Last Updated : 19 Jul, 2018 02:35 PM

 

Published : 19 Jul 2018 02:35 PM
Last Updated : 19 Jul 2018 02:35 PM

புவனேஷ்வர் குமாரை ஏன் களமிறக்கினார்கள் என்று ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள்: பிசிசிஐ அதிகாரி கொதிப்பு

 முழு உடற்தகுதியில்லாத புவனேஷ்வர் குமாரை ஏன் களமிறக்கினார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனால், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பெயர் சேர்க்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

புவனேஷ்வர் குமாருக்கு முழு உடற்தகுதியில்லை, முதுகுவலி இருப்பதால், அவருக்கு ஓய்வும், சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளதாகக் காரணம் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் இருந்தே புவனேஷ்வர் குமாருக்கு முதுகுவலி இருந்து வந்துள்ளது. அப்போதே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அதில் விளையாட வைக்கப்பட்டார்.

மேலும்,  ஒருநாள் தொடரில் முதலிரு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், 3-வது போட்டிக்கு புவனேஷ்வர் குமார் களமிறங்குவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுப் பந்துவீசினார். அந்த போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசவும் அவரால் முடியவில்லை, முதுகுவலி அதிகமாக இப்போது நாடு திரும்பும் நிலையில் உள்ளார்.

இந்நிலையில், முழு உடற்தகுதியில்லாத ஒருவீரரை எப்படி 3-வது ஒருநாள் போட்டியில் களமிறக்கினார்கள் என்ற கேள்வி எழுந்தது. அணியின் உடற்தகுதி நிபுணர் பாட்ரிக் பர்ஹத், பயிற்சியாளர் சங்கர் பாசு ஆகியோர் எப்படி புவனேஷ்வர் குமாரின் உடற்தகுதிக்குச் சான்று அளித்தார்கள் என்று விமர்சனமும் எழுந்தது.

3-வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் விளையாடியதன் காரணமாக, அவருக்கு முதுகு வலி தீவிரமாகி இந்தியா திரும்ப உள்ளார்.

இது குறித்து பிசிசிஐ அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் பிடிஐ சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது:

''புவனேஷ்வர் குமார் உடற்தகுதியுடன் இருந்தாரா என என்னிடம் எதற்கு கேட்கிறீர்கள். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் சென்று கேளுங்கள். புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, அவர் முழு உடற்தகுதியில்லை என்று நாங்கள் தெரிவித்திருந்தோம். அதுமட்டுமல்லாமல், அடுத்துவரும் டெஸ்ட் தொடருக்கு புவனேஷ் முக்கிய வீரர் என்பதால், அதிகமான ஓய்வு கொடுங்கள் என்று கூறியபின்பும் களமிறக்கி இருக்கிறார்கள்.

ஐபிஎல் போட்டிகளில் பார்த்தால், புவனேஷ்வர் குமார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 17 போட்டிகளில் 5 போட்டிகளில் விளையாடி இருக்கமாட்டார். புவனேஷ்வர் குமாருக்கு அதிகமான பளு கொடுக்காதீர்கள், அடுத்து இந்திய அணிக்கு முக்கிய பந்துவீச்சாளர் என்று ஹைதராபாத் அணி நிர்வாகத்திடம் பிசிசிஐ சார்பில் கேட்டிருந்தோம். அதனால், ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.

அதிலும் லேசாக புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக, இங்கிலாந்து தொடருக்கு அவரின் பணி தேவை என்பதால், ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு கூட அவரைத் தேர்வு செய்யாமல் ஓய்வு அளித்தோம். ஆனால், இங்கிலாந்தில் நாங்கள் எதிர்பார்த்தவாறு நடக்காமல் அனைத்தும் மாறிவிட்டது.

சில கேள்விகளுக்கு அணி நிர்வாகம் பதில் கூற வேண்டிய அவசியம் இருக்கிறது. 3-வது டி20 போட்டியிலும், முதல் இரு ஒருநாள் போட்டியிலும் கூட புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தால்கூட அவர் 100 சதவீதம் முழு உடற்தகுதி பெற்றிருக்கமாட்டார். அப்படி இருக்கும் போது எப்படி 3-வது ஒருநாள் போட்டியில் விளையாட புவனேஷ்வர் குமாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

2-வது கேள்வி அணியின் உடற்தகுதி நிபுணர் பர்ஹத், புவனேஷ்வர் குமாரின் உடல்நிலையை ஆய்வு செய்து, 3-வது போட்டியில் விளையாடினால் காயம் அதிகமாகும் என்று அறிக்கை ஏதும் அளித்தாரா, அல்லது எச்சரிக்கை செய்தாரா இவற்றுக்குப் பதில் தேவை.

புவனேஷ்வர் குமார் நாடு திரும்பியதும் தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அவருக்குப் பயிற்சியும், உடற்தகுதி பரிசோதனைகளும் நடக்கும். அவரின் உடல்நிலையை பிசிசிஐ மருத்துவக்குழு ஆய்வு செய்யும்.''

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x