Published : 21 Jul 2018 09:20 AM
Last Updated : 21 Jul 2018 09:20 AM

முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 277 ரன்கள் சேர்ப்பு-8 விக்கெட்களை சாய்த்தார் கேசவ் மகாராஜ்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்தது.

தென் ஆப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று கொழும்பு நகரில் 2-வது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு குணதிலகா, கருணாரத்னே ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. மதிய உணவு இடைவேளையில் இலங்கை அணி 28 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் எடுத்தது. குணதிலகா 44, கருணாரத்னே 42 ரன்களுடன் ஆட்மிழக்காமல் இருந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தனர். இந் ஜோடியை கேசவ் மகாராஜ் பிரித்தார். கருணா ரத்னே 53 ரன்கள் எடுத்த நிலையில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. இது கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இலங்கை அணி முதல் விக்கெட்டுக்கு தொடக்க ஜோடி சேர்த்த 100 ரன் களாக அமைந்தது. இந்த காலக் கட்டத்தில் இலங்கை 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந் தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிது நேரத்தில் குணதிலகாவையும் (57), கேசவ் மகாராஜ் வெளியேற்றினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மெண்டிஸ் 21 ரன்களில், கேசவ் மகாராஜ் பந்தில் வெளியேற தேநீர் இடைவேளையில் இலங்கை அணி 54 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

தனஞ்ஜெயா டி சில்வா 19, மேத்யூஸ் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தேநீர் இடைவேளைக்குப் பின்னர் கேசவ் மகாராஜ் பந்தில் இலங்கை அணி ஆட்டம் கண்டது. மேத்யூஸ் (10), திக்வெலா (5), தனஞ்ஜெயா டி சில்வா (60), பெரேரா (17), சுரங்கா லக்மல் (0) ரன்களில் கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய ரோஷன் சில்வா 22 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் போல்டானார்.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 86 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. அகிலா தனஞ்ஜெயா 16, ரங்கனா ஹெராத் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 32 ஓவர்களை வீசி, 6 மெய்டன் ஓவர்களுடன், 116 ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில் 8 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிராக ஒரே இன்னிங் ஸில் 8 விக்கெட்களை வீழ்த்திய 3-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் கேசவ் மகாராஜ். இதற்கு முன்னர் பாகிஸ்தானின் இம்ரான் கான், மேற்கிந்தியத் தீவுகளின் ஷனோன் கபேரியல் ஆகியோரும் 8 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தனர்.

116 ரன்கள் வரை விக்கெட்டை இழக்காமல் இருந்த இலங்கை அணி அதன் பின்னர் 161 ரன்களை சேர்ப்பதற்குள் 9 விக்கெட்களை தாரை வார்த்தது. அதிலும் முக்கியமாக கடைசி செஷனில் 6 விக்கெட்களை பறிகொடுத்தது. கைவசம் ஒரு விக்கெட் இருக்க இலங்கை அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x