Published : 29 Jun 2018 08:44 AM
Last Updated : 29 Jun 2018 08:44 AM

கடைசி கட்டத்தில் சுவிட்சர்லாந்து ஆட்டம் டிரா

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்த சுவிட்சர்லாந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி நாக் அவுட் சுற்றில் வரும் 3-ம் தேதி சுவீடன் அணியை எதிர்கொள்கிறது.

ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோராட் மைதானத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு இ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - கோஸ்டா ரிகா அணிகள் மோதின. சுவிட்சர்லாந்து அணி 4-2-3-1 என்ற பார்மட்டிலும், கோஸ்டா ரிகா 5-4-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. 31-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி முதல் கோலை அடித்தது. கேப்டன் ஸ்டீபன் லிச் ஸ்டைனர், கோல்கம்பத்துக்கு நெருக்கமாக நின்ற பிரீல் எம்போலாவுக்கு கிராஸ் செய்தார். அவர் நொடிப்பொழுதில் பந்தை தலையால் முட்டி, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்த பிளேரிம் ஸிமெய்லிக்கு அனுப்ப அவர், தனது வலுவான ஷாட்டால் கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.

2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா பதிலடி கொடுத்தது. கார்னர் கிக்கில் இருந்து கென்டால் வாட்சன் உதைத்த பந்தை, கோல்கம்பத்துக்கு அருகில் எதிரணி வீரர்களால் முழுமையாக மார்க் செய்யப்படாத நிலையில் இருந்த மனுவெல் அகான்ஜி தலையால் முட்டியவாறு கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. 88-வது நிமிடத்தில் டெனிஸ் ஸகாரியா கிராஸை பெற்ற ஜோசிப் மைக், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து கோல்கம்பத்தின் வலது ஓரத்தை நோக்கி பந்தை திணித்தார். 90 நிமிடங்கள் முடிவில் சுவிட்சர்லாந்து 2-1 என முன்னிலை பெற்றது.

இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தின் 3-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரர் ஜோயல் கேம்பலை, பெனால்டி பகுதிக்குள் வைத்து, சுவிட்சர்லாந்து வீரர் வலான் பெகார்மி பவுல் செய்தார். இதனால் கோஸ்டா ரிகா அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் பிரையன் ரூயிஸ் அடித்த பந்து, கோல்போஸ்டில் பட்டு திரும்பிய நிலையில், சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் யான் சோமரின் முதுகுப்பகுதியில் பட்டு ஓன் கோலாக மாறியது.

இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. சுவிட்சர்லாந்து அணிக்கு இது 2-வது டிராவாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தை பிரேசில் அணிக்கு எதிராக 1-1 என டிராவில் முடித்திருந்தது. அதேவேளையில் 2-வது ஆட்டத்தில் செர்பியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்த சுவிட்சர்லாந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நாக் அவுட் சுற்றில் வரும் 3-ம் தேதி சுவீடன் அணியை எதிர்கொள்கிறது சுவிட்சர்லாந்து அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x