Published : 10 Jul 2018 08:27 AM
Last Updated : 10 Jul 2018 08:27 AM

இறுதிப் போட்டியில் கால் பதிக்குமா பிரான்ஸ்?- பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இன்று பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தை சோனி டென் 1, சோனி டென் 3 சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இரு அணிகளும் இதுவரை 73 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பெல்ஜியம் 30 ஆட்டங்களிலும், பிரான்ஸ் 24 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 19 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன. உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் இதற்கு முன்னர் இரு முறை மோதி உள்ளன. இதில் இரு ஆட்டங்களிலும் பிரான்ஸ் வெற்றி கண்டிருந்தது. கடைசியாக 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியிருந்தது.

1998-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி இம்முறை இளம் வீரர்களை அதிக அளவில் உள்ளடக்கியபடி பயம் இல்லாத ஆட்டத்தை விளையாடி வருகிறது. அந்த அணி 12 வருடங்களுக்குப் பிறகு அரை இறுதியில் கால்பதித்துள்ளது. 19 வயதான கிளியான் மாபே, மற்றும் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்ட 22 வயதே ஆன இளம் ஜோடிகளானபெஞ்சமின் பவார்டு, லூக்காஸ் ஹெர்னாண்டஸ் ஆகியோர் சிறந்த பங்களிப்பு செய்து வருகின்றனர். இதில் பெஞ்சமின் பவார்டை வலது ஓரத்திலும், ஹர்னாண்டஸை இடது ஓரத்திலும் பயன்படுத்தும் தைரியமான முடிவை பறிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் மேற்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் 20 சர்வதேச ஆட்டங்களில் மட்டுமே விளையாடி உள்ள போதிலும் ஒருங்கிணைந்த செயல்திறனை களத்தில் வெளிப்படுத்துவது பலமாக உள்ளது.

பெல்ஜியம் பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்ட்டின்ஸ் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்ற போது அவரால் அணியில் உள்ள தனிப்பட்ட வீரர்களின் திறமையை ஒருங்கிணைத்து செயல்பட முடியுமா என்பதில் தொடக்க காலங்களில் சந்தேகம் நிலவியது. அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் ஆட்டத்திலேயே பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் தோல்வி கண்டது. ஆனால் அதன் பிறகு 23 ஆட்டங்களில் பெல்ஜியம் அணி தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.

இதில் அந்த அணி வீரர்கள் 78 கோல்கள் அடித்துள்ளனர். ஒரு சில ஆட்டங்கள் மட்டுமே கோல் அடிக்கப்படாமல் டிராவில் முடிவடைந்தன. வீரர்களின் திறனை மேம்படுத்துவதில் துணை பயிற்சியாளராக உள்ள பிரான்ஸ் அணியின் முன்னாள் ஸ்டிரைக்கரான தியரி ஹென்றியும் பக்கபலமாக உள்ளார். ரஷ்ய உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணி 14 கோல்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்த அணிகள் பட்டியலில் முதலிடமும் வகிக்கிறது. நாக் அவுட் சுற்றில் ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி பின்தங்கியிருந்த நிலையில் மார்ட்டின்ஸ் துணிச்சலான வகையில் சில மாற்றங்களை செய்தார். இரு விங்கர்களை வெளியே எடுத்துவிட்டு இரு நடுகள வீரர்களை களமிறக்கினார். அவர்கள் இருவரும் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்தனர். எதிரணியின் பலவீனத்தை அறிந்து அதற்கு தகுந்தவாறு அணியின் பார்மட்டை அமைப்பதில் மார்ட்டின்ஸ் கைதேர்ந்தவராக இருப்பதே வெற்றிக்கான மந்திரமாக உள்ளது. பிரேசில் அணிக்கு எதிரான கால் இறுதியில் கூட மார்ட்டின்ஸ் அமைத்த களவியூகம் தான் வெற்றியை தேடிக் கொடுத்தது. முதல் முறையாக பெல்ஜியம் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் மார்ட்டின்ஸ் தீவிரம் காட்டக்கூடும். 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியம் அணி 4-வது இடம் பிடித்திருந்தது உட்சபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

பலமான கோல்கீப்பர்கள்

பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய இரு அணிகளுக்கும் கோல்கீப்பர்கள் அசுர பலமாக உள்ளனர். பிரான்ஸ் கோல்கீப்பரான ஹியூகோ லொரிஸ், உருகுவே அணிக்கு எதிரான கால் இறுதியில் அபாரமாக செயல்பட்டு எதிரணியின் கோல் அடிக்கும் இரு வாய்ப்புகளை தகர்த்தெறிந்தார். அதேபோல் பெல்ஜியம் அணியின் கோல்கீப்பரான கோர்ட்டுவா, பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு பலமுறை முட்டுக்கட்டை போட்டார். பிரேசில் அணி தோல்வியை தழுவியதற்கு கோர்ட்டுவாவின் தடுப்பு அரண்தான் முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இரு அணிகளும் கோல் அடிப்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்றே கருதப்படுகிறது.

மியூனியர்

பெல்ஜியம் அணியின் டிபன்டர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் தாமஸ் மியூனியர். பெல்ஜியம் அணியின் தாக்குதல் ஆட்ட யுக்தியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய அவர், இன்றைய ஆட்டத்தில் தடை காரணமாக களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரேசில் அணிக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தின் போது நெய்மரை பவுல் செய்ததாக 2-வது மஞ்சள் அட்டையை பெற்றதால் இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் மியூனியர் களமிறங்க இயலாது. இதனால் பயிற்சியாளர் மார்ட்டின்ஸ் தனது பார்மட்டை மாற்றக்கூடும்.

ஈடன் ஹஸார்டு

தாக்குதல் ஆட்டத்திறனால் அனைவராலும் அறியப்படும் பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரரான ஈடன் ஹஸார்டு, டிபன்ஸிலும் பலம் சேர்க்கக்கூடியவர். இதேபோல் ரோமுலு லுகாகு, டி புரூயன் ஆகியோரும் அணியின் தூண்களாக உள்ளனர். பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதில் இவர்கள் இருவரும் முக்கிய பங்கு வகித்தனர். மின்னல் வேகத்தில் பந்தை கடத்திச் செல்லும் திறன் கொண்ட லுகாகு, இந்தத் தொடரில் 4 கோல்கள் அடித்து, அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். இன்றைய ஆட்டத்திலும் லுகாகு மிரட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜான் வெர்டொங்கன், பெலானி, தாமஸ் வெர்மியேலன், சாட்லி ஆகியோரும் அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

கிளியான் மாபே

பிரான்ஸ் அணியின் முன்னணி வீரரான ஆலிவர் கிரவுடு இதுவரை கோல் அடிக்கவில்லை என்றாலும், அவர் பந்தை கையாளும் விதமானது கிளியான் மாபே, கிரீஸ்மான் ஆகியோரை சுதந்திரமாக செயல்பட வழிவகுக்கிறது. இதில் கீரிஸ்மான், அர்ஜென்டினா அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் இரு கோல்கள் அடித்து மிரளச் செய்திருந்தார். அதேவேளையில் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெனால்டி கிக்கில் இரு கோல்கள் அடித்த கிரீஸ்மான் உருகுவே அணிக்கு எதிராக ஓபன் பிளேவில் கோல் அடித்ததுடன், அந்த ஆட்டத்தில் வாரன் தலையால் முட்டி கோல் அடிக்கவும் உதவியிருந்தார். இவர்களுடன் சாமுவேல் உமிட்டி, பால் போக்போ ஆகியோர் பலம் சேர்ப்பவராக உள்ளனர். இந்த கூட்டணி மீண்டும் மிரட்டக் காத்திருக்கிறது.

கடந்து வந்த பாதை

பிரான்ஸ்: லீக் சுற்றில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்தது. இதைத்தொடர்ந்து நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியில் உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்து அரை இறுதியில் கால்பதித்துள்ளது.

பெல்ஜியம்: லீக் சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவையும், 5-2 என்ற கோல் கணக்கில் துனீசியாவையும், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியையும் பந்தாடியிருந்தது பெல்ஜியம் அணி. அதேவேளையில் நாக் அவுட் சுற்றில் 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி மிரளச் செய்தது. கால் இறுதியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x