Published : 17 Jul 2018 04:52 PM
Last Updated : 17 Jul 2018 04:52 PM

சச்சின் மகனின் முதல் சர்வதேச விக்கெட்: ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டிய வினோத் காம்ப்ளி

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வீழ்த்திய முதல் சர்வதேச விக்கெட்டைக் கண்டு சச்சினின் பள்ளிப்பருவ நண்பரான வினோத் காம்ப்ளி ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்கு உட்பட்டவருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, இலங்கையில் பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

கொழும்பில் உள்ள நான்ட் ஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சச்சின் மகன், அர்ஜுன் டெண்டுல்கருக்கு இதுதான் முதல் சர்வதேசப் போட்டியாகும்.

இன்று காலை போட்டி தொடங்கி உணவு இடைவேளைக்குள் 5 ஓவர்கள் வரை அர்ஜுன் டெண்டுல்கர் வீசினார். இதில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை அர்ஜுன் டெண்டுல்கர் கைப்பற்றினார். இலங்கை வீரர் கமில் மிஷாரா விக்கெட் அர்ஜுன் டெண்டுல்கருக்கு முதல் சர்வதேச விக்கெட்டாக அமைந்தது.

இந்தச் செய்தியை அறிந்ததும், சச்சின் டெண்டுல்கரின் பள்ளிப்பருவத் தோழரான வினோத் காம்ப்ளி ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் அர்ஜுன் டெண்டுல்கரை வாழ்த்தி, புகைப்படத்தையும்  பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:

''அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் சர்வதேச விக்கெட்டைப் பார்க்கும்போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது. நான் அர்ஜுனை சிறுவயதில் இருந்து பார்த்து வருகிறேன், அவரின் கடின உழைப்பையும் பார்த்திருக்கிறேன். இதைக் காட்டிலும் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் வேறு இல்லை. இது தொடக்கம்தான் அர்ஜுன்.

கிரிக்கெட்டில் இன்னும் அதிகமான வெற்றிகளையும், சதங்களையும், விக்கெட்டுகளையும் எடுக்கும் காலம் வரும். உன்னுடைய சர்வதேச முதல் விக்கெட்டுக்கு எனது வாழ்த்துகள். சந்தோஷமாக இந்தத் தருணத்தை அனுபவி.''

இவ்வாறு காம்ப்ளி பதிவிட்டுள்ளார்.

இலங்கை சென்றுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x