Published : 30 Jun 2018 03:11 PM
Last Updated : 30 Jun 2018 03:11 PM

ஆட்டநாயகனாக தோனி: ‘வாட்டர் பாயாக’ மாறி சகவீரர்களுக்கு தண்ணீர், கிட்களை சுமந்து நெகிழ்ச்சி

 

அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஓய்வில் இருந்த தோனி வாட்டர் பாயாக மாறி, சகவீரர்களுக்கு குளிர்பானம், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தும், அவர்களின் கிட் பேக்கை சுமந்து சென்று ரசிகர்கள் முன் நாயகனாக வலம் வந்தார்.

மூத்த வீரர் என்ற எந்த விதமான கவுரமும் பார்க்காமல், இந்தப் பணியை தோனி இறங்கிச் செய்தது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி அயர்லாந்துடன் 2 டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த இரு போட்டிகளிலும் பேட்டிங் வரிசையில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் செய்து பார்க்கப்படும் என்று கோலி தெரிவித்து இருந்தார்.

அதன்படி முதல்போட்டியில் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்த விராட் கோலி, 6-வது வீரராகவும், தோனியையை 4-வது வீரராகவும் களமிறக்கினார். 2-வது போட்டியில் தோனிக்கும், தவணுக்கும் ஓய்வு அளித்து தினேஷ் கார்த்திக், ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

இதனால், முதல் போட்டியில் தோனியின் விரைவாக ஆட்டமிழந்ததால், 2-வது போட்டியில் தோனியின் பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ஏமாற்றம் அடைந்திருந்தனர்.

ஆனால், இந்திய அணி முதலில் பேட் செய்து டிரிங்ஸ் இடைவேளை நேரத்தில் தோனி வாட்டர் பாயாகவும், சகவீரர்களுக்கு கிட் பேக்கை சுமந்து வந்ததைப் பார்த்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி, விசில் அடித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

ரெய்னாவும், மணிஷ் பாண்டேவும் களத்தில் இருந்தபோது, அவர்களுக்கு பேட் கிட் பேக்கையும் தனது தோளில் சுமந்து வந்து, குளிர்பானம், தண்ணீர் எடுத்து வந்து தோனி கொடுத்தார்.

இதற்கு முன் கடந்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் வங்கதேசம் அணிக்கு எதிராக இதுபோன்று சகவீரர்களுக்கு டிரிங்ஸ் கொண்டுவந்து கொடுக்கும்வாட்டர் பாயாக தோனி மாறி இருந்தார். அதற்கு முன் கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் இலங்கைக்கு எதிரானபோட்டியில் வீரர்களுக்கு கூல்டிரிங்க் கொடுக்கும் வாட்டர் பாயாக தோனி வலம் வந்தார்.

பொதுவாக அணியில் உள்ள மூத்த வீரர்கள் இதுபோன்று சகவீரர்களுக்காக பேட் கிட்டையும், கூல்டிரிங்ஸ்களையும் கொண்டு வந்து கொடுப்பது மிகவும் அரிதானது. அதிலும் தோனி போன்ற நட்சத்திர வீரர்களாக இருந்தால், வருவதே கடினம்.

ஆனால், அந்த மரபுகளை எல்லாம் உடைத்து, எந்தவிதமான கவுரமும் பார்க்காமல், தனது சகவீரர்களுக்காக குளிர்பானங்களையும், பேட் கிட்டையும் தோளில் சுமந்து வந்து தோனி கொடுத்தது ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. 2-வது போட்டியில் தோனி விளையாடாமல் ஓய்வு அளிக்கப்பட்ட போதிலும் தோனியின் இந்தச் செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும்நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனி தனது தோளில் கிட்பேக்கை சுமப்பதையும், குளிர்பானம் எடுத்துவரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் கே.எல் ராகுல் ஆட்டநாயனாக தேர்வு செய்யப்பட்டாலும் ரசிகர்கள் மனதில் தோனியே ஆட்டநாயகராக வலம் வந்தார்.

ஒரு கருத்து மையமாக்கம்:

கிரிக்கெட் என்பது கார்ப்பரேட் மயமாகி வரும் சூழலில் தோனி என்ற வீரர் பிராண்ட் இமேஜ் என்ற தோற்றத்தில் வைத்துத்தான் பார்க்கப்படுகிறார். தோனி பேட்டை சுழற்றினாலும், ரன் அடித்தாலும், கேட்ச் பிடித்தாலும், தவறவிட்டாலும், சகவீரர்களுக்கு உதவினாலும் அது பரபரப்பாகிறது.

அதுமட்டுமல்லாமல், தோனியை முன்னிறுத்திச் செய்யப்படும் செயல்கள், பேச்சுகள் அவரின் பிராண்ட் இமேஜை உயர்த்தும் என்பதால், சில நேரங்களில் சிறிய ஆலோசனைகள் ஜூனியர் வீரர்களுக்கு அளித்திருந்தால் கூட அது ஊதிபெரிதாகப்படுகிறது.

விளிம்பு நிலையில் உள்ள வீரரகள் இந்தக் காரியங்களை தினசரி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் அதை நட்சத்திர வீரர் செய்யும் போது ஊதிப்பெருக்கப்பட்டு, பெரிய தியாகம், ஈகோ இல்லாதவர் என்றெல்லாம் சொல்லாடல்கள் கட்டமைக்கப்படுகின்றன. சமூகவியலாளர் மேக்ஸ் வெப்பர் என்பவர் ஒரு முறை கூறும்போது  “செல்வந்தர்களுக்கு எளிமையாக இருப்பதே ஆடம்பரம்தான், ஆனால் எளியவர்களுக்கோ அது விதிக்கப்பட்ட, திணிக்கப்பட்ட  வாழ்க்கை” என்றார்.

எனவே வெளிப்படையாக ஒரு பெரிய மனிதரின், நட்சத்திரத்தின் எளிமை பற்றிய விஷயமாகத் தெரிந்தாலும் தினசரி இம்மாதிரி கிட்பேக்குகளைச் சுமந்து கொண்டும், குடிநீர் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டும், இவர்களுக்கு எடுபிடி வேலை செய்யும், நாமும் இந்நிலைக்கு வருவோம் என்ற கனவுகளைக் கண்களில் தேக்கிக் கொண்டிருக்கும் இளம் வீரர்களும்  இதிலிருந்து விடுபடுவதைத்தான் எதிர்நோக்குவர், இந்நிலையில் நட்சத்திர வீரர் இந்தக் காரியங்களைச் செய்யும் போது அது ஏதோ யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய, செய்ய முடியக்கூடிய சாதாரண காரியமே என்ற உள் அர்த்தம், கருத்தியலாக மாறுகிறது.

ஒரு கடினமான வேலையை ஒருநாள் விளம்பரத்துக்காகவோ அல்லது வித்தியாசத்திற்காகவோ ஒரு நட்சத்திரம் செய்யும்போது, அதனை தினசரிச் செய்யும், அதிலிருந்து விடுபட்டு வேறு நிலைக்கு முன்னேற விரும்பும் நூற்றுக்கணக்கான விளிம்பு நிலை வீரர்களுக்கு இந்நிலையே சாசுவதம், இதில் மகிழ்ச்சியிருக்கிறது, பார் நானே இதை மகிழ்வுடன் செய்கிறேன், உனக்கு என்ன பிரச்சினை? என்று மறைமுகமாக ஒரு செய்தியை உணர்த்துவதுதான் இதன் உள்ளர்த்தம் அல்லது இரண்டாம் அர்த்தம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x