Last Updated : 17 Jul, 2018 10:30 AM

 

Published : 17 Jul 2018 10:30 AM
Last Updated : 17 Jul 2018 10:30 AM

பிரபஞ்ச ஆதிக்கத்துக்கு தயாராகும் பாப்பே

ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் பிரான்ஸ் அணி, கடந்த கால தேசிய அணியின் கதாநாயகர்களை விஞ்சியுள்ளனர். ஆனால் தற்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால் அணியின் வெற்றிகளில் துடிப்பாக செயல்பட்ட 19 வயதான கிளியான் பாப்பே, இதே திறனுடன் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதுதான். தற்போதைக்கு இதுகுறித்தெல்லாம் பிரான்ஸ் அணியோ அல்லது அதன் பயிற்சியாளர் டெஸ் சாம்ப்ஸோ சிந்திக்கும் கணத்தில் இல்லை. ஏனெனில் அவர்கள் வெற்றிக் கொண்டாட்டத்துக்கான மனநிலையில் திளைத்துள்ளனர்.

பிரான்ஸ் அணியின் ஹீரோயிஸத் தன்மை இன்னும் அதிகம் பேசப்படவில்லை. இதற்கு காரணம் 1980-ம் ஆண்டு காலக்கட்டத்தில் மைக்கேல் பிளாட்னி, அலன் கிரஸ்ஸி, லூயிஸ் ஹர்னாண்டஸ், ஜீன் டிகானா ஆகியோர் நடுகளத்தில் பந்துகளை கையாண்ட விதங்கள் மேஜிக் என்று புகழப்பட்டது.

1998-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவர்களில் பல பெரிய பெயர்களை கொண்டிருந்த ஜினேடின் ஜிடேன், லாரெண்ட் பிளாங்க், ராபர்ட் பைரேஸ் அல்லது மார்செல் டெஸ்லிலி போன்ற வீரர்களின் நிலைப்பாட்டை அவர்கள் இன்னும் அடைந்திருக்கவில்லை என்றே கூறத்தோன்றுகிறது.

ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் இளம் வீரர்களை அதிகம் உள்ளடக்கிய அணிகளில் 2-வது அணியாக கருதப்பட்ட பிரான்ஸ் அணி, இளங்கன்று பயம் அறியாது என்ற பழமொழிக்கு இனங்க பயம் இல்லாத ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்துடன் தாயகத்துக்கு திரும்பி உள்ளது.

லெஸ் பிளஸ் என செல்லப் பெயருடன் வர்ணிக்கப்படும் பிரான்ஸ் அணி தங்களது அணிக்கான உடையில் 2-வது நட்சத்திரமாக பதித்துக்கொள்ள வேண்டிய வீரராக 19 வயதிலேயே உருவெடுத்துள்ளார் கிளியான் பாப்பே. இந்த சிறுவயதிலேயே அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்து தங்கப்பதக்கத்தை அவர் அணிந்துகொண்டுள்ளது கால்பந்து உலகை சற்று திரும்பி பார்க்கவே வைத்துள்ளது.  3 முறை பாலோன் டி’ஆர் விருதை வென்ற பிளாட்னிக்கூட, உலகக் கோப்பையில் பட்டம் வென்று தங்கப் பதக்கத்தை கம்பீராக சுமப்பதற்கு வாய்ப்பு கைகூடவில்லை. அவர் விளையாடிய காலக்கட்டத்தில் பிரான்ஸ் அணி இரு முறை அரை இறுதி ஆட்டங்களில் ஜெர்மனி அணியால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணியின் கேப்டன் டிடியர் டெஸ்ஸாம்பின் பயிற்சியில் தற்போது நடப்பு சாம்பியன் அந்தஸ்தை பெற்றுள்ளது பிரான்ஸ் அணி. இந்த வெற்றிக்கு உரம் போட்ட ஆட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போர்ச்சுக்கலுக்கு எதிராக யூரோ இறுதிப் போட்டியில் சொந்த மண்ணில் பிரான்ஸ் அணி தோல்வியை தழுவியதுதான்.   அங்கிருந்துதான் வெற்றிக்கான அணியை பட்டைத் தீட்ட தொடங்கினார் டெஸ்சாம்ப்ஸ்.

அவர் கூறுகையில், உலகக் கோப்பைக்காக இளம் வீரர்களை தேர்ந்தெடுத்தோம். அணியில் உள்ள 14 வீரர்கள், யூரோ உலகக் கோப்பையில் இடம் பெறாதவர்கள். ஆனால் அவர்களின் ஆட்டத்தில் திறமையும், தரமும் இருந்தது” என்றார்.

49 வயதான முன்னாள் கேப்டனான டெஸ்சாம்ப்ஸ், வெற்றிக்கான அணியை உருவாக்குவதற்கு ஒரே ஒரு அடிப்படையைதான் கொண்டிருந்தார். அதுதான் தனிப்பட்ட வீரர்களின் திறமையை மட்டும் சார்ந்து இருத்தல் கூடாது என்பதுதான். அனைத்து வீரர்களையும் களத்தில் ஒருங்கிணைந்தவாறு செயல்திறனை வெளிப்படுத்த செய்ததன் காரணமாகவே டெஸ் சாம்ப்ஸ் தற்போது வெற்றியாளராக உருவெடுத்துள்ளார்.

மேலும் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்ட பால் போக்போ அணியின் நலனுக்காக பயிற்சியாளரின் ஆலோசனைப்படி தனது ஆட்டத்தில் மாற்றம் செய்தார். மேலும் நட்சத்திர வீரரான கிரீஸ்மேனுடன், இளம் வீரரான கிளியான் பாப்பேவையும் தொடர் முழுவதும் சரியாகக் கையாண்டார் டெஸ்சாம்ப்ஸ். இருவரும் ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் தலா 4 கோல்கள் அடித்து மிரட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டம் வென்றதோடு பிரான்ஸ் அணியின் பயணம் நின்றுவிடாது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு கால்பந்து உலகில் அந்த அணி ஆதிக்கம் செலுத்துவதற்கான வழிகளில் பயணிக்க விரும்பும். இது தொடர்பாக டெஸ்சாம்ப்ஸ் கூறும்போது, “நாங்கள் உலக சாம்பியனாக உள்ளோம். அடுத்த 4 ஆண்டுகளுக்கு நாங்கள் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் இருப்போம். இது எப்போதும் நினைவில் கொள்ளக் கூடியதாக இருக்கும்” என்றார்.

உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் பீலேவுக்கு பிறகு (17 வயது) இளம் வயதில் கோல் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்ற கிளியான் பாப்பே, அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலக கால்பந்து அரங்கை கட்டிப்போடக்கூடும் என விமர்சகர்கள் கருதுகின்றனர். அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் 30 வயதை கடந்துவிட்டதால், உலகக் கால்பந்து அரங்கை ஆளும் அடுத்த தலைமுறை வீரராககிளியான் பாப்பே உருவெடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது.

ஜெர்மனி அணியின் முன்னாள் ஸ்டிரைக்கரான கிளின்ஸ்மான் கூறும்போது, “இளம் வயதிலேயே பாப்பேவின் ஆட்டத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. பிரான்ஸ் அணிக்காக அவர் எப்படியும் இன்னும் 10 ஆண்டுகள் விளையாடுவார்” என்றார்.

அதேவேளையில் டெஸ் சாம்ப்ஸ் கூறுகையில், “பாப்பே மீண்டும் உலக சாம்பியான இருப்பார் என நம்புகிறேன். அவர் ஏற்கெனவே நிறைய செய்துள்ளார். ஆனால் எதிர்காலத்தில் எதற்கும் உத்தரவாதம் இல்லை. 22 ஆண்டுகளுக்கு முன்னர் டேவிட் டிரெஸ்குட், தியரி ஹென்றி ஆகியோர் 19 வயதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அவர்களால் மீண்டும் சாம்பியனாக முடியவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x