Published : 29 Jun 2018 08:45 AM
Last Updated : 29 Jun 2018 08:45 AM

செனகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது: நாக் அவுட் சுற்றில் கொலம்பியா; தோல்வியடைந்தாலும் அடுத்த சுற்றில் கால்பதித்தது ஜப்பான்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஹெச் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் செனகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ரஷ்யாவின் சமரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள கொலம்பியா 4-2-3-1 என்ற பார்மட்டிலும், 27-வது இடத்தில் உள்ள செனகல் அணி 4-4-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. முதல் நிமிடத்திலேயே செனகல் வீரர் பே நயிங், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு வலது புறம் அதிக உயரமாக வெளியே சென்றது. 12-வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜூவான் குயின்டெரோ, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்தின் இடது புறம் தடுக்கப்பட்டது. 17-வது நிமிடத்தில் செனகல் வீரர் சடியோ மானேவை பெனால்டி பகுதிக்குள் வைத்து கொலம்பியா வீரர் டேவின்சன் சான்செஸ் பவுல் செய்தார்.

இதனால் ரெப்ரீ உடனடியாக பெனால்டி கிக் வாய்ப்பு வழங்க முடிவு செய்தார். ஆனால் விஏஆர் தொழில்நுட்பத்தை நாடியபோது பெனால்டி கிக் மறுக்கப்பட்டது. 27-வது நிமிடத்தில் செனகல் வீரர் கெய்டா, பாக்ஸின் இடது புறத்தில் இருந்து அடித்த பந்து கோல்கம்பத்தின் மையப்பகுதியில் தடுக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் பே நயிங் உதவியுடன் பந்தை பெற்ற இஸ்மைலா ஷார், பாக்ஸின் வலது புறத்தில் இருந்து அடித்த பந்தும் கோல்கம்பத்தின் மையப்பகுதியில் தடுக்கப்பட்டது. 37-வது நிமிடத்தில் பாக்ஸின் வெளியே இருந்து செனகல் வீரர் சலிப் சானே அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது. முதல் பாதியின் முடிவில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

74-வது நிமிடத்தில் ஜூவான் குயின்டெரோ கார்னரில் இருந்து அடித்த பந்தை பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டி அற்புதமாக கோல் அடித்தார் யெர்மி மினா. இதனால் கொலம்பியா 1-0 என முன்னிலை பெற்றது. 77-வது நிமிடத்தில் சடியோ மானே உதவியுடன் பந்தை பெற்ற பே நயிங் இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. கடைசி வரை போராடியும் செனகல் அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்த கொலம்பியா அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

அடுத்த சுற்றில் ஜப்பான்

வோல்கோகிராட் மைதானத்தில் ஹெச் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் - போலந்து அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படாத நிலையில் 59-வது நிமிடத்தில் போலந்து அணி முதல் கோலை அடித்தது. ரஃபால் குர்ஸவா உதவியுடன் பந்தை பெற்ற, ஜன் பெட்நார்க் இலக்குக்கு மிக நெருக்கமான நிலையில் பந்தை கோல்கம்பத்தின் வலது ஓரத்தில் திணித்தார்.

இதனால் போலந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் கடைசி வரை போராடியும் ஜப்பான் அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது.

முடிவில் போலந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி ஏற்கெனவே இரு ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் இந்த வெற்றியானது நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கு உதவவில்லை. ஹெச் பிரிவில் லீக் ஆட்டங்களின் முடிவில் செனகல், ஜப்பான் ஆகிய இரு அணிகளும் தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தன.

கோல் வித்தியாசமும் இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. இதனால் ஃபேர் பிளே பாயின்ட்ஸ் விதிகளின்படி ஜப்பான் அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x