Published : 22 Jun 2018 07:51 AM
Last Updated : 22 Jun 2018 07:51 AM

கோஸ்டா ரிகாவுடன் இன்று மோதல்: மாற்றம் தருவாரா நெய்மர்?

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில் - கோஸ்டா ரிகா அணிகள் மோதுகின்றன. முதல் ஆட்டத்தை டிரா செய்திருந்த பிரேசில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் அணி தனது முதல் லீக் ஆட்டத்தை சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்திருந்தது. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மரை, எதிரணி வீரர்கள் சுமார் 10 முறை பவுல் செய்தனர். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகாலத்தில் உலகக் கோப்பை தொடரில் ஒரு ஆட்டத்தில் தனிப்பட்ட வீரர் ஒருவர் எதிரணியினரால் அதிக முறை பவுல் செய்யப்பட்டது இதுதான் முதன்முறை என்ற மோசமான சாதனை நிகழ்த்தப்பட்டது.

ஏற்கெனவே காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள நெய்மர், சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் காலில் அடிபட்டு சில நிமிடங்கள் நொண்ட ஆரம்பித்தார். எனினும் ஒரு வழியாக சமாளித்து ஆட்டம் முழுவதும் களத்தில் இருந்தார். இந்நிலையில் பிரேசில் அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று கோஸ்டா ரிகாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்துக்கான பயிற்சியை கடந்த செவ்வாய்கிழமையன்று பிரேசில் அணி தொடங்கியது. ஆனால் அன்றைய தினம் காலில் வலி ஏற்பட்டதால் நெய்மர் பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பயிற்சியில் நெய்மர் பங்கேற்றார். முழு உடல் தகுதியுடன் உள்ள அவர் இன்று களம் இறங்குவார் என பயிற்சியாளர் டைட் நேற்று உறுதிபடுத்தினார். சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மர், இறுதி கட்டத்தின் போது சிறப்பாக செயல்படத் தவறினார். மேலும் அவரை அதிக முறை பவுல் செய்து சுவிட்சர்லாந்து வீரர்கள் ஆட்டம் முழுவதும் கட்டுக்குள் வைத்திருந்தனர். அந்தத் தடுப்பு அரண்களை லாவகமாக உடைத்து அணிக்கு வெற்றி தேடித்தரும் வழிகளை நெய்மர் கண்டறியத் தவறினார்.

மேலும் சுவிட்சர்லாந்து அணி கோல் அடித்த விதமும் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்தது. அந்த அணியின் வீரர் ஸ்டீவன் ஸூபர், பிரேசில் வீரர் மிராண்டாவை கைகளால் தள்ளிவிட்டபடி கோல் அடித்திருந்தார். இதனால் இந்த கோலுக்கு பிரேசில் அணி ஆட்சேபம் தெரிவித்த போதிலும் ரெப்ரீ, விஏஆர் தொழில்நுட்பத்தின் உதவியை நாட மறுத்தார். இதுவும் ஆட்டம் டிராவில் முடிவடைய முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

எப்படி இருப்பினும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். மாறாக தோல்வி அடைந்தாலோ அல்லது டிரா செய்தாலோ அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கடினமானதாகிவிடும். இதனால் நெய்மரை உள்ளடக்கிய பிரேசில் அணி கவனமாக விளையாடக்கூடும். அந்த அணியின் வீரரான பிலிப் கோடின்ஹோ கூறும்போது, “உலகின் சிறந்த வீரர்களில் நெய்மரும் ஒருவர். அவர், எங்கள் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம். எப்போதுமே அவர், கோல் அடிப்பதற்கான இடைவெளியை சிறப்பாக கண்டறியக்கூடியவர்” என்றார்.

பிரேசில் - கோஸ்டா ரிகா அணிகள் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 1960-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் மட்டுமே பிரேசில் அணியை கோஸ்டா ரிகா வீழ்த்தியுள்ளது. இம்முறை ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் கோஸ்டா ரிகா தனது முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவிடம் தோல்வி அடைந்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டம் அந்த அணிக்கும் முக்கியத்தும் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x