Published : 22 Jun 2018 09:32 AM
Last Updated : 22 Jun 2018 09:32 AM

சவாலின்றி சரணடைந்த அர்ஜெண்டினா; வெளியேறும் அபாயம்: அபாரமாக ஆடிய குரேஷியாவிடம் படுதோல்வி- சாமானிய வீரராக ஆடிய மெஸ்ஸி

உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் நேற்றைய கடைசி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி குரேஷியாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது. இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு நெருக்கடிக்குள்ளாகியுள்ளது, குரேஷியா அணி இறுதி 16 அணிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இடைவேளை வரை இரு அணிகளு 0-0 என்று இருந்தன, இரு அணிகளுக்குமே கோல் அடிக்கும் வாய்ப்பு இருந்தது, மெஸ்ஸி ஒன்றுமே செய்யவில்லை.

இடைவேளைக்குப் பிறகு ஆன்ட்டே ரெபிக் 53வது நிமிடத்திலும் லுகா மோட்ரிக் 80வது நிமிடத்திலும் கடைசியில் இவான் ராகிடிக் 90 நிமிடங்கள் 46 விநாடியிலும் 3 கோல்கள் திணித்து அதிர்ச்சியளித்தது.

பயிற்சியாளர் ஜோர்ஹே சாம்போலி தோல்வியில் சாய்ந்தார், லியோனல் மெஸ்ஸி தரையையே உற்றுப் பார்த்தபடி என்ன நடந்தது என்பதை யோசித்துக் கொண்டிருந்தார். மாறாக குரேஷியாவின் கொண்டாட்டம் வெடித்துக் கிளம்பியது. லூகா மோட்ரிக் உலகக்கோப்பையின் சிறந்த கோல் போட்டிக்குத் தேர்வாகும் கோலை அடித்தார்.

உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றதே கடவுள் புண்ணியம் என்று தகுதி பெற்ற அர்ஜெண்டினா அணியின் பலவீனம் முழுதும் நேற்று அம்பலமானது. மெஸ்ஸி ஒன்றுமே செய்யவில்லை, பல நேரங்களில் தன்னைச் சுற்றி நடக்கும் கால்பந்தாட்டத்தின் பார்வையாளராக இருந்தார். சரணடைந்தது அர்ஜெண்டினா, நடுக்களத்தில் பந்தைக் கடந்து ஓடியது, முன்னே செல்லும் போது கூட இலக்கில்லாமல் சென்றது.

 

1958 உலகக்கோப்பையில் குரூப் பிரிவு ஆட்டத்தில் செக்கோஸ்லாவாகியாவுக்கு எதிராக 6-1 என்று தோற்ற பிறகு இதுதான் குரூப் பிரிவு ஆட்டத்தில் உலகக்கோப்பையில் அர்ஜெண்டினாவின் பெரிய தோல்வி. மேலும் 44 ஆண்டுகளில் உலகக்கோப்பையில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெறத் தவறியுள்ளது. அர்ஜெண்டினா களத்தில் ஓடியதைவிட எல்லைக்கோட்டுக்கு அருகே மேலும் கீழும் முன்னும் பின்னும் அர்ஜெண்டினா பயிற்சியாளர் சாம்போலி அதிகம் ஓடியிருப்பார் போலிருக்கிறது.

ஆட்டம் தொடங்கி 2வது நிமிடத்திலேயே ஒரு அரை வாய்ப்பு கிடைத்தது, ஓட்டாமெண்டி வலது புறம் பாஸ் செய்தார் ஆனால் சால்வியோ அதனை கோலுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.

5வது நிமிடத்தில் குரேஷியா ஒரு அச்சுறுத்தலை மேற்கொண்டது இடது புறம் குரேஷிய வீரர் பெரிசிச் பந்தை வேகமாகக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது, அர்ஜெண்டினா கோல் எல்லைக்குள் புகுந்தார், கோலின் வலது புற ஓரத்தைக் குறிவைத்து ஷாட் ஆடினார், ஆனால் கபரெல்லோ அருமையாக அதனைத் தட்டி விட குரேஷியாவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. மோட்ரிக் எடுத்த கார்னர் ஒரு விளைவையும் ஏற்படுத்தவில்லை. குரேஷியா மிகவும் கூர்மையாக ஆடினர். அர்ஜெண்டினா கஷ்டப்பட்டது.

13வது நிமிடத்தில் மேஸா வலது புறம் வேகமாக எடுத்துச் சென்றார் பிறகு சால்வியோவுக்கு பாஸ் செய்தார், பெனால்டி ஸ்பாட்டிலிருந்து சால்வியோ அடித்த ஷாட்டை லவ்ரென் கோல் போஸ்டுக்கு மேல் தள்ளிவிட்டார், கார்னர் வாய்ப்பு பெற்ற அர்ஜெண்டினா அதனை விரயம் செய்தது.

நிறைய முறை அர்ஜெண்டினா பந்தை தங்கள் வசம் வைத்திருந்தாலும் குரேஷியா அவர்கள் வேகமாக நகர இடமளிக்கவில்லை, இதனால் பல வேளைகளில் ஆட்டத்திலிருந்தே பந்தை வெளியேற்றும் நிலைக்கு அர்ஜெண்டினா தள்ளப்பட்டது.

19வது நிமிடத்தில் ஒரு சிறு சர்ச்சை. அர்ஜெண்டினா வீரர் பெரேஸை குரேஷிய வீரர் புரோசோவிக் கீழே தள்ளினார் ஃப்ரீ கிக் கொடுக்கப்படவில்லை, மாறாக மஸ்சாரானோ குரேஷிய வீரர் மோட்ரிக்கை கீழே தள்ளிய போது நடுவர் அர்ஜெண்டினாவை தண்டித்தார், அர்ஜெண்டினா வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து நடுவரைச் சூழ்ந்தனர், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. 20வது நிமிடத்தில் டாக்லியாஃபிகோ பந்தை தன் காலிலிருந்து பறிகொடுத்திருப்பார், ஆனால் நடுவர் ஃப்ரீ கிக் ஏன் கொடுத்தார் என்று பார்த்தால் குரேஷிய வீரர் மாண்டுஸிக்குடன் சிறு உரசல். ஆனால் இந்த ஃப்ரீகிக் அர்ஜெண்டினாவின் அதிர்ஷ்டம். ஏனெனில் ஃப்ரீ கிக் கொடுக்கவில்லையெனில் மோட்ரிக் பந்தை எடுத்து சென்றிருந்தால் அர்ஜெண்டினா கோல் கீப்பர் கபரெல்லோவுடன் ஒத்தைக்கு ஒத்தை நிலைமை ஏற்பட்டிருக்கும்.

26வது நிமிடத்தில் அகுயெரோ இடது புறம் ஆக்ரோஷம் காட்டி பந்தை எடுத்துச் சென்றார் ஆனால் ஸ்ட்ரைனிக் பந்தை தலையால் முட்டி வெளியே தள்ள கார்னர் வாய்ப்பு கிடைத்தது அர்ஜெண்டினாவுக்கு. கார்னர் வாய்ப்பை மேஸா பக்கவாட்டு வலையில் அடித்து விரயம் செய்தார். அர்ஜெண்டினா அபாயகரமாகத் திகழ்ந்த ஒரே கணம் அதுவும் கோலாகமல் வெஸ்ட் ஆனது. இதே போல் 30வது நிமிடத்தில் பந்து குரேஷியா கோல் எல்லைக்குள் வர லவ்ரென் கீழே விழுந்தார், இதனையடுத்து அர்ஜெண்டினாவின் சால்வியோ பந்தை அவரிடமிருந்து எடுத்தார், பாக்ஸில் அவருக்கு கோல் அடிக்கும் வாய்ப்புதான், ஆனால் கோணம் சரியாக இல்லை. அதனால் பந்தை பெரேஸுக்கு அனுப்பினார். அங்கு கோலில் கோல் கீப்பர் இல்லை, அருமையான வாய்ப்பு. ஆனால் பந்தை வைடாக அடித்தார், மற்றொரு வாய்ப்பு விரயம்.

32வது நிமிடத்தில் குரேஷியா ஒரு தாக்குதலை தொடுக்க வ்ரசாலிகோ மிக அருமையாக பந்தை வலது புறத்திலிருந்து அர்ஜெண்டினா கோல் பாக்ஸுக்குள் செலுத்த, அங்கு மேண்ட்சுகிக் கோல் அடிக்கும் நிலையில் வசதியாக இருந்தார், ஆனால் அவர் சுலபமாக தலையால் கோலுக்குள் அடிக்க வேண்டியதை இடது புறம் வெளியே அடித்தார், இன்னொரு வாய்ப்பை விரயம் செய்தது குரேஷியா. 42வது நிமிடத்திலும் வலது புறம் குரேஷிய வீரர் புரோசோவிக் ஒரு லாங் பாஸை ரெபிக்குக்கு அனுப்ப அவரால் பந்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, சால்வியோவுடன் மோதல் ஏற்பட்டது, சால்வியோ சாய்ந்தர். ஆனால் ரெபிக்குக்கு இடது புறம் நிறைய இடம் கிடைத்தது அவர் பந்தை எடுத்துச் செல்ல நினைத்த போது ரெஃப்ரீ புதிராக ஃப்ரீ கிக் கொடுத்தார். இடைவேளை வரை இரு அணிகளும் கோட்டை விட்ட வாய்ப்புகளுடன் 0-0.

53வது நிமிடம் திரும்பிய வாய்ப்பும் அர்ஜெண்டினா கீப்பரின் அபத்தப் பிழையும்:

மெஸ்ஸி வலது புறம் பந்தை எடுத்து டாக்லியாபிகோவுக்கு அளிக்க அவர் அகுயெரோவுக்கு பந்தைப் பாஸ் செய்ய இறுக்கமான நிலையிலிருந்து அவர் ஒரு கோல் முயற்சி மேற்கொள்ள குரேஷியா கோல் கீப்பர் சுபாசிச் பந்தை எளிதில் பிடித்து விட்டார், உடனடியாகவே குரேஷியா எதிர்த்தாக்குதல் தொடுத்தது.

பந்து அர்ஜெண்டினா கோல் எல்லைக்குள் வர அர்ஜெண்டினா அணி வீரர் பந்தை மிகவும் சிம்ப்பிளாக கோல் கீப்பர் கப்ரெல்லோவுக்கு பிடித்துக் கொள் என்று தள்ளி விட்டார். கபரெல்லோவுக்கு அருகிலேயே குரேஷிய வீரர் ரெபிக் நிற்கிறார், பந்தைப் பிடித்து தூக்கி கோல் கிக் அடிப்பதை விட்டு மீண்டும் பந்தை அர்ஜெண்டினா வீரர் மெர்காடோவுக்கு வலது புறம் பாஸ் செய்கிறேன் பேர்வழி என்று கபரெல்லோ கடுமையாகச் சொதப்பலாக பந்தை தட்டி விட ஆஹா என்று திரும்பிய குரேஷிய வீரர் ரெபிக், புல்டாஸ் பந்தை வலது காலால் அர்ஜெண்டின கோலுக்குள் தூக்கி அடித்தார், படு அபத்தமான தவறிழைத்தார் கபரெல்லோ, குரேஷியாவுக்கு முதல் கோல் பரிசாக அளிக்கப்பட்டது. அன்று ஐஸ்லாந்துக்கு எதிராக நேராக வந்து பந்தை உதைத்து எல்லைக்குவெளியே அனுப்பாமல் அபாயகரமாக கையால் தடுக்கப்போய் அது கையிலிருந்து நழுவிச் சென்றது, நேற்று ஒரு சிம்பிள் பேக் பாஸை பிடிக்க முடியாமல் தானும் பாஸ் செய்கிறேன் பேர்வழி என்று சொதப்பலாக ஒரு ஆட்டத்தை ஆடி ரெபிக்கிற்கு பந்தை பரிசாக அளித்து கோல் பரிசு அளித்தது அர்ஜெண்டினா. ஒட்டுமொத்த ஸ்டேடியத்தின் அர்ஜெண்டினா ரசிகர்கள் நம்ப முடியாமல் திகைத்தனர்.

 

57வது நிமிடத்தில் கோல் அடித்த ரெபிக் காயம் காரணமாக உள்ளே சென்றார், 63வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவுக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது. இடது புறம் பெரெஸ், ஹிகுவெய்ன், மீஸா கூட்டணி அமைக்க 6 அடியிலிருந்து மீஸாவுக்கு கோல் வாய்ப்பு அவர் பக்கவாட்டு பாத உதையை கோல் கீப்பர் சுபாசிக் கையால் தள்ள அது கோலாக மாறியிருக்கும் ஆனால் அதற்குள் ராகிட்டிக் பந்தை வெளியே அனுப்ப கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னர் ஷாட்டை ஓட்டமெண்டி வாங்கி கோல் போஸ்ட்டுக்கு மேல் அடித்தார்.

80வது நிமிடத்தில் ராக்கிடிக், கிரமாரிக் இடது புறம் கூட்டணி அமைத்து வேகம் காட்ட பாக்ஸின் ஓரத்திலிருந்து ராக்கிடிக் ஷாட்டை அடிக்க டாக்லியாஃபிகோ அருமையாகத் தடுத்தார். ஆனால் மீண்டும் குரேஷியத் தாக்குதல் நடத்த 25 அடியில் மோட்ரிக் அர்ஜெண்டின வீரரிடமிருந்து பந்தப் பெற்று வலது புறம் லேசாக பந்தைத் தூக்கி விட்டார், இதன் மூலம் ஓட்டமெண்டியைக் குழப்பி விட்டு, வலது புறத்திலிருந்து வலது மூலைக்கு ஒரு மிகப்பெரிய ஷாட்டை அடித்து கோலாக மாற்றினார் மோட்ரிக். 25 அடி தூரத்திலிருந்து கோலாக மாற்றிய அதிரடி ஷாட், திகைப்பூட்டும் கோல்.மெஸ்ஸி தலை தாழ்ந்தது. குரேஷியா 2-0.

85வது நிமிடத்தில் வெறுப்பில் ஒரு சர்ச்சை,  உத்வேகம் பெற்ற ராக்கிட்டிக்கின் 3வது கோல்

மஸ்செரானோ, குரேஷிய வீரர் ராக்கிடிக்கை கீழே விழச்செய்தார், இது ஃபவுல்தான், படுத்துக் கிடந்த ராக்கிடிக்கின் தலையில் பந்தை ஓட்டாமெண்டி உதைத்தது கீழ்த்தரமான செயல், இதற்காக அவர் தண்டிக்கப்பட்டார். இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் வாய்ப்பாக இது மாறியது. தகராறானது. ஆனால் விரைவில் பொங்கிய உணர்ச்சிகளுடன் ஆட்டம் தொடங்கியது.

இந்த கீழ்த்தரமான செயல் ராக்கிட்டிக்கை உசுப்பேற்ற மேற்கூறிய சம்பவத்தினால் விளைந்த ஃப்ரீகிக்கை வீரர்கள் சுவரைத் தாண்டி கோலின் இடது மேல் மூலைக்கு அனுப்ப முயற்சித்தார், ஆனால் பந்து கிராஸ்பாரில் பட்டு வெளியே சென்றது, கோல் கீப்பர் கபரெல்லோ ஒன்றுமே செய்ய முடியாமல் வாளாவிருந்தார்.

ஆட்டம் முடியும் தறுவாயில் காய நேரத்தில் ராக்கிட்டிக் நடுக்களத்தில் ஆக்ரோஷமும் வேகமும் காட்டி ஷாட்டை அடிக்க அர்ஜெண்டின கோல் கீப்பர் கபரெல்லோ அபாராமாகத் தடுத்தார். ஆனால் அவர் கையில் பட்டு பந்து கொவாசிச்சிடம் வர அவர் அதை ராக்கிடிக்கிற்கு பாஸ் செய்தார். ராக்கிடிக் இடது மூலையில் பந்தை கோலுக்குள் திணித்தார் 3-0 வெற்றி, இறுதி 16 சுற்றுக்கு உறுதியானது குரேஷியா.

அர்ஜெண்டினா குரூப் பிரிவுப் போட்டிகளுடன் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இன்னொரு போட்டி நைஜீரியாவுடன் உள்ளது, அது அபாயகரமான அணியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x