Published : 10 Jul 2018 12:52 PM
Last Updated : 10 Jul 2018 12:52 PM

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனிடம் இருந்து போலீஸ் டிஎஸ்பி பதவி திடீர் பறிப்பு: ‘கான்ஸ்டபிளாக’ பதவி இறக்கம்

இந்திய மகளிர் டி20 கேப்டனும், அர்ஜுனா விருது பெற்றவருமான ஹர்மன்ப்ரீத் கவுர் அளித்த இளநிலைபட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என தகவல் வெளியானதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் டிஎஸ்பி பதவியை பஞ்சாப் அரசு அதிரடியாகப் பறித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரை அவரின் படிப்புக்கு ஏற்றார்போல், டிஎஸ்பி அந்தஸ்தில் இருந்து கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டனாக இருப்பவர் ஹர்மன் பிரீத் கவுர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடியதால், இவருக்கு போலீஸ் துறையில் டிஎஸ்பி பதவி அளித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டார்.

ஏற்கெனவே ஹர்மன்ப்ரீத் கவுர் ரயில்வே துறையில் 5 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்ததால், அவரை விடுவிக்க ரயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டது. இதில் முதல்வர் அமரீந்தர் சிங் தலையிட்டு ஹர்மன்பிரீத் கவுரை விடுவிக்கப்படும்படி கேட்டுக்கொண்டதால், அவர் விடுக்கப்பட்டு போலீஸ் டிஎஸ்பியாக பதவி ஏற்றார்.

இந்நிலையில், போலீஸ் டிஎஸ்பியாக வரும் ஒருவர் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அந்தவகையில் ஹர்மன் பிரீத் கவுர், மீரட் நகரில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழக்தில் தான் 2011-ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்ததாகச் சான்று அளித்தார்.

அந்த பல்கலையில், பஞ்சாப் போலீஸார் சார்பில் ஹர்மன்ப்ரீத் எப்போது பட்டப்படிப்பு படித்தார், சான்றிதழ் உண்மையானதா உள்ளிட்ட விவரங்களை முறைப்படி விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பல்கலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் படித்ததற்கான ஆதாரம் இல்லை, அவர் அளித்த சான்றிதழ் போலியானது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் உத்தரவின் பெயரில், ஹர்மன்பிரீத் கவுருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் டிஎஸ்பி பதவி பறிக்கப்பட்டு, அவரின் 12-ம் வகுப்பு தகுதிக்கு ஏற்ப, போலீஸ் கான்ஸ்டபிள் வழங்க உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பஞ்சாப் தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹர்மன்பிரித் கவுரின் சான்றுபோலியானது எனத் தெரியவந்துள்ளது.

ஆனால், அவரோ தான் பல்கலையில்படித்தேன் என்றும், முறையாக வகுப்புச் செல்லவில்லை, அவ்வாறு செல்லாததற்கு முன்கூட்டியே அனுமதியும் பெற்றிருந்தேன் என்றும் தெரிவிக்கிறார். தான் அளித்த பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது அல்ல என்றுதெரிவிக்கிறார்.

ஆனால், ஹர்மன் பிரித்தை டிஎஸ்பி அந்தஸ்தில் இருந்து போலீஸ் கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x