. அதற்குச் சரியான பேட்ஸ்மேன் கிடைக்காத காரணத்தால், ரன் சேர்க்க வேண்டிய போட்டிகளில் எல்லாம் இந்திய அணி கோட்டைவிட்டது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சில நேரங்களில் விரைவாக ஆட்டமிழக்கும் போது, நடுவரிசை வீரர்கள்தான் அணியைத் தூக்கி நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

அந்த வகையில் இந்தப் போட்டிகளில் தோனிக்கு அந்தப் பொறுப்பு வந்தபோது, அதை அவர் சரிவரக் கையாளாமல், அதிகமான பந்துகளில் குறைந்த ரன்களைச் சேர்த்தார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக அவர் மந்தமாக விளையாடினார் ஓய்வுக்கான நேரம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில், இந்திய அணியில் 4-ம் இடத்தில் களமிறங்கிய வேண்டிய வீரர்கள் குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை கிரிக்இன்போ தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் விளையாடிய 11 வீரர்களை கேப்டன் விராட் கோலி தேர்வு செய்த வித்த்தில் எனக்கு உடன்பாடில்லை. நீண்டகாலத்துக்கு இந்திய அணியில் 4-ம் இடத்துக்கு வலுவான பேட்ஸ்மேன்களை உருவாக்க இரு சிறந்த வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன.

ஒன்று விராட் கோலி 4—ம் இடத்தில் விளையாடுவது. அவரின் பொறுப்பான, நிதானமான ஆட்டம் அணியைச் சரிவில் இருந்து எப்போது வேண்டுமானாலும் மீட்கும். அந்த அளவுக்கு கோலி தரமான வீரர். அதேசமயம், 3-ம் இடத்துக்கு விராட்கோலி விளையாடும் இடத்தில், கே.எல். ராகுலை விளையாட வைக்க வேண்டும்.

கே.எல். ராகுல் 4-ம் 5, 6-ம் இடங்களில் விளையாடுவதற்குச் சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்பது எனது கருத்தாகும். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான ராகுலை கடைநிலையில் களமிறக்கக்கூடாது.

4-வது இடத்துக்கு மற்றொரு தகுதியான வீரர் ஸ்ரேயாஸ் அய்யர். நான்காவது வரிசையில் ஆடும் வீரர்களுக்கு அனைத்து வகையிலும் விளையாடும் திறமை இருக்க வேண்டும். அதாவது, சிங்கில் ரன்கள் அதிகமாகச் சேர்க்க வேண்டும், அவ்வப்போது பவுண்டரிகளும் அடிக்க வேண்டும். ஒருவேளை நிலைத்து ஆடிவிட்டால், கடைசி 10 ஓவர்களில் நிலைத்து ஆடி அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டும். இந்த அனைத்துத் தகுதிகளும் ஸ்ரேயாஸ் அய்யரிடம் இருப்பதை நான் பார்க்கிறேன்.

4-ம் இடத்தில் விளையாட என்னுடைய கடைசி வாய்ப்பு ரோஹித் சர்மா. ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 4-வது வீரராக களமிறங்கி விளையாடிய அனுபவம் ரோஹித் சர்மாவுக்கு உண்டு. ஆதலால், ரோஹித் சர்மாவை 4-ம் இடத்தில் களமிறக்கிப் பயிற்சிஅளிக்கலாம். இவ்வாறு பேட்டிங் வரிசையை வரிசைப்படுத்தினால் அணியின் பலம் கூடும்.

தொடக்க வீரராக ஷிகர் தவணுடன் கே.எல். ராகுலைக் களமிறக்கலாம். அதிரடியாக ரன்களை பவர் ப்ளேயில் குவிக்கும் திறமை ராகுலுக்கு உண்டு.

வீரர்கள் தனிப்பட்ட முறையில் எப்படி உணர்கிறார்கள், அணிக்கு எந்த இடத்தில் விளையாடுதல் சிறப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து களமிறக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல், ரோஹித் சர்மா ஆகியோரில் 4 பேருமே 4-வது இடத்துக்குத் தகுதியானவர்கள். இதில் ஒரு சிலர் தொடக்க வீரராக களமிறங்கிவிட்டேன், 3-வது வீரராகக் களமிறங்கிவிட்டேன் என்று கூறுவதை விடுத்து அணியின் நீண்டகால நலனைத்தான் பார்க்க வேண்டும்.''

இவ்வாறு மஞ்ச்ரேக்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x