Published : 17 Jul 2018 12:45 PM
Last Updated : 17 Jul 2018 12:45 PM

‘குரோஷியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்’: மக்களுக்கு உருக்கமாக அறிவுரை கூறிய ஹர்பஜன் சிங்

நாட்டில் இந்து, முஸ்லிம்கள் இடையே நடக்கும் சண்டையை நிறுத்திவிட்டு, குட்டி நாடான குரோஷியா உலகக்கோப்பை இறுதிச்சுற்றுவரை முன்னேறியதைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 21-வது பிபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை எதிர்த்து குரோஷிய அணி விளையாடியது. இந்தப் போட்டியில் குரோஷிய அணியை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது பிரான்ஸ் அணி.

உலகிலேயே சிறிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவில் கடந்த 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 40 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் கோப்பையை வென்றால், சாம்பியன் பட்டம் வென்ற 2-வது மிகச்சிறிய நாடாக குரோஷியா இருந்திருக்கும்.ஆனால், மிகப்பெரிய வல்லரசு நாடான பிரான்ஸிடம் 2-4 என்ற கணக்கில் குரோஷியா தோல்வி அடைந்தது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்கும் முன் ட்விட் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

50 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்டிருக்கும் நாடு குரோஷியா. அந்த நாடு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால், 135 கோடி மக்கள் தொகை கொண்டிருக்கும் நாம் இன்னும் இந்து-முஸ்லிம் சண்டையை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், உங்கள் மனநிலையை மாற்றுங்கள் இந்த நாடும்கூட மாற்றம் பெறும் என்ற ஹேஸ்டேக்கையும் இந்தியில் ஹர்பஜன் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து ஹர்பஜன் சிங்கிடம் கேட்டபோது, என்னுடைய ட்விட்டர் பகிர்வுக்கு அதிகமாக நான் எதையும் பேச வேண்டியது இல்லை என நான் நினைக்கிறேன். நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதைச் சொல்லிவிட்டேன். நான் நேர்முறையாகவே அனைத்து விஷயங்களையும் சொல்லி இருக்கிறேன். என்னுடைய இந்தக் கருத்து மிகப்பெரிய நாடான இந்தியாவில் உள்ள மக்களுக்குச் சிறிய அளவிலாவது பாதிப்பை ஏற்படுத்தும். விளையாட்டை மிகவும் நேசிக்கும் நாம், ஏன் இன்னும் கால்பந்துப்போட்டியை புறந்தள்ளி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x