Published : 30 Jun 2018 08:26 PM
Last Updated : 30 Jun 2018 08:26 PM

‘என்னுடைய அணிக்கு உதவ முடியாததை நினைத்து கண்ணீர் வடித்தேன்’: ஸ்டீவ் ஸ்மித் உருக்கம்

இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 5-0 என்று ஒருநாள் தொடரை இழந்தபோது, எனது அணிக்கு உதவ முடியாததை நினைத்து கண்ணீர் வடித்தேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிக்கினார். இதனால், ஸ்மித்துக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால், கடந்த 2 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் தற்போது கனடாவில் நடந்து வரும் குளோபல் டி20 போட்டியில் டொராண்டோ நேஷனல் அணியில் விளையாடி வருகிறார்.

டொராண்டோவில் வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஸ்மித் அரைசதம் அடித்து மீண்டும் தனது ஃபார்மை நிரூபித்தார். இந்தப் போட்டிக்கு பின், ஊடகங்களுக்கு ஸ்டீவ் ஸ்மித் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது என்னை மிகவும் பாதித்தது நான் இல்லாமல் எனது அணி விளையாடித் தோற்றதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது. என்னால் எனது அணிக்கு உதவ முடியவில்லையே என நினைத்து கண்ணீர் வடித்தேன்.

ஆனால், எனது உணர்ச்சிகளை நான் அடக்கிக்கொண்டேன். இங்கிலாந்தில் எங்களது அணி வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. ஆனால், இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். நான் விமானத்தில் செல்லும் போது எனது அணியின் நிலை நினைத்து வேதனை அடைந்தேன். ஆனால், அதை வெளியில் கூறமுடியவில்லை.

எனக்கு இந்த நேரம் மிகவும் கடினமான நேரம்தான். எனக்கு இப்போது சிறிய இடைவெளி தேவை என்பதை உணர்கிறேன். ஆஷஸ் தொடருக்குப் பின் நான் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு இருந்தேன். அதன்பின் நடந்த போட்டிகளில் கூடப் பந்தை சேதப்படுத்தும் சிந்தனை வரவில்லை. ஆனால், தென் ஆப்பிரிக்கத் தொடரில் அந்தக் கடினமான முடிவை எடுத்துவிட்டேன்.

விரைவில் நான் இழந்த நம்பிக்கையை மீட்டு, சிறப்பான ஃபார்மில் அணிக்கு நான் திரும்புவேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

நான் பொதுவாக பேட்டிங்கில் பதற்றம் அடைவது இல்லை. ஆனால், 3 மாதங்களாகப் போட்டிகளில் விளையாடாமல் இருந்ததால், கனடா டி20 போட்டியில் களமிறங்கியதும் சிறிது பதற்றம் காணப்பட்டது. இப்போது போட்டியில் பங்கேற்றபின் அந்தப் பதற்றம் நீங்கியது

இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x