Published : 30 Jun 2018 09:20 AM
Last Updated : 30 Jun 2018 09:20 AM

கால் இறுதி முனைப்பில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா: பிரான்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் இன்று அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் சுற்றுகளின் முடிவில் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. கால் இறுதிக்கு முந்தைய சுற்றான இதில் இன்று கஸான் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்தத் தொடரை சிறப்பான முறையில் தொடங்கவில்லை. லீக் சுற்றில் டி பிரிவில் இடம் பெற்ற அர்ஜென்டினா முதல் ஆட்டத்தை அறிமுக அணியான ஐஸ்லாந்துக்கு எதிராக 1-1 என டிரா செய்தது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி, பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிட்டது கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இதைத் தொடர்ந்து குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என படுதோல்வி கண்டது.

எனினும் கடைசி லீக் ஆட்டத்தில் நைஜீரியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் தனது பிரிவில் 4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. நைஜீரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி, மார்கஸ் ரோஜோ கோல் அடித்திருந்தனர். 5 முறை பிபா விருதை வென்றுள்ள மெஸ்ஸி, மீண்டும் பார்முக்கு திரும்பி கோல் கணக்கை தொடங்கி உள்ளது அர்ஜென்டினா அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. அதேவேளையில் தற்காப்பு ஆட்டத்தை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது அர்ஜென்டினா அணி.

லீக் சுற்றில் 3 ஆட்டங்களில் 5 கோல்களை வாங்கியுள்ளது அர்ஜென்டினா. அதிலும் குரோஷியாவுக்கு எதிராக மட்டும் 3 கோல்களை பெற்றது. தற்காப்பு மிட்பீல்டரான ஜேவியர் மஸ்செரானோ தனது சிறந்த பங்களிப்பை செய்யவில்லை. இன்றைய ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர்களான கிளியான் மாபே, உஸ்மான் டெம்ப்ளே ஆகியோரது வேகத்தை சமாளிக்க அர்ஜென்டினா மெனக்கெட வேண்டியதிருக்கும். கோன்ஸாலா ஹிகுவெய்ன், ஏஞ்சல் டி மரியா, அகுரோ, எவர் பனேகா ஆகியோர் மெஸ்ஸிக்கு பக்கபலமாக உதவும் பட்சத்தில் அர்ஜென்டினா அணி கால் இறுதியில் கால்பதிப்பதில் எந்தவித சிரமமும் இருக்காது.

பிரான்ஸ் அணி லீக் சுற்றில் இரு வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று சி பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கிலும், பெரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி, டென்மார்க் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்திருந்தது. ஒட்டுமொத்தத்தில் அந்த அணி தோல்வியை சந்திக்காமல் நாக் அவுட் சுற்றில் கால்பதித்துள்ளது.

நாக் அவுட் சுற்றில் நுழைந்துள்ள போதிலும் பிரான்ஸ் அணி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான ஆட்டத்தை இன்னும் மேற்கொள்ளவில்லை. லீக் சுற்றின் 3 ஆட்டங்களிலும் அந்த அணி 3 கோல்கள் மட்டுமே அடித்துள்ளது. அதிலும் ஒரு கோல் எதிரணி வீரரால் அடிக்கப்பட்ட ஓன் கோல், மற்றொன்று பெனால்டி கிக்கில் கிடைத்தது. அதேவேளையில் தற்காப்பு ஆட்ட வியூகத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ள பிரான்ஸ் ஒரு கோலை மட்டுமே வாங்கி உள்ளது. இந்த கோலும் பெனால்டி கிக் வாய்ப்பில் எதிரணியினரால் அடிக்கப்பட்டதுதான். 1998-ல் சாம்பியன் பட்டம் வென்ற போதும் பிரான்ஸ் அணி இதுபோன்று தற்காப்பு ஆட்டத்தில் அதீத பலத்துடன் காணப்பட்டது.

நட்சத்திர வீரரான கிரீஸ்மான் இந்தத் தொடரில் ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளார். அதுவும் பெனால்டி கிக் மூலமே அந்த கோலை அடித்திருந்தார். 2016-ம் ஆண்டு யூரோ கோப்பையில் 6 கோல்கள் அடித்த நிலையில் 7 கோல்கள் அடிக்க உதவி செய்த அவர், இம்முறை உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்றில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அணியின் நம்பிக்கை நட்சதிரங்களாக திகழும் கிளியான் மாபே, பால் போக்பா, உஸ்மான் டெம்ப்ளே, நபில் ஃபகீர், ஆலிவர் கிரவுடு ஆகியோர் கூடுதல் திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் அர்ஜென்டினா அணிக்கு கடும் சவால் கொடுக்கலாம்.

நேருக்கு நேர்

அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் இதுவரை சர்வதேச அளவில் 11 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் அர்ஜென்டினா 6 ஆட்டங்களிலும், பிரான்ஸ் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன. கடைசியாக இரு அணிகள் கடந்த 2009-ம் ஆண்டு நட்புரீதியிலான ஆட்டத்தில் மோதின.

இதில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது 3-வது முறை. இதற்கு முன்னர் 1930-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கிலும், 1978-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 2-1 என்ற கோல் கணக்கிலும் பிரான்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x