Published : 22 Jun 2018 03:59 PM
Last Updated : 22 Jun 2018 03:59 PM

இங்கிலாந்துக்கு எதிராக எங்கு போய் ஒளிந்து கொள்வது? - பிரமிப்பிலும் ஏமாற்றத்திலும் ஏரோன் பிஞ்ச்

முதலில் பேட் செய்ய இங்கிலாந்தை அழைத்தால் ஸ்கோர் 500 பக்கம் செல்கிறது, சரி நாம் முதலில் பேட் செய்வோம் என்று முடிவெடுத்து 310 ரன்களை அடித்தாலும் இங்கிலாந்து 45 ஓவர்களில் அந்த இலக்கை ‘ஃப்பூ’ என்று ஊதித்தள்ளுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு என்னதான் வழியிருக்கிறது என்கிறார் அதன் தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச்.

4-0 என்று ஆஸ்திரேலியா இன்னொரு ஒயிட்வாஷுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை எட்டினார் பிஞ்ச்.

ஜோ ரூட் 10 ஓவர்களை வீசி 44 ரன்கள்தான் கொடுத்தார் என்றால் ஆஸ்திரேலியா எப்படி பேட் செய்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தோல்வி குறித்து பிஞ்ச் கூறும்போது, “மலைபோல் ரன்களை விட்டுவிட்டு ஆட்டமிழந்தேன். ஷான் மார்ஷுடன் நல்ல கூட்டணி அமைத்தோம், ஆனால் நூறு எடுத்தவுடன் ஆட்டமிழந்தது ஏமாற்றமளிக்கிறது.

140-150 ரன்களை எடுத்து அவர்கள் மீது கொஞ்சம் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். மிடில் ஓவர்களில் இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம் கடைசி 12-13 ஓவர்களில் சொதப்பினோம், 330-340 ரன்களை எடுக்காததற்கு முழு பொறுப்பும் என்னுடையதே.

ஜோ ரூட் பவுலிங்குக்கு எதிராக இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆடியிருக்கலாம். அவர் ரவுண்ட் த விக்கெட்டில் பந்தை பேட்ஸ்மெனை குறுக்காகக் கடந்து செல்லுமாறு வீசினார், எனவே ஸ்வீப் செய்வது உயர்ந்தபட்ச ரிஸ்க் ஆகும். அவர் நன்றாகவே வீசினார். நானும் சில நேரங்களில் டைமிங் கிடைக்காமல் திணறினேன்.

எது எப்படியிருந்தாலும் இங்கிலாந்து பேட் செய்வதைப் பார்க்கும்போதும் எங்கள் இளம் பவுலர்களுக்கு அவர்கள் சிம்ம சொப்பனமாகத் திகழ்வதைப் பார்க்கும்போதும் உலகின் சிறந்த அணிக்கு எதிராக ஆடுகிறோம் என்று தெரிகிறது, இங்கிலாந்துக்கு எதிராக ஒளிந்து கொள்ள இடமில்லை என்று உணர்கிறேன். எங்கள் பவுலர்கள் வைடாகவும் ஃபுல் லெந்த்களிலும் வீசுகின்றனர். நல்ல பந்துகளை நல்ல ஷாட்களை அவர்களை ஆடவைப்பதில்லை.

ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து தற்பொது நிர்ணயித்து வரும் அளவுகோல் எதிர்காலத்துக்கான அளவுகோலாகும். நம்பர் 1 அணி போல் ஆடுகின்றனர். பேட்டிங்கில் கடைசி வரை ஆடுகின்றனர்.

இவர்களை வீழ்த்துவதற்கான ஃபார்முலாவைக் கண்டுபிடித்து விட்டால் நாங்களும் வெற்றி வழிக்குத் திரும்புவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x