Published : 09 Jul 2018 07:57 AM
Last Updated : 09 Jul 2018 07:57 AM

ரோஹித் சர்மா நிச்சயம் சிறப்புதான்.. ஆனால் பாண்டியாவின் ஆட்டம் தனிதான்: விராட் கோலி புகழாரம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 2-1 என்று வென்றது, இதில் 3வது போட்டியில் 199 ரன்கள் இலக்கை ரோஹித் சர்மா சதம் மூலம் இந்திய அணி மிக அனாயசமாக ஊதித்தள்ளியது.

ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார், அதோடு வெற்றி ஷாட்டை சிக்சராக ஜோர்டான் பந்தை நேராகத் தூக்கி ரசிகர்கள் மத்தியில் அடித்தது சிறப்பு.

இந்நிலையில் கோப்பையை வென்ற கேப்டன் கோலி கூறியதாவது:

பவுலர்கள் ஆட்டத்தைத் திருப்பியது தனித்துவமானது. இங்கிலாந்து 225-230 ரன்கள் எடுப்பார்கள் என்றே நினைத்தோம். பவுலர்கள் காட்டிய கேரக்டர் எங்களைப் பெருமையடையச் செய்கிறது, ஒரு கேப்டனாக அது மகிழ்ச்சியளிக்கிறது.

விக்கெட் வீழ்த்தும் அந்தப் பந்துகளை வீசும் தரம் நம்மிடம் உள்ளது. அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தோம். பாண்டியா உள்ளபடியே நல்ல ஆல்ரவுண்ட் கிர்க்கெட்டர். தன்னம்பிக்கை மிக்கவர், அதுவும் அவர் அந்த விக்கெட்டுகளை வீழ்த்திய விதம் இளம் வீச்சாளர்களிடம் நாங்கள் எதிர்நோக்குவதாகும்.

பிறகு பேட்டிங்கிலு விளாசினார், ரோஹித் நிச்சயம் சிறப்புதான், ஆனால் ஹர்திக் பாண்டியா ஆட்டம் தனித்து நிற்கிறது.

ஆட்டக்களம் மட்டையாளர்களுக்கானது, நாங்கள் உண்மையில் பேட்டிங்கை மகிழ்ந்தோம். ஆனால் பவுலர்களுக்கு இது கொடூரமான நாள்.

தொடர்ந்து பேட்டிங் வரிசையிலும் பந்து வீச்சிலும் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்வோம். வீரர்களும் இதனை வாய்ப்பாகவே கருதுகின்றனர். தொடரை வென்று அபாரமாகத் தொடங்கியுள்ளோம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x