Published : 19 Jul 2018 03:16 PM
Last Updated : 19 Jul 2018 03:16 PM

தோனி இளைஞராகவே இருப்பாரா? தோல்விக்கான காரணம் என்ன?- சொல்கிறார் சேவாக்

தோனி எப்போதும் இளைஞராகவே இருப்பாரா, அவருக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. அதன் எதிரொலிதான் இங்கிலாந்து தொடரில் ரன் சேர்க்க அவர் சிரமப்பட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியில் அனைவராலும் விமர்சிக்கப்படும் முக்கிய விஷயம், தோனியின் ஆமை வேக பேட்டிங் ஆகும்.

கடைசி இரு போட்டிகளில் அவர் பேட்டிங் செய்த விதம் ரன்களைச் சேர்க்க முடியாமல் சிரமப்பட்டதையே காட்டியது. 2-வது போட்டியில் 59 பந்துகளில் 37 ரன்களையும், 3-வது போட்டியில் 66 பந்துகளுக்கு 42 ரன்களையும் தோனி சேர்த்தார்.

பந்துகளை அதிகமாக எதிர்கொண்டு ரன்களைக் குறைவாகச் சேர்த்தார் என்று தோனி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இது தொடர்பாக அனுபவ வீரர் சுனில் கவாஸ்கர் கூட தோனியின் விளையாட்டைக் கிண்டல் செய்திருந்தார்.

அதில், லார்ட்ஸ் மைதானத்தில் தோனி 37 ரன்கள் அடித்ததைப் பார்த்தபோது, நான் 136 பந்துகளுக்கு 36 ரன்கள் எடுத்தேன். இதை மைதானத்தில் சேர்த்த நினைவு வந்துவிட்டது. அதுபோல் மிகவும் மெதுவாக தோனி பேட் செய்தார் என்று கிண்டலடித்திருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்விக்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

''இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததற்கு முக்கியக் காரணம் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படாததே. முக்கியமான பேட்ஸ்மேன்களான தோனி, விராட் கோலி, ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களைக் குவிக்கவில்லை. அவர்களின் பங்களிப்போடு ஒப்பிடும்போது அனைவரும் குறைந்தபட்சம் 30 முதல் 40 ரன்கள் குறைவாகச் சேர்த்துள்ளனர்.

விராட் கோலி, தோனி, தவண், ரோஹித் ஆகியோர் இன்னும் சிறப்பாக பேட் செய்ய முயன்றிருந்தால், ரன்கள் சேர்ந்திருக்கும். அதேசமயம் பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் வீசி இருக்கலாம். அதிலும் தோல்வி அடைந்துவிட்டனர்.

புவனேஷ்வர் குமார 3-வது போட்டியிலும் காயத்தோடுதான் களமிறங்கினார், இப்போதும் காயத்தோடுதான் இருக்கிறார். அவரால் எப்படி சிறப்பாகப் பந்துவீசி இருக்க முடியும். இந்த முறை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மோர்கன், ரூட் ஆகியோர் குல்தீப், சாஹர் பந்துவீச்சை நன்கு எதிர்கொள்ளப் பழகிவிட்டனர். என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்துடனான தோல்விக்கு இந்திய அணியின் பேட்மேன்களே காரணம் என்று கூறுவேன்.

இந்திய அணி 4-வது மற்றும் 5-வது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் யார் என கண்டுபிடிக்க முடியாமல் திணறியது. தினேஷ் கார்த்திக்கை களமிறக்கலாமா அல்லது தோனியைக் களமிறக்கலாமா என்று குழப்பத்துடன் இருந்தது.

நீங்கள் நினைப்பதுபோல் தோனி பழைய மாதிரி இளைஞராக இல்லை. அவருக்கும் முதுமை வந்துவிட்டது, வயதாகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் தோனி, பொறுப்பேற்று அணியைக் கடைசிவரை கொண்டு சென்றிருக்க வேண்டும். ஏராளமான டாட் பந்துகளை ரன்களாக மாற்றி இருக்க வேண்டும். ஆனால், அனைத்தையும் இப்போது இருக்கும் தோனியால் செய்ய முடியவில்லை.''

இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

முன்னாள் வீரர்கள் கம்பீர், சேவாக், கவாஸ்கர் ஆகியோர் தோனிக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதைச் சூசகமாக அறிவித்து வருகிறார்கள். ஆனால், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டி வரை தோனி அணியில் தொடர்வதில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x