Published : 22 Jun 2018 09:14 PM
Last Updated : 22 Jun 2018 09:14 PM

90 நிமிடக் கடும் போராட்டம்: கோஸ்டாரிகாவை 2-0 என வெளியேற்றிய பிரேசில்

உலகக்கோப்பைக் கால்பந்தில் இன்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முழு நேர ஆட்டத்திலும் போராடி கோல் அடிக்க முடியாமல் கடைசியில் கூடுதல் நேரத்தில் கூட்டின்ஹோ, நெய்மர் ஆகியோர் அடித்த கோல்களினால் 2-0 என்று கோஸ்டாரிகாவை வீழ்த்தி இந்த உலகக்கோப்பையில் முதல் வெற்றியை ஸ்டைலாகப் பதிவு செய்தது பிரேசில்.

சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய சுவிஸ் கோலினால் ட்ரா ஆனதையடுத்து இந்தப் போட்டியில் பிரேசில் வெற்றி பெற்றேயாக வேண்டுமென்ற நிலை இருந்தது, ஆனால் கோஸ்டாரிகா தானும் கோல் அடிக்காமல் பிரேசிலையும் கோலடிக்க விடாமல் 90 நிமிடங்கள் போராடி அலைக்கழித்தது. ஆனால் இரண்டு கோல்களினால் வெற்றி மூலம் பிரேசில் பிரிவு ஈ-இயில் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கோஸ்டாரிகா தன் முதல் போட்டியில் 1-0 என்று செர்பியாவின் அபார கோலினால் இழந்ததையடுத்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

முதல் பாதியில் பிரேசில் பெருமளவு பந்தை தங்கள் வசமே வைத்திருந்தது, கோஸ்டாரிக்கா எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவி அச்சுறுத்தியது ஆனால் கோல் வரவில்லை. 26 நிமிடங்கள் கழித்து கேப்ரியல் ஜீஸஸ் வலைக்குள் அடித்த ஷாட் ஆஃப் சைடு என்று மறுக்கப்பட்டதால் கோல் இல்லை.

கூட்டின்ஹோ, மார்செலோ ஆகியோர் நீண்ட தூரத்திலிருந்து செய்த கோல் முயற்சிகளும் இலக்குத் தவறியது. கோஸ்டாரிக்காவின் செல்சோ போர்ஹேசுக்கும் 8 அடியிலிருந்து ஒரு கோல் வாய்ப்புக் கிடைத்தது, ஆனால் வைடாக அடித்து வாய்ப்பைத் தவறவிட்டார், இவர் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்திருக்கலாம்.

இரு அணிகளுக்கும் 2ம் பாதியில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் மிகவும் ஃபவுல்களாகச் சென்ற ஆட்டத்தில் ஸ்பாட் கிக் கொடுத்தால்தான் ஓயும் என்ற அளவுக்கு இரு அணிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் தள்ளிவிட்டனர். ஆட்டம் முடிய 12 நிமிடங்கள் இருந்த போது பிரேசில் தனக்கு பெனால்டி கிக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது. கியான்ரோ கொன்சாலேஸுடன் ஏற்பட்ட மோதலில் தான் விழுந்ததை நாடகீயமாக்கினார் நெய்மர், நடுவரும் நெய்மரின் பலத்த நடிப்பைப் பார்த்து, அவருடன் மேற்கொண்ட வாதங்களும் தாக்கம் செலுத்த பெனால்டி கிக் கொடுத்தார். ஆனால் வீடியோ ரெஃபர் செய்த போது கீழே தள்ளும் அளவுக்கு அது பெரிய தொடர்பு இல்லை என்று நடுவர் கெய்ப்பர் முடிவு எடுத்தார். பெனால்டியை ரத்து செய்தார். இதற்கு சிறிது நேரத்திற்குப் பிறகு நெய்மரும், கூட்டின்ஹோவும் நடுவரை எதிர்த்ததால் புக் செய்யப்பட்டனர்.

கடைசியில் 90 நிமிடம் முடிந்து முதல் நிமிடத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முட்டல் மோதல் முடிவுக்கு வந்தது. பதிலி வீரர் ரொபர்ட்டோ ஃபெர்மினோ தலையால் பந்தை நடுவில் அனுப்ப கேப்ரியல் ஜீஸஸ் அதனை கோஸ்டா ரிகா தடுப்பு வீரரிடமிருந்து காப்பாற்றி பந்தை கூட்டின்ஹோவுக்கு அனுப்ப அருகிலிருந்து கோலாக்கினார் அவர்.

கூட்டின்ஹோ இந்த உலகக்கோப்பையில் அடிக்கும் 2வது கோலாகும் இது. ஆட்டம் முடிய இன்னும் 3-4 நிமிடங்கள் கூடுதல் நேரம் இருந்த போது கேஸ்மிரோ வலது புறம் கோஸ்டாவை ரிலீஸ் செய்ய அவர் நெய்மருக்கு பந்தை அடிக்க கோல் கீப்பர் நவாஸ் அருகில் இல்லாததால் காலி வலையில் நெய்மர் அடிக்க 2வது கோலானது. ஆட்டம் முடிந்த பிறகு நெய்மர் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு கோப்பையை வென்ற கோல் போல் விசும்பி விசும்பி ஆனந்த அழுகை அழுதார்.

காரணம் கோஸ்டாரிகா நெய்மரைக் கையாண்ட விதம் கடுமையானது, நடுவர் கெய்ப்பரும் கண்டு கொள்ளவில்லை இதனால் ரெஃப்ரீக்கும் நெய்மருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்தன, ஒரு கட்டத்தில் நெய்மரை அவர் வெளீயேற்றி விடுவார் என்ற அளவுக்கு மிகவும் மோசமாக வாக்குவாதம் நடைபெற்றது.

90 நிமிட போராட்டம், பவுல்கள், மோதல்கள் கோஸ்டாரிகா கோல்கீப்பர் நவாஸாவின் போராட்ட தடுப்புகள்:

பாக்னர் தொடக்கத்தில் நெருக்கடி கொடுத்தார். பிரையன் ரூயிஸ் பந்தை கூட்டின்ஹோவிடம் கொடுக்க அவர் பந்தை ஷூட் செய்தார் ஆனால் மேலே சென்றது. 12வது நிமிடத்தில் கோஸ்டாரிகா வீரர் போர்ஹேஸ் அருமையாக பந்தை எடுத்து வந்து பிரேசில் கோல் எல்லைக்குள் புகுந்தார். ஆனால் கோலாக மாறவில்லை, இதற்கு 2 நிமிடங்கள் கழித்து நெய்மர் மீண்டுமொருமுறை கீழே தள்ளப்பட்டார். பிறகு மீண்டும் கோஸ்டாரிகா வீரர் கிறிஸ்டியன் கேம்போவுடன் ஏற்பட்ட நெருக்கடியில் நெய்மர் மீண்டும் கீழே விழுந்தார். மீண்டும் நடுவரிடம் சென்று முறையீடு.

நெய்மரைச் சுற்றியே கேமராவின் கவனமும் கோணமும் இருந்தது ஒவ்வொரு முறை அவர் கீழே தள்ளப்படும்போதோ, அல்லது அவர் விழுந்து அரற்றும்போதோ கண்ணீருடன் கூடிய நெய்மரின் முகத்தைக் கேமரா காட்டியபடியே இருந்தது.

இடையிடையே நவாஸ் கொஞ்சம் கோஸ்டாரிகாவைக் காப்பாற்றினார், இடைவேளையில் இரு அணிகளும் 0-0 என்று செல்லும் போதும் பிரேசில் வீரர்கள் புகார்களை எழுப்பினர். ஓய்வறைக்கு வெளியே நெய்மர் ரெஃப்ரீயிடம் ஏதோ பேசினார். கோஸ்டாரிகா சவால் அளித்தனர், ஆனால் பிரேசில் வீர்ர்கள் நெய்மரை வேண்டுமென்றே ஏதோ செய்கின்றனர் என்ற பார்வையிலேயே இருந்தனர்.

 

நெய்மரின் நாடகங்களை விட கூட்டின்ஹோவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. அவர்தான் பந்தை எடுத்து சென்றார், பாஸ் செய்தார், அழகாக ஆட்டத்தை நகர்த்திச் சென்றார். வில்லியன் சரியாக ஆடவில்லை என்பதால் டக்ளஸ் கோஸ்டா களமிறக்கப்பட்டார். உடனடியாக பிரேசிலுகு புது ஆற்றல் கிடைத்தது. டக்ளஸ் கோஸ்டா பந்தை கேப்ரியல் ஜீஸசுக்குக் கிராஸ் செய்ய ஜீஸஸ் அதனை சக்திவாய்ந்த முறையில் தலையால் முட்டினார், அது கோல் பாரில் பட்டுத் திரும்பியது கூட்டின்ஹோ அடித்த ஷாட்டை கோஸ்டாரிகாவின் கிரிஸ்டியன் கேம்போ வெளியே தள்ளிவிட்டார்.

இடைவேளைக்குப் பிறகு முதல் 15 நிமிடங்களில் சுமார் 9-10 முறையாவது கோஸ்டாரிகா கோல் அருகே பிரேசில் சென்று தாக்குதல் நடத்தியிருக்கும், இதில் கோலை நோக்கி அடித்த 3-4 ஷாட்களை கோல் கீப்பர் நவாஸா தடுத்திருப்பார்.

கடைசியில் மார்செலோ வலது புறத்திலிருந்து ஒரு தொலைவான கிராஸைச் செய்ய பெர்மினோ அதனை தலையால் முட்டி நடுவுக்கு அனுப்பினார், கேப்ரியல் ஜீஸஸ் அதனை சரியாகக் கட்டுப்படுத்தத் தவறினார், பந்து தளர்வாக கூட்டின்ஹோவிடம் செல்ல அருகிலிருந்து கெய்லர் நவாஸைக் கடந்து கோல் அடித்தார். பிறகு நெய்மர், கோஸ்டாவின் கிராஸை நெய்மார் 2வது கோலாக மாற்றினார். 2-0 என்று பிரேசில் வென்று 4 புள்ளிகளை இதுவரை பெற்றுள்ளது. கோஸ்டாரிகா வெளியேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x