Last Updated : 25 Jun, 2018 09:02 PM

 

Published : 25 Jun 2018 09:02 PM
Last Updated : 25 Jun 2018 09:02 PM

‘தோனி நன்றாக ஆடினாலும், இப்போதைக்கு ஜோஸ் பட்லர்தான் உச்சம்’: டிம் பெய்ன் கருத்து

ஒருநாள் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர் தோனி நன்றாக ஆடினாலும், இப்போதுள்ள நிலையில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர்தான் அனைத்துவிதமான போட்டிகளிலும் உச்சம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் விளையாடி 5-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. இது 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியிடம் ஒரு நாள் தொடரை இழந்துள்ளது.

இந்த தோல்விக்குப் பின், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜோஸ் பட்லரின் பேட்டிங்கை இந்த தொடர் முழுவதும் கவனித்தேன். மிகச்சிறப்பாக இருந்தது. இப்போதுள்ள நிலையில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

ஜோஸ் பட்லருக்கு பலவீரர்கள் போட்டியாக இருக்கிறார்கள் என்றுகூட நான் நினைக்கவில்லை. இந்திய வீரர் எம்எஸ் தோனி சிறந்த பேட்ஸ்மேன், விக்கெட்கீப்பரும் கூட. ஆனால், இந்த நேரத்தில் தோனியைக் காட்டிலும் ஜோஸ் பட்லரின் பேட்டிங்கும், கீப்பிங்கும்தான் உச்சத்தில் இருக்கிறது. ஒருநாள் போட்டிகளை நன்றாக புரிந்து கொண்டு பட்லர் விளையாடுகிறார். களத்தில் புகும்போது, அணிக்கு என்ன தேவை, எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்து கொண்டு அதில் இருந்து விலகாமல் விளையாடுகிறார்.

எங்களுடைய அணி வீரர்களும் பட்லரின் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் அனுபவம் டிராவிஸ் ஹெட், ஷார்ட் ஆகியோருக்கு மிகுந்த பயனளிக்கும். இவ்வாறு பெய்ன் தெரிவித்தார்.

ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோஸ்பட்லர் இதுவரை 275 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம், 91, 54 ரன்கள் சேர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பட்லர் ஏறக்குறைய 600 ரன்கள் வரை குவித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 2 அரைசதங்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x