Last Updated : 30 Jun, 2018 10:07 AM

 

Published : 30 Jun 2018 10:07 AM
Last Updated : 30 Jun 2018 10:07 AM

மிகப்பெரிய வெற்றி: அயர்லாந்தை ஊதித்தள்ளியது இந்தியா: ரெய்னா, ராகுல், சாஹல் கூட்டணி முத்திரை

 

ராகுல், ரெய்னாவின் அதிரடி, சாஹல், குல்தீப், உமேஷ் யாதவ் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால், டப்லின் நகரில் நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது இந்திய அணி.

மீண்டும் டாஸ் வென்று இந்திய பேட்டிங்கை ரசித்தே தீருவோம், இல்லையெனில் மைதானத்தில் ஓடியே தீருவோம் என்று அயர்லாந்து முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது, விராட் கோலி ஷார்ட் பிட்ச் பவுன்சருக்கு புல் ஷாட்டில் வெளியேறினார், 7 அடி உயர பீட்டர் சேஸ் கோலி விக்கெட்டை வீழ்த்தினார், பந்து விலாவரை எழும்பியதால் கோலிஷாட்டில் கட்டுப்பாடு இல்லை. 9 ரன்களில் வெளியேற இந்திய அணி ராகுல் (70), ரெய்னா (69), பாண்டியா (32) ஆகியோர் சாத்துமுறையில் 213/4 என்று ரன்கள் குவிக்க, தொடர்ந்து ஆடிய அயர்லாந்து 70 ரன்களுக்குச் சுருண்டது.

டி20 வராலாற்றில் 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றி 2-வது மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முன் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம். டி20 போட்டியில் அயர்லாந்து அணியின் 2-வது மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்குமுன் மேஇதீவுகள் அணிக்கு எதிராக 68 ரன்களில் சுருண்டிருந்தது அயர்லாந்து அணி.

போட்டி என்றால் வெற்றிக்காக இரு அணிகளும் போராட வேண்டும். அப்படி இருந்தால்தான் போட்டியில் ஸ்வாரஸ்யம் இருக்கும். ஆனால், ஒருவர் பலசாலியாகவும், மற்றொருவர் பலவீனமாகவும் இருந்தால் முடிவு ஒருதரப்பாகவே அமையும் என்பது எழுதப்படாத விதி. இதில் முடிவுகள் மாறுவது மிக அதிசயம். அதுபோலத்தான் இந்த டி20 தொடர் அமைந்தது.

ஒட்டுமொத்தத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி எந்தவிதமான சிரமும் இன்றி 2-0 என்று எளிதாகக் கைப்பற்றி இருக்கிறது. அடுத்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகள்தான் இந்திய அணிக்கு உண்மையான சோதனைக் களமாகும். இங்கிலாந்து அணியுடன் ஒரு நாள் தொடர், டி20 தொடர், டெஸ்ட் தொடர் என தொடர்ந்து இந்திய அணி தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பேட் செய்த, அதிக ரன் சேர்த்தவர்களில் 3-வது இடத்தில் இருக்கும் கேஎல் ராகுல் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார். 36 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ராகுல் அணியில் தனது இருப்பை நியாயப்படுத்தி, ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

 

அதேசமயம், கடந்த போட்டியில் லெக்திசையில் வந்த பவுண்ஸரை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்த சுரேஷ் ரெய்னா இந்த போட்டியில் 45 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து அடுத்து வரும் தொடர்களில் தன்னுடைய இருப்பு தேவை என்பதை உணர்த்தியுள்ளார். இந்த இருவரில் யார் அடுத்துவரும் போட்டிகளில் வாய்ப்பு பெறப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

கடந்த போட்டியில் சதத்தை நெருங்கிய ரோகித் சர்மா இந்த முறை டக் அவுட்டில் வெளியேறியிருக்கிறார். பேட்டிங்கில் நிலைத்தன்மை என்பது மிகவும் முக்கியமானதாகும். கேப்டன் விராட் கோலி பல்வேறு பரிசோதனை முயற்சிகளை இரு போட்டிகளில் செய்தார். ஆனால், பெரும்பாலும் தோல்வியில்தான் முடிந்தன.

தொடக்க வீரராக களமிறங்க தான் முயற்சித்ததும் தோல்வியில் முடிந்தது, தோனியை 4-வது வீரராக களமிறக்கிய முயற்சியும் எடுபடவில்லை. முதல் போட்டியில் 5-வது வீரராக கோலி இறங்கியும் ரன் அடிக்கவில்லை. இரு போட்டிகளிலும் டீப் மிட்விக்கெட்டில்தான் கோலி விக்கெட்டை இழந்திருக்கிறார். ஒருவேளே அயர்லாந்து அணிதானே என்று மெத்தனமாக இருந்துவிட்டாரா எனத் தெரியவில்லை.

ஐபிஎல் தொடரில் ஃபார்மில் இல்லாத மணிஷ்பாண்டேவுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு அளித்தார்கள். ஆனால், முதல் போட்டியிலும் சோபிக்கவில்லை, 2-வது போட்டியிலும் தனக்குரிய வாய்ப்பை டெஸ்ட் ஆட்டம் போல் ஆடினார். மணிஷ்பாண்டேவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை பேட்டிங் செய்ய வைத்திருக்கலாம். ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைத்தும் தினேஷ் கார்த்திக்கால் பேட்டிங் செய்ய முடியாமல் போனது.

ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டக்காரர் என்பதை இரு போட்டிகளிலும் நிரூபித்துவிட்டார். முதல் போட்டியில் ஒரு பந்தைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோதிலும், ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்து முடித்தார். இந்த போட்டியில் 9 பந்துகளைச் சந்தித்து 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 32 ரன்களைச் சேர்த்து அசத்தியுள்ளார்.

பந்துவீச்சில் டி20 போட்டியில் உமேஷ் யாதவுக்கு கிடைத்த 2-வது வாய்ப்பாகும். முதல்முறையாக டி20 போட்டியில் வாய்ப்பு பெற்ற உமேஷ் இரு போட்டிகளிலும் சிறப்பாகவே பந்துவீசினார். அதிலும் இந்த போட்டியில் தன்னுடைய முதல் இரு ஓவர்களிலும் விக்கெட்டை கழற்றி அயர்லாந்து சரிவுக்கு பிள்ளையார் சுழிபோட்டார்.

ஐபிஎல் தொடரில் இருந்தே ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் இருந்து வருகிறது. ரிஸ்ட் ஸ்பின்னர்களின் பந்துவீச்சை அயர்லாந்து பேட்ஸ்மேன்களால் இன்னும் கணித்து விளையாட முடியாதது என்பது சர்வதேச தரத்துக்கு இன்னும் அவர்களின் பேட்டிங் உயரவில்லை என்பதையே காட்டுகிறது.

யஜுவேதந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இரு போட்டிகளிலும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தனர். இரு போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட்ட சாஹல் தொடர் நாயன் விருது பெற்றார். அடுத்து வரும் இங்கிலாந்து தொடரில்தான் இருவரின் பந்துவீச்சு எந்த அளவுக்கு எடுபடப்போகிறது என்பது தெரியவரும்.

 

ஒட்டுமொத்தத்தில் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும், தொடரை கைப்பற்றும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அடுத்து வரும் இங்கிலாந்து தொடர்தான் இந்திய அணி வீரர்களின் திறமைக்கு உண்மையான சோதனைக்களமாகும்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்பார்கள் , அதுபோல அயர்லாந்து அணியின் பந்துவீச்சும், பேட்டிங்கிலும் முதல் போட்டியைக் காட்டிலும் 2-வது போட்டியில் மிக மோசமாக அமைந்தது. முதல் போட்டியில் போராட்டத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து வீரர்கள் இந்த போட்டியில் நீங்கள் ஜெயிக்கப்போகிறீர்கள், நாங்க எதுக்கு ரிஸ்க் எடுத்து விளையாடனும் என்று கேட்பதுபோல் விக்கெட்டை வாரிக்கொடுத்து ஆட்டமிழந்தனர்.

சுழற்பந்துவீச்சையும், ஸ்விங் பந்துவீச்சையும் கணித்து இன்னும் பேட் செய்ய அயர்லாந்து வீரர்களுக்குத் தெரியவில்லை. அதிலும் சாஹல், குல்தீப் ஆகியோரின் பந்துவீச்சைக் கண்டு பேட்ஸ்மேன்கள் இரு போட்டிகளிலும் அலறினார்கள். சர்வதேச தரத்துக்கு பந்துவீச்சையும், பேட்டிங்கையும் வளர்த்துக் கொள்ள அயர்லாந்து அணி இன்னும் நீண்டதொலைவு பயணிக்க வேண்டியது இருக்கிறது.

தொடர்ந்து அயர்லாந்து அணியின் பந்துவீச்சையும், பேட்டிங்கையும் விமர்சிப்பது "செத்தபாம்பை" திரும்ப திரும்ப அடிப்பதற்கு சமம்.

கடந்த போட்டியில் செய்த அதேதவறை இந்த முறையும் அயர்லாந்து அணியின் கேப்டன் வில்சன் செய்தார். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் டாஸ்வென்ற அயர்லாந்து பேட்டிங்கை தேர்வு செய்யாமல் பீல்டிங்கைத் தேர்வு செய்தது தவறின் உச்சமாகும்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கோடு களமிறங்கிய அயர்லாந்து அணி 12.3 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்து 143 ரன்களில் தோல்வி அடைந்தது.

விராட் கோலி, ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். விராட் கோலி 9 ரன்களில் சேஸ் பந்துவீச்சில் டீப்மிட்விக்கெட்டில் தனது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரெய்னா, ராகுல் அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. ஐபிஎல் போட்டியில் இருந்தே அசுர ஃபார்மில் இருக்கும் ராகுல் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பந்துகளை பறக்கவிட்டார். 4 சிக்ஸர், 3பவுண்டரிகள் அடித்து, 28 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இந்திய அணியின் ரன்ரேட்டும் ஓவருக்கு 10 என்றவேகத்தில் சென்றது. 5-வது ஓவரில் 50 ரன்களையும், 10 ஓவரில் 100 ரன்களையும் எட்டியது. 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்களை இருவரும் 51 பந்துகளில் எட்டினார்கள். ரெய்னா 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

சதத்தை நோக்கி முன்னேறிய ராகுல் 36 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஓபிரையனிடம் வீழ்ந்தார். இவரின் கணக்கி்ல் 6 சிக்ஸர்,3பவுண்டரி அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 106 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா "டக்" அவுட்டில் நடையைக் கட்டினார்.

4-வது விக்கெட்டுக்கு பாண்டே களமிறங்கினார். ரெய்னாவும், பாண்டேவும் நிதானமாக பேட் செய்தனர். ரெய்னா 45 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து ஓபிரையனிடம் விக்கெட்டை இழந்தார். ரெய்னா கணக்கில் 3 சிக்ஸர், 5பவுண்டரி அடங்கும். அடுத்து களமிறங்கிய ஹர்திக்பாண்டியா அதிரடியாக 4 சிக்ஸர்களை விளாசினார். ஆனால், மணீஷ்பாண்டே டி20 போட்டி என்பதையே மறந்து ஏதோ டெஸ்ட் போட்டி போல பேட் செய்தார். ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.

அயர்லாந்து அணியுடனே பேட்டை தடவும் மணிஷ்பாண்டே இங்கிலாந்திடம் எளிதாக மண்ணைக் கவ்விவிடுவார். ஹர்திக் பாண்டியாவின் கடைசி நேர அதிரடி ஆட்டம் எளிதாக 200 ரன்களைக் கடக்க உதவியது.

மணிஷ்பாண்டேவை நம்பிஇருந்தால், 200 ரன்களை இந்திய அணி தாண்டி இருக்காது. காட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மணிஷ்பாண்டே 20 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அயர்லாந்து அணி இந்த முறையும் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் இந்திய அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. அயர்லாந்து தரப்பில் ஓபிரையன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. உமேஷ் யாதவின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி அயர்லாந்துக்கு கிலி ஏற்படுத்தினார். 2-வது பந்தில் ஸ்டிர்லிங் ஸ்லிப்திசையில் ரெய்னாவிடம் விக்கெட்டை இழந்தார்.

உமேஷ் யாதவ் வீசிய 3-வது ஓவரில் போர்டர்பீல்ட் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அயர்லாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்துவந்தனர். சீரான இடைவெளி என்று சொல்வதைக்காட்டிலும் ஓவருக்கு ஒரு விக்கெட்டை இழந்தனர்.

அதிலும் சாஹல், குல்தீப் யாதவ் பந்துவீச அழைக்கப்பட்டபின், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல், தடுமாறி விக்கெட்டை தாரை வார்த்தனர். கேப்டன் வில்சன் சேர்த்த 15 ரன்கள்தான் அதிகபட்சமாகும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 12.3 ஓவர்களில் 70 ரன்களுக்கு அயர்லாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்திய அணித் தரப்பில் சாஹல், குல்தீப் தலா 3 விக்கெட்டுகளையும், உமேஷ்யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x