Published : 30 Jun 2018 07:58 PM
Last Updated : 30 Jun 2018 07:58 PM

பும்ரா திடீர் நீக்கம்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாடமாட்டார்

இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணி 3 மாதகால சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. முன்னதாக அயர்லாந்து அணியுடன் 2 டி20 போட்டிகளில் விளையாடி, அதை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20,ஒருநாள் தொடருக்கு இந்திய அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக ஜஸ்பிரித் பும்ரா இருந்து வந்தார். இந்நிலையில், பயிற்சியின் போது, பும்ராவுக்கு கைவிரலில் லேசான எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தொடங்கும் டி20, ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விரைவில் இங்கிலாந்தில் இருந்து பும்ரா நாடு திரும்ப உள்ளார். இந்தியாவில் சிகிச்சை எடுத்து, உடற்தகுதி பெற்றபின் ஆகஸ்ட் 1-ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு மீண்டும் அணிக்குத் திரும்புவார் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான டி20,ஒருநாள் தொடரில் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். இது குறித்து அணியில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரிலும் இவரின் பங்களிப்பு சிறப்பாகஇருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், காயம் காரணமாக பும்ரா விளையாடமாட்டார் இது இந்திய அணிக்குப் பின்னடைவுதான். அவருக்குப் பதிலாக வரும் வீரர் அவரின் இடத்தை நிரப்புவார் என நம்புவோம் எனத்தெரிவித்தார்.

இந்நிலையில், பும்ராவுக்கு பதிலாக மும்பையைச் சேர்ந்த சர்துல் தாக்கூர் அல்லது ராஜஸ்தான் வீரர் தீபக் சாஹர் இருவரில் ஒருவர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது. இருவரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று சிறப்பாகப் பந்துவீசியவர்கள்.தற்போது இந்திய ஏ அணியிலும் இடம் பெற்று விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x