Last Updated : 30 Jun, 2018 01:38 PM

 

Published : 30 Jun 2018 01:38 PM
Last Updated : 30 Jun 2018 01:38 PM

2 பந்துமுறை ‘ரிவர்ஸ் ஸ்விங்’கை கொன்றுவிட்டது; படுமட்டை பிட்ச்சில் ஆடுகிறது இங்கிலாந்து: உமேஷ் யாதவ் பாய்ச்சல்

ஒருநாள் போட்டியில் 2 புதிய பந்துகள் முறை, ரிவர்ஸ் ஸ்விங் முறையைக் கொன்றுவிட்டது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து ஒருநாள் போட்டிகளில் இரு இன்னிங்ஸ்களிலும் இருமுனைகளிலும் புதிய பந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்று ஐசிசி விதிமுறை கொண்டுவந்தது. இந்தமுறையால் பந்துகள் தேயாமல் இருப்பதால், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான களத்தில் உதவிபுரியும் ஆனால்,  ரிவர்ஸ் ஸ்விங் கடினமாகும்.

இதனால், உதவிகரமில்லாத பிட்ச்களில் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்துவீச்சை அடித்து நொறுக்கும் சூழல் ஏற்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் குவித்தது போன்றவை உதாரணமாகக் கூறலாம். இந்த 2 பந்துகள்முறையால், கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான அம்சமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த 2 பந்து முறைக்கு சச்சின் டெண்டுல்கர், வக்கார் யூனுஸ், விராட் கோலி உள்ளிட்டோர் ஏற்கனவே தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டனர். இந்நிலையில், இப்போது இந்திய வீரர் உமேஷ் யாதவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிக்கு 5 ஆண்டுகளுக்குப்பின் இடம் பெற்ற உமேஷ் யாதவ், அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அயர்லாந்து அணியுடனான போட்டிக்கு பின் உமேஷ் யாதவ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு முனையிலும் 2 புதிய பந்துகள் பயன்படுத்துவது என்பது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிரானதாகும். ரன்களைக் கட்டுப்படுத்துவது கடினமாகும்.

ஒரு பந்து மட்டும் இருந்தால், அந்த பந்து தேய்மானம் அடையும்போது, ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். ஆனால், 2 பந்துகள் முறை வந்தபின் ஒருநாள் போட்டிகளில் ரிவர்ஸ் ஸ்விங் என்பது மிகவும் அரிதாகிவிட்டது. அதிலும் குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு லென்த் மற்றும் சரியான இடத்தில் யார்கர்களும் வீச முடியவில்லை. 2 பந்துகள் முறை ரிவர்ஸ்ஸ்விங்கை கொன்றுவிட்டது.

டெத்ஓவர்களில், இந்த புதிய பந்துகளால் எதையும் செய்ய முடியாது. அதிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான, தட்டையான ஆடுகளத்தில் புதிய பந்துகளால் வேகப்பந்துவீச்சாளர்களுக்குதான் அதிகமான நெருக்கடி ஏற்படுகிறது.

அதிலும் இங்கிலாந்தில் தட்டையானபேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு சாதாரணமாக 480 ரன்கள் அடிக்க முடிகிறது. அப்படி இருக்கும் அந்த ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்துவதும், விக்கெட்டுகளை வீழ்த்துவதும் கடினமாகும்.

நாங்கள் கடந்த நல்லமுறையில் விளையாடிவருவதால், இங்கிலாந்தில் எங்களுக்கு இருக்கும் சவாலை எதிர்பார்த்து இருக்கிறோம். இங்கிலாந்தில் எங்களால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக பந்துவீசுவோம்.

5ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நான் டி20 போட்டியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடியதை நினைத்துப் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்.

இங்கிலாந்துக்கு வந்துள்ள எங்கள் அணியில் பும்ரா, புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்டியா என பலவகைகளில் பந்துவீசக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். இந்தப் போட்டிகளுக்கு மத்தியில் வாய்ப்பு பெற்று விளையாட வேண்டும். எல்லோரும் சிறப்பாக விளையாடிவருவதால், அடுத்தடுத்த போட்டிகளில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது தேர்வாளர்களுக்குத்தான் சிக்கலான அமையும்

இவ்வாறு உமேஷ் யாதவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x